Published : 27 May 2019 02:41 PM
Last Updated : 27 May 2019 02:41 PM

ஜூனியர் என்.டி.ஆர் வராமல் போனால் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போகும்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ அதிரடிப் பேச்சு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட மொத்தமாகவே ஓரம்கட்டிவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 174 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களில் அபார வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் கட்சி 23  இடங்களில் மட்டுமே வென்றது.

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 23 தொகுதிகளைக் கைப்பற்றியது. தெலுங்கு தேசம் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் குடிவாடா என்ற தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கோடலி நானி என்பவர், தெலுங்கு தேசம் கட்சியின் தேவினேனி அவினாஷ் என்பவரைத் தோற்கடித்துள்ளார். ஆனால் இவரது வெற்றியை விட, சமீபத்தில் இவர் பேசிய பேச்சு ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"பாஜக இந்தியா முழுவதும் அதன் இருப்பை நிறுவ முயற்சித்து வருகிறது. இப்போது எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் எதிர்க்கட்சி நிலையில் தன்னைப் பொருத்திக்கொள்ள பாஜக முயற்சிக்கும். ஏனென்றால் அவர்களின் அடுத்த இலக்கு ஆந்திரம்தான். சந்திரபாபு நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் வலிமையை 23 தொகுதிகளாகக் குறைத்துவிட்டார். இன்னும் இரண்டு வருடங்கள் இப்படியே காத்திருந்தால், மொத்த கட்சியுமே காணாமல் போகும்.

ஜூனியர் என்.டி.ஆரோ அல்லது அந்தக் குடும்பத்தில் வேறு யாராவதோ முன்வந்து கட்சி அதிகாரத்தைக் கையில் எடுக்காமல் போனால் பின்னால் வருத்தப் படவேண்டியிருக்கும். ஜூனியர் என்.டி.ஆர் தற்போது நன்றாகப் போய்க்கொண்டிருக்கும் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வரலாம். இன்னும் சில வருடங்கள் கழித்து அரசியலுக்கு வருவதைப் பற்றி யோசித்து வரலாம். ஆனால் அவர் முடிவெடுப்பதற்கான நேரம் இது. இல்லையென்றால் நாயுடு மற்றும் அவரது மகன் லோகேஷின் கைகளில் தெலுங்கு தேசம் கட்சி அழிந்து போகும்" என்று கோடலி நானி பேசியுள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆரும் நானியும் 15 வருடங்களுக்கு மேலாக நெருங்கிய நண்பர்கள். நானி, 2004-ம் வருடம், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க, 'சாம்பா' என்ற படத்தைத் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x