Published : 05 Apr 2019 02:52 PM
Last Updated : 05 Apr 2019 02:52 PM

முதல் பார்வை: உறியடி 2

வெளிநாட்டில் உரத் தொழிற்சாலை அமைக்கத் திட்டமிடுகிறார் பணக்கார முதலாளி ஒருவர். ஆனால், அந்தத் தொழிற்சாலையால் தீமை ஏற்படும் என மற்ற நாடுகள் மறுத்துவிட, இந்தியா மட்டும் அவருக்கு அனுமதி அளிக்கிறது. அதன்படி, செங்கதிர்மலை கிராமத்தில் தொழிற்சாலை அமைக்கிறார்.

அந்தத் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், அந்த மருந்துகளால் விளைநிலங்கள் பாழாவதையும், விளைபொருட்களில் நச்சுத்தன்மை அதிகரிப்பதையும் கண்டுகொண்ட வெளிநாடுகள், அந்த மருந்துகளுக்குத் தடை விதிக்கின்றன.

எனவே, அந்த மருந்துகளின் பெயரை மாற்றி, பூச்சிக்கொல்லி மருந்தாக இந்தியாவிலேயே விற்கத் தொடங்குகிறார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. எனவே, ஆலையின் உற்பத்தியை இரு மடங்கு அதிகரிக்கச் சொல்கிறார். அதேசமயம், தொழிற்சாலையின் பாதுகாப்பையோ, அங்கு பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பையோ அவர் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்நிலையில், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்துவிட்டு வேலையில்லாமல் சுற்றித் திரியும் ஹீரோ விஜய் குமாரும், அவருடைய இரண்டு நண்பர்களும் அந்தத் தொழிற்சாலையில் பணிக்குச் சேர்கின்றனர். அங்கு விஷவாயு (மீத்தைல் ஐசோசயனேட் - எம்.ஐ.சி) கசிய, அந்த விபத்தில் ஒரு நண்பர் இறந்துவிடுகிறார்.

ஏற்கெனவே வேறு ஒரு விபத்தில் இறந்தவரும், விஜய்குமாரின் நண்பரும் இறந்ததற்கான காரணம் ஒன்றுதான் எனத் தெரியவருகிறது. அதன்பிறகு அந்தத் தொழிற்சாலை என்ன ஆனது? ஹீரோ என்ன செய்தார்? என்பதுதான் மீதிப்படம்.

உரத் தொழிற்சாலை, அதனால் ஏற்படும் பாதிப்பு, அதை முன்வைத்து செய்யப்படும் அரசியல் நிகழ்வுகள் என நிகழ்காலக் கதையை எடுத்துத் திரைக்கதையாக்கி, அதை வலிமையாகக் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர் விஜய் குமார்.

‘படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே, யாரையும் குறிப்பிடுவன அல்ல’ என டைட்டில் கார்டில் போட்டாலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் பிரச்சினைதான் இது என அப்பட்டமாகத் தெரிகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தவிர்த்த, மற்ற அனைத்து விஷயங்களையும் காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

விஷவாயு கசிவினால் மக்கள் படும் அவதி, கண்கலங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சற்றே நீளமான காட்சி என்றாலும், கதையின் சாராம்சமே அதுதான் என்பதால் பெரிதாகத் தெரியவில்லை. அதேபோல் கடவுள் மறுப்புக் கொள்கையும் ஆங்காங்கே சரியான விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்தப் பிரச்சினை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் பெரிதாக வைக்கப்படவில்லை. ஒருமுறை கூட்டம் போட்டு விளக்கிக் கொண்டிருக்கும்போது பிரச்சினை ஏற்படுகிறது. அதன்பிறகு, ‘கெமிக்கல் தொடர்பான டெக்னிக்கல் வார்த்தைகளை மக்களிடம் சொன்னால், அவர்களுக்கு எப்படிப் புரியும்?’ என்ற ஒரு வசனத்தோடு கடந்துவிடுகின்றனர்.

அதேபோல், பிரச்சினைக்கான தீர்வு என்ன என்பதையும் தெளிவாகச் சொல்லவில்லை. வழக்கமான படங்களின் ஹீரோயிஸமான வில்லனைக் கொல்வது என்பதே இந்தப் படத்தின் க்ளைமாக்ஸாகவும் அமைந்துவிடுவதால், அவ்வளவு நேரமும் பெரிய எதிர்பார்ப்போடு இருக்கும் நமக்கு ஏமாற்றமாகிறது.

ஹீரோவாக இயக்குநர் விஜய் குமாரே நடித்துள்ளார். காதலியிடம் குழையுமிடம், ஆக்ரோஷமாகப் பொங்கி எழுமிடம் என கதைக்குத் தேவையானதைக் கச்சிதமாகக் கொடுத்திருக்கிறார். ஹீரோயின் விஸ்வமயா, வழக்கமான காதலிகள் போல் டூயட் மட்டும் பாடாமல், களத்தில் நின்று போராடுகிறார். சாதிக் கட்சித் தலைவராக செங்கை குமார் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார்.

ஹீரோ விஜய் குமார், யூ ட்யூப் பிரபலம் சுதாகர் இருவர் மட்டுமே இந்தப் படத்தில் கொஞ்சமேனும் தெரிந்த முகங்கள். மற்றபடி அனைவருமே அறியப்படா முகங்கள். ஆனால், வலிமையான திரைக்கதையைத் திணறாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

பிரவீன் குமாரின் ஒளிப்பதிவும், கோவிந்த் வசந்தாவின் இசையும் கதைக்கு கனம் சேர்த்துள்ளன. விஷவாயு எப்போது வெடித்து வெளியாகுமோ என்ற விறுவிறுப்பாகட்டும், விஷவாயு தாக்கிய மக்களின் அவலமாகட்டும்... பின்னணி இசையால் மெருகூட்டியுள்ளார் கோவிந்த் வசந்தா.

விஷவாயு கசிந்ததும் ஊரைவிட்டு வெளியேறத் துடிக்கும் மக்கள், கிடைத்த ஒரு டிராக்டரில், எதிர்காலச் சந்ததியாவது உயிருடன் இருக்கட்டும் எனக்கருதி தங்கள் குழந்தைகளை அனுப்புவது; தன் குழந்தையை விஷவாயு தாக்கிவிடக்கூடாது என நினைத்து பீரோவுக்குள் வைக்கும் தாய்; விஷவாயு தாக்கிய குழந்தையைக் காப்பாற்ற முடியாமல், இறந்த குழந்தையைக் கையில் ஏந்தி நர்ஸ் அழுவது... இப்படி உருகவைக்கும் இடங்கள் படத்தில் இருக்கின்றன.

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என மாற்றி மாற்றி ஓட்டுப் போடுவதைவிட, பாதிக்கப்பட்டவர்களே நேரடியாகப் போட்டியிடுவதுதான் தீர்வு என மாற்று அரசியலுக்கான களத்தை முன்வைத்த விதம் பாராட்டத்தக்கது. ‘அரசியல்ல நாம தலையிடணும், இல்லேன்னா அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிடணும்’ என்ற ‘உறியடி’ முதல் பாகத்தின் அடிநாதம், இந்தப் படத்தில் கொஞ்சம் கூடுதலாகவே சொல்லப்பட்டிருப்பது சிறப்பு.

வாக்களிப்பதற்கு முன்பு, நாம் கொஞ்சமேனும் சிந்திக்க வேண்டும் எனச் சொல்லாமல் சொல்ல தேர்தல் நேரத்தில் வெளியாகியுள்ளது ‘உறியடி 2’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x