Last Updated : 30 Apr, 2019 12:48 PM

 

Published : 30 Apr 2019 12:48 PM
Last Updated : 30 Apr 2019 12:48 PM

எஸ்.பி.பி. மாதிரி நீயும் மூச்சுவிடாம பாடிருன்னார் வாலி அண்ணா!’’ - சிரித்து நெகிழும் நடிகர் சார்லி

''எஸ்.பி.பி. மாதிரி நீயும் மூச்சுவிடாம பாடிருன்னார் வாலி அண்ணா. அப்புறம் நீளமான வசனம் எழுதிப் பேசவைத்தார்’’ என்று நடிகர் சார்லி கவிஞர் வாலியுடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

நடிகர் சார்லி தனியார் இணையதள சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது:

காவியக் கவிஞர் வாலியுடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. என் மீது மிகவும் பிரியமாக இருப்பார். எல்லா முதல் நடிகர்களும் வலியுடனேயே நடிப்பார்கள். நான் ஒருவன்தான் வாலியுடன் நடித்தவன் என்று பெருமையாகச் சொல்லுவேன்.

அவரிடம் கொஞ்சம் உரிமையாகவும் பேசுவேன். அப்படித்தான் ஒருமுறை, ‘கோயில் நகரமாம் குடந்தை. அத்தனை தெய்வங்களுமா இந்த அநீதிக்கு உடந்தை?’ என்று குடந்தை பள்ளி தீவிபத்து குறித்து எழுதியிருந்தார். ‘என்னண்ணா இது. நீங்க இப்படி எழுதலாமா?’ன்னு கேட்டேன். ‘அப்படித்தான் தோணுச்சு. எழுதினேன்’னு சுள்ளுன்னு சொன்னார்.

அப்புறம் ‘நானும் இந்த நூற்றாண்டும்’ங்கற புத்தகத்துல, ‘சார்லியின் இறகுகள் இந்த உலகை வலம் வரும். அவன் இன்னும் உயருவான். இது சத்தியம்’னு எழுதியிருந்தார். உடனே போன் பண்ணி, ‘என்னண்ணா இது?’ன்னு கேட்டேன். ‘உண்மையத்தாண்டா எழுதிருக்கேன்’னு சொன்னார்.

இப்படியான நட்பும் உறவும் எங்களுடையது. நாகேஷ், மனோரமா, தேங்காய் சீனிவாசன்னு எத்தனையோ பேருக்கு வசனமெல்லாம் எழுதிருக்கார் வாலி சார். அவரோட எழுத்துல ஒரு டிராமா பண்ணனும் எனக்கொரு ஆசை. அவர்கிட்ட சொன்னேன். சரின்னு சொன்னார்.

ஒருநாள், ராத்திரி 11 மணி இருக்கும். வாலி அண்ணாகிட்டேருந்து போன். ‘ஏண்டா... அந்தப் பாட்டு பெரிய ஹிட்டாமே. ராஜா (இளையராஜா) சொன்னான்’னு கேட்டார். ‘எந்தப் பாட்டுண்ணா’னு கேட்டேன். ‘அதாண்டா, பாலு ஏதோ மூச்சுவிடாம பாடிருக்கானாம். அந்தப் பாட்டு’ன்னு சொன்னார். ‘ஆமாம்ணா. பாட்டே இப்படி இருக்கு. படம் எப்படி இருக்கப்போவுதோனு பெரிய எதிர்பார்ப்போட இருக்கு’ன்னு நான் சொன்னேன்.

உடனே வாலி சார், ‘சரிசரி... நம்ம டிராமால, பாலுவை மாதிரியே மூச்சுவிடாம நீயும் பாடிரு’ன்னு சொன்னார். ‘அண்ணா, விளையாடுறீங்களா. நானாவது, பாடுறதாவது?’ன்னு பதறிட்டேன்.

அந்தக் கதை, தெருக்கூத்துக் கலைஞன், சினிமா டைரக்டர் ஒருத்தரால, சினிமாவுக்குள்ளே வந்து, பெரிய ஸ்டாராயிடுறான். அவனோட இயல்புக்கும் இந்த சினிமா நடைமுறைக்கும் உள்ள வேறுபாடுகளைத்தான் கதையா பண்ணிருந்தோம். காலைல போனதுமே, ‘வாடா வாடா... நீ என்ன பண்றே? ஸ்டேஜுக்குள்ளே வர்றே. வரும்போது... அப்படின்னு சொன்னவர், மளமளன்னு பேப்பர்ல எழுதினார். அதை எங்கிட்ட கொடுத்து, ‘இதை அப்படியே வாசிச்சிரு’ன்னு சொன்னார். பாத்தா... மிக நீளமான வசனம் அது. அந்த வசனத்தை பேசி முடிக்கவே சில நிமிஷங்களாயிரும். பேசி முடிச்சேன். எல்லாரும் பாராட்டினாங்க.

அப்புறம், ஸ்டேஜ்ல பண்ணும்போது, நான் எவ்ளோ நிமிஷம் பேசினேனோ... அவ்ளோ நேரம் ஆடியன்ஸ் கைத்தட்டி பாராட்டினங்க. இப்படிலாம் என் வாழ்க்கைல நடந்திருக்கு. இது என்னோட பாக்கியம்.

நெகிழ்ந்து சொன்னார் நடிகர் சார்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x