Published : 02 Apr 2019 07:34 PM
Last Updated : 02 Apr 2019 07:34 PM

‘சந்திரகுமாரி’ சீரியல்: ராதிகாவுக்குப் பதில் விஜி சந்திரசேகர்

சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘சந்திரகுமாரி’ சீரியலில், ராதிகாவுக்குப் பதில் விஜி சந்திரசேகர் நடிக்கிறார்.

ராதிகா இரண்டு வேடங்களில் நடித்த சீரியல் ‘வாணி ராணி’. 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சீரியல், கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதியுடன் நிறைவடைந்தது. எனவே, அடுத்ததாக ‘சந்திரகுமாரி’ என்ற சீரியலில் நடித்து வந்தார் ராதிகா சரத்குமார்.

ராதிகாவின் ரடான் மீடியா ஒர்க்ஸ் ‘சந்திரகுமாரி’ சீரியலைத் தயாரித்து வருகிறது. இந்த சீரியலில், 7 வேடங்களில் நடித்தார் ராதிகா. சரித்திரமும் சமூகமும் மாறி மாறிப் பயணிக்கும் வித்தியாசமான சீரியலாக இது ஒளிபரப்பாகி வருகிறது.

சென்னை மற்றும் மும்பையில் மிகப்பெரிய செட்டுகள் போட்டு இந்த சீரியல் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அரச குடும்பம் சார்ந்த கதையை, ‘பாட்ஷா’ படத்தின் இயக்குநரான சுரேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். நிகழ்காலக் காட்சிகளை சி.ஜே.பாஸ்கர் இயக்குகிறார்.

‘தாமிரபரணி’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்த பானு, இதில் ராதிகாவின் மகளாக நடிக்கிறார். நிரோஷா, உமா ரியாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிற்பி இசையமைக்கும் இந்த சீரியலுக்கு, பாலமுருகன் மற்றும் பிலிப் விஜயகுமார் ஒளிப்பதிவு செய்கின்றனர்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்த சீரியல் தயாராகியுள்ளது. கடந்த டிசம்பர் 10-ம் தேதி முதல் இதன் ஒளிபரப்பு தொடங்கியது. முதலில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு சன் டிவியில் ‘சந்திரகுமாரி’ ஒளிபரப்பானது.

ஆனால், இந்த சீரியலுக்குப் போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, சீரியலில் ஒளிபரப்பு நேரம் 9.30 மணியில் இருந்து 6.30 மணியாக மாற்றப்பட்டது.

தான் தொலைக்காட்சியில் நிறைய நடித்துவிட்டதாகவும், எனவே இரண்டு மாதங்கள் ஓய்வெடுக்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார் ராதிகா சரத்குமார். இதனால், அவர் சீரியலின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், ராதிகாவுக்குப் பதில் ‘சந்திரகுமாரி’ சீரியலில் யார் நடிப்பது என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், தனக்குப் பதிலாக விஜி சந்திரசேகர் நடிப்பார் என அறிவித்துள்ளார் ராதிகா சரத்குமார். ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ள விஜி சந்திரசேகர், ‘அழகி’ சீரியலுக்காக தமிழ்நாடு அரசின் சிறந்த குணச்சித்திர நடிகை விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x