Last Updated : 09 May, 2019 08:01 PM

 

Published : 09 May 2019 08:01 PM
Last Updated : 09 May 2019 08:01 PM

முடிவுக்கு வந்தது சர்ச்சை: சூப்பர் 30 வெளியீட்டை தள்ளி வைத்தார் ஹ்ரித்திக் ரோஷன்

'சூப்பர் 30' மற்றும் 'மெண்டல் ஹே கியா' ஆகிய படங்களின் வெளியீட்டு சர்ச்சையை, தனது அறிக்கையின் மூலம் முடிவு கொண்டு வந்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

கங்கணா ரணவத்துக்கு, ஹ்ரித்திக் ரோஷனுக்கும் தொடங்கியுள்ள பிரச்சினை இன்னும் முடியவில்லை. இந்த சமயத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்துள்ள 'சூப்பர் 30' படமும், கங்கணா ரணவத் நடித்துள்ள 'மெண்டல் ஹே கியா' திரைப்படமும் ஜூலை 26-தேதி வெளியாகும் சூழல் வந்தது.

இதனை பலரும் கிண்டல் செய்ய தொடங்க, ஹ்ரித்திக் ரோஷனை கடுமையாக சாடினார் கங்கணாவின் சகோதரி ரங்கோலி. இதனால் மீண்டும் சர்ச்சை உருவானது. ஆனால், 'மெண்டல் ஹே கியா' தயாரிப்பாளரான ஏக்தா கபூர், “இது முழுக்க முழுக்க வியாபார ரீதியான முடிவு. வேறெந்தக் காரணமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தச் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இன்னொரு ஊடக கூத்தினால் எனது திரைப்படம் நாசமாவதை அனுமதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில், இது தரப்போகும் தனிப்பட்ட மன உளைச்சல் மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து என்னை காப்பாற்றிக் கொள்ளவும், எனது 'சூப்பர் 30' படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்துள்ளேன்.

படம் தயாராக இருந்தாலும் எனது தயாரிப்பாளர்களிடம் அடுத்த சரியான வெளியீட்டு தேதியை அறிவிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளேன்.கடந்த சில வருடங்களாகவே, பொதுவெளியில் என் மீதான ஒரு அப்பட்டமான துன்புறத்தலை பலரும் உற்சாகப்படுத்தி வரவேற்பதை அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறேன்.

இப்போதும் நான் பொறுமையுடனும் அமைதியுடனும் காத்திருக்க வேண்டும். இத்தகைய விஷயங்கள் மீது சமூகம் தனது ஒட்டுமொத்த கவனத்தை திருப்பி சமூகத்தின் நாகரீகம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காக்கவேண்டும். இந்த முடிவில்லாத ஆதரவற்ற நிலைக்கு முடிவு வேண்டும்.

இவ்வாறு ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x