Published : 31 May 2019 01:14 PM
Last Updated : 31 May 2019 01:14 PM

ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகும் ‘தளபதி 64’?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தளபதி 64’ படம், ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வருகின்ற தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ‘தளபதி 64’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். ‘மாநகரம்’ மற்றும் ‘கைதி’ படங்களை இயக்கியவர் இவர். இதுவரை விஜய் நடித்த படங்களிலேயே இந்தப் படம் வித்தியாசமாக அமையும் என்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பதாகவும் தகவல் வெளியானது.

பிவி கம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் படத்துக்காக 120 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் விஜய்.

லோகேஷ் கனகராஜின் பழைய பேட்டியை வைத்து, இந்தப் படம் ஃபேண்டஸி த்ரில்லராக இருக்கும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாகத் தகவல் பரவியது. ஆனால், இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லராக இருக்கும் என்றும், அதேசமயம் மற்ற நடிகர்களில் இருந்து வித்தியாசமாக விஜய்யின் கதாபாத்திரம் இருக்கும் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x