Last Updated : 14 Apr, 2019 03:39 PM

 

Published : 14 Apr 2019 03:39 PM
Last Updated : 14 Apr 2019 03:39 PM

தற்கொலை பண்ணிக்கலாம்னு இருந்தப்பதான் ‘பிள்ளைநிலா’ வாய்ப்பு வந்துச்சு’’ - மனோபாலா ஃப்ளாஷ்பேக்

'பிள்ளைநிலா’ ரிலீசாகி 34 வருடங்கள் இன்றுடன்!

‘’தற்கொலை செய்துகொள்ளலாம் என்கிற முடிவில் இருந்த போது, ‘பிள்ளைநிலா’ படத்தை இயக்க வாய்ப்பு வந்தது’’ என்று இயக்குநர் மனோபாலா தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இயக்குநர் மனோபாலாவின் முதல் படம் ‘ஆகாயகங்கை’. கார்த்திக், சுஹாசினி ஆகியோர் நடித்திருந்தனர். பெருமளவில் வெற்றியைப் பெறவில்லை இந்தப் படம்.

இதையடுத்து இயக்குநர் மனோபாலா ‘பிள்ளைநிலா’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அது மட்டுமின்றி, இன்றைக்கு வரை மனோபாலாவின் திரைப்பயணத்துக்கு, கியர் போடத் தொடங்கியது இங்கிருந்ததுதான்! ‘பிள்ளைநிலாவின்’ வெளிச்சம், பெளர்ணமிப் பிரகாசத்துடன் ஒளிவீசச் செய்தது மனோபாலாவை!

கலைமணி தயாரிப்பில், மோகன், ராதிகா, நளினி ஆகியோர் நடித்து மனோபாலா இயக்கிய இந்தப் படம், 1985ம் ஆண்டில் இந்தநாளில்தான் வந்தது. கிட்டத்தட்ட, 34 வருடங்களாகிவிட்டன. இந்தப் படமும் பாப்புலர். மனோபாலாவும் மக்கள் மனதில் இன்றைக்கும் இருக்கிறார். நடிகராகவும் வலம் வந்துகொண்டிருக்கிறார்.

‘பிள்ளைநிலா’ பட அனுபவங்களை மனோபாலாவிடம் கேட்டோம். அவர் பகிர்ந்துகொண்டவை இதோ...

‘’எனக்கு ‘ஆகாயகங்கை’தான் முதல்படம். ஆனா அந்தப் படம் சரியாப் போகலை. அடுத்த படம் கிடைக்காம, ரெண்டு வருஷம் சும்மாவே சுத்திட்டிருந்தேன். அது கொடுமையான காலம். இத்தனைக்கும் வீட்ல நல்ல வசதிதான். மிராசுக்குடும்பம்தான். ஆனாலும் ஒரு வைராக்கியம். வீட்ல பணம் வாங்காமத்தான் அத்தனை கஷ்டத்தையும் அனுபவிச்சிட்டிருந்தேன்.

அந்தச் சமயத்துலதான், ’திருச்சில வெக்காளி அம்மன் கோயிலுக்குப் போய், உன் பிரார்த்தனையை சீட்டு எழுதி, அங்கே இருக்கிற சூலத்துல கட்டி வேண்டிக்கோ’ அப்படின்னு சொன்னாங்க. திருச்சி ரயில்வே ஸ்டேஷன்லேருந்து உறையூர்ல இருக்கிற கோயிலுக்கு நடந்தேபோனேன். அம்மன்கிட்ட முறையிட்டேன். என் பிரார்த்தனையை எழுதி, சூலத்துல கட்டினேன். ‘நீதாம்மா நல்லது நடக்க துணை செய்யணும்’னு மனதார வேண்டிக்கிட்டேன்.

ஆனாலும் தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப்போயிடலாம்னு அடிக்கடி நினைப்பு வந்துக்கிட்டே இருந்துச்சு. திருச்சிலேருந்து சென்னை வந்தப்ப, எங்கிட்ட ஒண்ணேகால் ரூபா இருந்துச்சு. பாண்டிபஜார்ல கையேந்திபவன் ஹோட்டல்ல ஒரு தோசை ஒரு ரூபா. நாலணாவை பாக்கெட்ல வைச்சிட்டு, ஒரு தோசையை வாங்கி அதுல நிறைய்ய்ய்ய சாம்பாரை ஊத்திச் சாப்பிட்டேன். அப்போ... ‘டைரக்டரே...’னு ஒரு குரல். ரெண்டுவருஷத்துக்கு முன்னாடி, ஓடாத படத்தை எடுத்த நம்மளை யாருடா டைரக்டர்னு கூப்புடுறாங்கன்னு திரும்பிப் பாத்தேன். கலைமணி அண்ணன்.

’இன்னும் சாப்பிடுய்யா’னு சொல்லி டிபன் வாங்கிக் கொடுத்தாரு. ‘நான் படம் தயாரிக்கிறேன். நீதான் டைரக்ட் பண்றே. எல்லாம் அப்புறமா பேசிக்கலாம். இப்போதைக்கு இதை வைச்சுக்கோ’னு என் பாக்கெட்ல அம்பது ரூபாயைத் திணிச்சிட்டுப் போனாரு. அன்னிக்கி அவர் கூப்பிடலேன்னா, அந்தப் பட வாய்ப்பு வராம போயிருந்தா... நான் என்னிக்கோ தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பேன். அந்தப் படம்தான் ‘பிள்ளைநிலா’...’’ என்று அமைதியானார் மனோபாலா.

அவரே தொடர்ந்தார்.

’’மோகன் மறக்கமுடியாத மனிதர். இன்னும் சொல்லணும்னா, எனக்கு தெய்வம் மாதிரி. நானும் ஸ்டில்ஸ் ரவியும் மோகனைக் கூட்டிக்கிட்டு, ‘பாலுமகேந்திராவோட ‘கோகிலா’ படத்துல நடிச்சிருக்கார். வாய்ப்பு கொடுங்க’னு மோகனுக்காக, கம்பெனிகம்பெனியா ஏறி இறங்கியிருக்கோம். அதை மறக்காத மோகன், ‘மனோபாலாவை வைச்சு யார் படம் பண்ணினாலும் அந்தக் கம்பெனிக்கு உடனே கால்ஷீட் தரேன்’னு சொன்னார் மோகன். அப்படியே கொடுக்கவும் செஞ்சார்.

அதேபோல, ராதிகா. என்னை கன்னாபின்னானு திட்டக்கூடிய உரிமையும் அன்பும் கொண்ட மனுஷி. எந்த ஜென்மத்துலயோ நானும் ராதிகாவும் அண்ணன், தங்கச்சியா பொறந்திருக்கோம்னுதான் நினைக்கிறேன். எம் மேல அப்படியொரு பிரியம். ‘பிள்ளைநிலா’ படத்துல மோகனும் ராதிகாவும் அப்படியொரு ஒத்துழைப்பைக் கொடுத்தாங்க. நளினி, அந்த சமயத்துல, ஒருநாளைக்கு நாலு படம் ஒர்க் பண்ணிட்டிருந்தாங்க. ஆனா, எனக்காக வந்து நடிச்சுக் கொடுத்தாங்க. அதேபோல், சத்யராஜ் ரொம்ப பரபரப்பா கிடுகிடுன்னு போயிகிட்டிருக்கார். ஆனா எனக்காக நைட்ல வந்து நடிச்சுக் கொடுத்தார்.

எல்லாத்துக்கும் மேல இளையராஜா சார். ‘மனோ... என்னய்யா... முத படத்துல விட்டத்தையெல்லாம் இதுல எப்படியாவது புடிச்சிரு. என்ன வேணும்னு சொல்லு. அப்படிப் பண்ணிடலாம்’னு சொன்னார்.

இப்படி எல்லாரும் சேர்ந்து, நல்ல மனசோட ஒர்க் பண்ணின படம்தான் ‘பிள்ளைநிலா’. இன்னொரு விஷயம்... இன்னிக்கி வாரம் தவறாம பேய்ப்படம் வந்துக்கிட்டிருக்கு. இதை எண்பதுகள்ல ஆரம்பிச்சு வைச்சது நானாத்தான் இருப்பேன். தவிர, பேபிஷாலினியை இந்தப் படத்துல கூட்டிக்கிட்டு முதன்முதல்ல நடிக்கவைச்சேன். ஆனா, கே.பாலாஜி சாரோட ‘ஓசை’ படம் முன்னாடியே வந்துருச்சு. ஷாலினி அஜித், எனக்கு மகள் மாதிரி!’’ என்று சொல்லி நெகிழ்கிறார் மனோபாலா.

‘’படத்தோட பாடல்களும் சரி, பின்னணி இசையும் சரி... பெரிய அளவுல பேசப்பட்டுச்சு. ரூம்ல மேலே பொருட்களெல்லாம் மேலே சுத்தும். எல்லாரும் ஆச்சரியமா தியேட்டர்ல பாத்தாங்க. பெரிய மண்டை இருக்கிற ஃபேன்ல, சின்ன கயிறுல பொருட்களையெல்லாம் கட்டி, ஒண்ணுல ஃபேனை ஓடவிட்டு ஷூட் பண்ணினோம். அதுவே அப்படி மிரட்டியிருந்துச்சு.

படம் ரிலீசானதும் தியேட்டர்தியேட்டராப் போய் பாக்கறேன். ‘யாருடா அவன் டைரக்டரு. கொன்னுட்டான் போ’னு ஆடியன்ஸ் சத்தமா பேசிக்கிறாங்க. சந்தோஷத்துக்கு அளவே இல்ல. இந்தப் படம் வந்தப்ப கமலோட ‘காக்கிசட்டை’ வந்துச்சு. ரஜினியோட ‘நான் சிகப்பு மனிதன்’ வந்துச்சு. கோவைத்தம்பியோட ‘உதயகீதம்’ வந்துச்சு. எல்லாப்படமும் ஓடுச்சு. ‘பிள்ளைநிலா’வும் சக்கைப்போடு போட்டுச்சு.

படம் ரிலீசான ஒருவாரத்துல, ஆளுயர மாலையை வாங்கிட்டு வந்து போட்டார். அந்த மாலையை என்னால தாங்கக்கூடமுடியல. ‘சிறப்பா பண்ணிட்டீங்க. டைரக்டருக்கெல்லாம் டைரக்டர் நீங்க’ன்னு சொன்ன அந்த டைரக்டர்... எஸ்.ஏ.சந்திரசேகரன் சார். அப்ப, எவ்ளோ ஹிட்டு கொடுத்த டைரக்டர் தெரியுமா அவரு?

‘டேய் மனோ... மிரட்டிட்டடா. ஒண்டர்ஃபுல்’னு எங்க டைரக்டர் பாரதிராஜா சார் சொன்னார். இதைவிட வேறென்ன வேணும் சொல்லுங்க?

‘பிள்ளைநிலா’ படத்தோட பிஜிஎம் அதாவது பின்னணி இசை, தனி ரிக்கார்டாவே வந்ததுதான் புது ரிக்கார்டு சாதனை. அதுக்கு முன்னயும் சரி, இப்பவரைக்கும் சரி... பிஜிஎம் தனியா ரிலீஸ் பண்ணினதே இல்ல.

படம் வந்து இன்னியோட 34 வருஷமாச்சு. போனவாரம் கூட, ‘பிள்ளைநிலா’ படத்தை ரீமேக் பண்ணுங்களேன். நல்லாருக்கும்’னு சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. கேட்டுக்கிட்டேதான் இருக்காங்க. பாப்போம்.

அன்னிக்கி, பாண்டிபஜார்ல பாக்கெட்ல அம்பது ரூபாயை திணிச்சாரே கலைமணி அண்ணன். அந்த அம்பது ரூபாயை இன்னும் பத்திரமா வைச்சிருக்கேன். அப்பப்ப, அதை எடுத்துப் பாத்துக்குவேன்.

இந்தப் படம் வாய்ப்பு வர்றதுக்கு முன்னால தற்கொலை செஞ்சுக்கலாம்னு நினைச்ச மனோபாலாவை, இப்ப இருக்கிற மனோபாலா நினைச்சுப் பாக்கறேன். கலைமணி அண்ணன், மோகன், ராதிகா, நளினி, சத்யராஜ், இளையராஜா சார்... எல்லாதுக்கும் மேல அந்த உறையூர்  வெக்காளி அம்மன். எல்லாருக்கும் நன்றி. இந்த உணர்வோடயேதான் வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.

‘பிள்ளைநிலா’ அனுபவங்களை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக பகிர்ந்து கொண்டார் மனோபாலா.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x