Published : 03 Apr 2019 12:33 pm

Updated : 03 Apr 2019 12:33 pm

 

Published : 03 Apr 2019 12:33 PM
Last Updated : 03 Apr 2019 12:33 PM

படங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன்: இயக்குநர் பாரதிராஜா

படங்கள் ஒவ்வொன்றையும் நாவல் போல் பதிவு செய்தவர் மகேந்திரன் என்று இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

'முள்ளும் மலரும்', 'ஜானி' உள்ளிட்ட மறக்க முடியாத படங்களைக் கொடுத்த இயக்குநர் மகேந்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 79. இவரது மறைவு, தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.


மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார் இயக்குநர் பாரதிராஜா. மகேந்திரனின் உடலைப் பார்த்து துக்கம் தாளாமல் கதறி அழுதார். பிறகு, பத்திரிகையாளர்களிடமும் மகேந்திரனின் வீட்டில் வைத்து பேச மறுத்துவிட்டார்.

நேற்றிரவு மகேந்திரனின் மறைவு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. அதில் அவர் கூறியிருப்பதாவது:

சம்பிரதாயங்களாக சடங்குகளாக சில அறிக்கைகள் விடுவது, சில இழப்புகளுக்கு பதில் சொல்வது என்பது வழக்கமான ஒன்று

சில இழப்புகள் இந்த பூமியில் ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று வார்த்தைகளில் சொல்லலாம். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சில உண்டு. இந்த நாட்டில் அரசியல், இலக்கியம் போன்ற துறைகளிலும் குறிப்பாக திரைப்படத்துறையில் சத்யாஜித்ரே, சாந்தாராம் இவர்களைப் போன்றவர்களை நாம் இழந்த பொழுது ஈடுசெய்யமுடியாத இழப்பு என்று கூறுகிறோம். அதே போல் இயக்குநர் ஸ்ரீதர், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் பாலுமகேந்திரா ஆகியோரைப் போல மகேந்திரனின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது.

நமது கலாச்சாரம், பண்பாடு, கலை ஆகியவற்றைக் கட்டிக்காத்தவர் மகேந்திரன். எதிர்கால சந்ததியினருக்கு பாடமாக இந்த பூமியில் வாழ்ந்ததற்கு வாடகையாக மிகப்பெரிய படைப்புகளை விட்டுச் சென்றுள்ளார்.

பத்திரிகைத் துறையில் இருந்தவர் எம்ஜிஆர் மூலமாக திரைத்துறைக்கு அழைத்து வரப்பட்டார். ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சியில் இருந்த எம்ஜிஆர் தான் நடித்த ‘காஞ்சித் தலைவன்’ படத்தில் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராக மகேந்திரனை சேர்த்துவிட்டார்.

நாம் மூவர், சபாஷ் தம்பி, பணக்காரப்பிள்ளை ஆகியப் படங்களுக்கு கதை எழுதிய மகேந்திரன், சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கம் திரைப்படத்துக்கு கதை, வசனம் எழுதியதின் மூலம் சிறந்த கதாசிரியராகப் புகழ் பெற்றார்.

முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, மெட்டி, கை கொடுக்கும் கை, ஜானி ஆகிய படங்களின் மூலம் இயக்குநராக தனி முத்திரை பதித்தவர், நல்ல சினிமாவிற்கு என்னை அர்ப்பணிப்பதே என்றைக்கும் எனது சாசனமாக இருக்கும் என்று சொன்னவர் மகேந்திரன்.

ஒரு நல்ல எழுத்தாளன், இலக்கியவாதி, சிறந்த இயக்குநர், மிகச்சிறந்த நடிகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். வாழ்நாள் முழுவதும் தான் சார்ந்த தொழிலுக்கும், கலைக்கும் விஸ்வாசமாக இருந்தவர் மகேந்திரன். இலக்கியங்கள் மீதும், நாவல்கள் மீதும் அதிக ஈடுபாடு கொண்ட காரணத்தினால் தன் படங்கள் ஒவ்வொன்றையும் ஒரு நாவல் போல் பதிவு செய்திருக்கிறார்.

திரையுலகில் என் சமகாலப் பயணி நண்பர் மகேந்திரன். என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர்கள் நான்கு பேர். இயக்குநர் சிகரம் பாலசந்தர், என் எழுத்தாளர் ஆர். செல்வராஜ், ஒளிப்பதிவாளர் பாபு இவர்களுக்குப் பிறகு மகேந்திரன் அவர்கள் தான் என்னை பாரதி என்று பாசத்தோடு அழைப்பார். 50 ஆண்டுகாலமாக என்னோடு பயணித்தவர். என் படங்களை அவர் ரசித்திருக்கிறார். அவர் படங்களை நான் ரசித்திருக்கிறேன். இன்று அவர் நம்மோடு இல்லை என்று நினைக்கும் போது இதயம் வலிக்கிறது.

தொலைக்காட்சியில் அவரைப் பற்றி கேட்டபொழுது, 50 ஆண்டுகால நண்பன் இறந்துகிடக்கும் நிலையில் என் மனவேதனையை என்னவென்று சொல்வதென்று தெரியாமல் வந்துவிட்டேன். அதான் தான் இந்த அறிக்கையின் வாயிலாக மகேந்திரன் பற்றிய நினைவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

தமிழ்கூறும் நல்லுலகம் இருக்கும் வரை நண்பர் மகேந்திரன் புகழ் நிலைத்திருக்கும். அவர் ஆன்மா அவரின் சிறந்த படைப்புகள் வாயிலாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்''.

இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

    இயக்குநர் மகேந்திரன் மறைவுஇயக்குநர் மகேந்திரன் மரணம்இயக்குநர் மகேந்திரன் காலமானார்இயக்குநர் பாரதிராஜா அறிக்கைபாரதிராஜா புகழாஞ்சலி

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x