Last Updated : 02 Apr, 2019 10:38 AM

 

Published : 02 Apr 2019 10:38 AM
Last Updated : 02 Apr 2019 10:38 AM

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன்: இயக்குநர் வசந்தபாலன் புகழாஞ்சலி

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன் என்று இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட தமிழ்த் திரையுலகில் மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மகேந்திரன் மறைவு குறித்து இயக்குநர் வசந்தபாலன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது:

சமரசமில்லாத கலைஞன் இயக்குநர் மகேந்திரன். தன் படைப்புகள் மட்டும் பேசப்பட்டால் போதும் என்று ஆர்ப்பாட்டமில்லாமல் சுயபெருமை பேசாமல், அவர் படங்களில் காணக்கிடைக்கும் அமைதியைப் போல வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். அவரிடம் இருக்கும் நிதானம், அர்த்தமிக்க அமைதி, முதிர்ச்சி அவரது படங்களில் பிரதிபலிக்கும். அவர் இழுத்துச் சென்ற தேர் அதே இடத்தில் அதன் தரிசனம் குறையாமல் ஒளிவீசிய வண்ணம் இருக்கிறது.

தங்கப்பதக்கம் திரைப்படம் அதன் வசனத்திற்காகவும் உரத்த கதைகூறலுக்காகவும் நினைவு கூறப்பட்ட திரைப்படம்.அந்த திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய மகேந்திரனின் திறமையைப் பாராட்டி அவருக்கு திரைப்படம் இயக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.மிகக் குறைவான வசனங்கள் உள்ள, திரைமொழிக்கு முக்கியத்துவமுள்ள முள்ளும் மலரும் திரைப்படத்தை இயக்குகிறார்.அங்குதான் அவரின் கலைத்தன்மை மேலெழுந்து நிற்கிறது.

இன்றும் அவர் படங்கள் அதன் ஸ்திரத்தன்மையை இழக்காமல் காலத்தை எதிர்த்து நிற்கின்றன.காளி என்கிற கதாபாத்திரம் நடிகர் ரஜினி அவர்களை பேட்ட வரை பின் தொடர்கிறது என்றால் எத்தனை வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு. கதாசிரியராக, இயக்குநராக அவரின் படங்கள் காலம் மூர்க்கமாக வீசுகிற அலைகளுக்கு முன் துருவேறாமல் அப்படியே நிற்கின்றன.

ஒரு கலைஞனின் இடையறாத ஆசையும் கனவும் அதுதானே. தன் கனவு மெய்ப்பட்டதை கண்ட கலைஞன். நிறைவான பயணம். சென்று வாருங்கள் சார்

இவ்வாறு வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x