Last Updated : 09 Apr, 2019 11:15 AM

 

Published : 09 Apr 2019 11:15 AM
Last Updated : 09 Apr 2019 11:15 AM

நயன்தாராவைப் பற்றி ராதாரவி தவறாக பேசவில்லை: இயக்குநர் பேரரசு

நயன்தாராவைப் பற்றி ராதாரவி தவறாக பேசவில்லை; உயர்வாகத் தான் பேசியுள்ளார் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார்.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள  'கொலையுதிர் காலம்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.

மேலும், இப்பேச்சுக்காக திமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார் ராதாரவி. நயன்தாராவும் அறிக்கையின் மூலமாக ராதாரவியை கடுமையாக சாடியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் குறும்படம் வெளியீட்டு விழா ஒன்றில் இயக்குநர் பேரரசு, ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது:

சின்ன படங்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகிறார் ராதாரவி அண்ணன். மனதில் இருப்பதை அப்படியே பேசிவிடுவார். சினிமாவில் நடிக்கத் தெரியும், நேரில் நடிக்கத் தெரியாது. சினிமாவில் நடித்துவிட்டு, அவருக்கு அரசியலில் நடிக்கத் தெரியவில்லை.

சமீபத்தில் கூட அவர் பெரிய பிரச்சினையில் சிக்கி விடுதலையாகிவிட்டார். பெரிய பரபரப்பாக இருந்தது. நானும் அண்ணன் சும்மா இருக்க மாட்டிக்கிறாரே என்று ராதாரவி அண்ணன் பேசியதை இணையத்தில் பார்த்தேன். முதல் முறை முழுமையாக கேட்டுவிட்டு, நமக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லையே. நாம் சரியாக பார்க்கவில்லையோ என்று மீண்டும் பலமுறை பார்த்தேன். அவர் தப்பாகவே பேசவில்லை. நயன்தாராவைப் பற்றி உயர்வாகத் தான் பேசியுள்ளார்.

இப்போது எல்லாம் நடிகைகள் 3 - 4 வருடங்களில் காணாமல் போய்விடுகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு நடிகை இருக்கிறார் என்று பெருமைக்குரிய விஷயம். இது பாராட்டு தான், தரக்குறைவு அல்ல. சாமி படத்திலும் நடிக்கிறார், பேய் படத்திலும் நடிக்கிறார் என்பது சரியான ஒரு நடிகைக்கான பாராட்டு. எங்கேயோ யாரோ திரித்துவிட்டு, பிரச்சினையாக்கிவிட்டார்கள்.

இந்தப் பேச்சுக்காக கட்சியை விட்டு நீக்குவதாக இருந்தால், அவரை 40 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கி இருக்க வேண்டும். ஏனென்றால் அப்போது எல்லாம் இதைவிட மோசமாக பேசுவார். இவரும் எஸ்.எஸ்.சந்திரன் அவர்களும் இணைந்து வந்து பேசுவார்கள். அப்போது பேசாத பேச்சா என்ன?. ரொம்ப லேட்டாக நீக்கிவிட்டார்கள். இதற்கு எல்லாம் ராதாரவி அண்ணன் பயந்துவிடக் கூடாது. மனதில் பட்டதை பேசுங்கள். அப்போது தான் சினிமாவில் கொஞ்ச பேருக்கு பயம் வரும். இல்லையென்றால் எங்களுக்கு பயம்விட்டு போகும்.

மனிதநேயம், பகுத்தறிவு கூடக் கூட பாலியல் குற்றங்கள் குறைய வேண்டும். ஏன் குறையவில்லை என தெரியவில்லை. அப்படியென்றால் சட்டம் சரியில்லை. பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை ஒட்டுமொத்த மக்களுக்கும் தெரியவேண்டும்.

இவ்வாறு இயக்குநர் பேரரசு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x