Published : 24 Apr 2019 03:11 PM
Last Updated : 24 Apr 2019 03:11 PM

சிவகார்த்திகேயன் வாக்களித்த முறை தவறு என்றாலும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது: அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்தமுறை தவறு என்றாலும் வேறு வழியில்லாமல் வாக்கை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்கெடுப்பு நடந்தது. காலை முதலே வெயிலைப் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் உட்பட பல பிரமுகர்கள் வாக்குச்சாவடி சென்று வாக்களித்தனர்.

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அன்று காலை 8 மணிக்கு வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க மனைவியுடன் வந்தார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள 303 எண்ணில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டிருந்ததால் சிவகார்த்திகேயன் வாக்களிக்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் இதே வாக்குச்சாவடியில் மனைவியுடன் வந்து வாக்களித்தேன் என்று சிவகார்த்திகேயன் வாக்குவாதம் செய்துவிட்டுச் சென்றார்.

இதேபோன்று நடிகர்கள் ரமேஷ் கண்ணா, ரோபோ சங்கர், நடிகை சோனியா போஸ், டிரம்ஸ் சிவமணி போன்றவர்களுக்கும் வாக்கு இல்லை. நடிகர் ஸ்ரீகாந்துக்கும் வாக்கு இல்லை. ஆனால் அவர் கையில் மை மட்டும் வைத்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

மதியம் இரண்டு மணிக்கு மேல் சிவகார்த்திகேயனை அழைத்த அதிகாரிகள் அவருக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதித்தனர். இதை அங்கிருந்த அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள் சிலர் ஆட்சேபித்துள்ளனர்.

இந்நிலையில் வாக்களித்துவிட்டுச் சென்ற சிவகார்த்திகேயன் வாக்களித்ததாக ஒரு போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து நேற்று தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பதிலளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாஹு, ''அனுமதித்தது தவறு. சிவகார்த்திகேயனுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் எப்படி வாக்களிக்க அனுமதித்தார்கள் என்று கேட்டுள்ளோம். வாக்களிக்க அனுமதித்தது தவறு. வாக்களிக்க அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''சிவகார்த்திகேயன் விதியை மீறி வாக்களித்தது எந்திரத்தில் பதிவாகிவிட்டது. அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது யாருக்கும் தெரியாது.

ஆகவே அந்த வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு விரிவாக அறிக்கை அனுப்ப உள்ளோம். ஆனால் சிவகார்த்திகேயனை வாக்களிக்க அனுமதித்த அதிகாரி மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோன்று நடிகர் ஸ்ரீகாந்த் விரலில் மை மட்டும் வைக்கப்பட்டது. அவர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை என அங்குள்ள அதிகாரி தெரிவித்திருந்தார். ஆனால் சிசிடிவி கேமராவில் அவர் வாக்குப்பதிவு எந்திரத்தின் அருகிலிருந்து வருவது போன்று உள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கேட்டுள்ளோம். அதில் தவறிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x