Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

காங்கிரஸ் செய்த தவறுகளையே மோடி அரசும் செய்கிறது: விழுப்புரத்தில் நல்லக்கண்ணு பேட்டி

காங்கிரஸ் கட்சியை குறை கூறி விட்டு ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடி தலைமையிலான அரசு அதே தவறுகளை திரும்பச் செய்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு தெரிவித்தார். விழுப்புரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறும்போது:

மத்தியில் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 100 நாள்களை நெருங்குகிறது. காங்கிரஸ் கட்சியை குறை கூறி விட்டு ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான அரசு அதே தவறுகளை திரும்பச் செய்கிறது.

அந்நிய மூலதன முதலீடுகள் அதிகரித் துள்ளன. பாதுகாப்புத் துறையில் கூட அந்நிய முதலீடுகள் புகுத்தப்படுகின்றன. நிதித்துறை யின் பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படுகின்றன. இது தந்தை சேர்த்து வைத்த சொத்தை மகன் ஊதாரித்தனமாக செலவு செய்வதற்கு ஒப்பானது.

நெல், கரும்பு போன்ற பொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்து ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு இயக்கங்களை நடத்தி வருகிறோம். இதன் தொடர்ச்சியாக இன்று (செப்.1-ம் தேதி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.

தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டாக தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதனால் ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்படுவதோடு நீராதாரமும் பாதிக்கப்படும்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக இப்போது எதுவும் கூறமுடியாது. தீர்ப்பு வந்த பிறகுதான் எதுவும் கூற முடியும். திட்டக் கமிஷன் கலைக்கப்பட்டுள்ளது. அள்ளித்தெளித்தது போல திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.

ஏழரை கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்குவதாக கூறுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு சேர வேண்டிய தொகை நேரடியாக அவர்களுக்கு போய் சேரும் என்று கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x