Published : 18 Apr 2019 01:03 PM
Last Updated : 18 Apr 2019 01:03 PM

ராஜாவுக்கு செக் வைக்கப் போறேன்! - இயக்குநர் சாய் ராஜ்குமார் நேர்காணல்

சதுரங்கம் ஆடும்போது ஒரு கட்டத்தில் ராஜாவுக்கு செக் வைப்போம். அப்போது அந்த ராஜாவின் கையில் இரண்டே இரண்டு வழிகள்தான் இருக்கும். தனக்கு செக் வைத்த எதிராளியை வீழ்த்த வேண்டும். அல்லது சாதுர்யமாக அங்கே இருந்து தப்பிக்க முயற்சிக்க வேண்டும். இது இரண்டையுமே செய்யவில்லை என்றால் ராஜாவின் கதை முடிந்தது.

அந்த மாதிரிதான் இந்தப் படத்தின் கதையும். சேரன் தனது கடமைக்காக ஒரு விஷயத்துக்குள் ஈடுபட செல்வார். அது அவருக்கு மாபெரும் சிக்கலை உருவாக்கிவிடும். அதில் இருந்து அவர் மீண்டாரா? இல்லையா? இதுதான் ராஜாவுக்கு செக்!’’ என்கிறார் இப்படத்தின் இயக்குநர் சாய் ராஜ்குமார்.

‘மழை’ படத்துக்குப் பிறகு ‘ராஜாவுக்கு செக்’ படத்தின் வழியே மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். முழுக்க எமோஷனல் த்ரில்லர் களமாக உருவாகியிருக்கும் இப்படம் குறித்து நம்மிடம் விரிவாகவே பேசினார்.

படத்தில் நடிகர் சேரன் அவரது கடமையை செய்ததால் சிக்குகிறார் என்கிறீர்கள். என்ன கடமை? அவரது கதாபாத்திரம்தான் என்ன?

இப்படத்தில் சேரனின் பெயர் ராஜா செந்தூர் பாண்டியன் . இதில் இவருக்கு சிபிசிஐடி அதிகாரி கதாபாத்திரம். காவல்துறை அதிகாரியாக தான் செய்ய வேண்டிய ஒரு செயலுக்குள் இறங்குகிறார். அதனால் அடுத்தடுத்து அவர் எதிர்கொள்ளும் நிகழ்வுகள்தான் கதை. இதை முழுக்கவும் எமோஷனல் த்ரில்லர் பாதையில் வடிவமைத்துள்ளேன்.

படத்தில் வரும் பெரும்பாலான காட்சிகளில் சேரன் தனியாகவே நடிக்க வேண்டிய சூழல். அவரைச் சுற்றி யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், அவர் நடித்தாக வேண்டும். அந்த இடத்தில் எதிரில் நான் மட்டுமே நின்று காட்சியை விளக்குவேன். ஒரு தேர்ந்த இயக்குநராக அவர் இருப்பதால் அந்த மாதிரியான காட்சிகளை தனது நடிப்பால் வென்றிருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கு நான் சொல்வதெல்லாம் புரிய வரும்.

பொதுவாக இயக்குநர் சேரன் குடும்பம், சமூகப் பொறுப்பு, உறவுகளின் முக்கியத்துவம் என வித்தியாசமான பாதையில் பயணிப்பவர். அவரை இந்த மாதிரியான கதைக்களத்துக்குள் எப்படி கொண்டுவர நினைத்தீர்கள்?

படம் பார்க்கும்போது இந்தக் கேள்வியே எழாது. சில விஷயங்களை சிலர் சொன்னால்தான் எடுபடும். இந்த மாதிரியான எமோஷனல் த்ரில்லர் கதைக்குள் ஒரு மையப்புள்ளி இருக் கும். அந்த விஷயத்தை தொடுவதும், அவிழ்ப்பதும் இந்த மாதிரியான மனிதர் கள் செய்யும்போதுதான் சரியாக இருக் கும். அதனால்தான் இதற்கு சேரன் மட்டுமே சரியாக இருப்பார் எனத் தெளிவாக இருந்தேன். அவரும் அதை 100 சதவீதம் பூர்த்திசெய்திருக்கிறார்.

ஓர் இயக்குநராக அவர் பல படி நிலைகளைப் பார்த்தவர். ஒரு நடிகராக இந்தப் படத்துக்குப் பிறகு அவரது உய ரம் தனியாகத் தெரியும். படம் இயக்க நேரம் கிடைக்கவில்லை என்ற அள வுக்கு அவர் நடிகராக பிஸியானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இந்த மாதிரி படத்தில் நாயகிக்கு வேலை இருக்காதே. ஆனால், உங்கள் படத்தில் மூன்று நாயகிகளாமே?

இது பொதுவாக நாம் பார்க்கும் ஹீரோ, ஹீரோயின் கதையல்ல. ஆனா லும், படத்தில் மூன்று நாயகிகள். சேர னுக்கு மனைவியாக சரயூ மோகன். மலையாள சினிமாவில் கவனம் ஈர்த்து வருபவர். சேரனுக்கு மகளாக நந்தனா வர்மா. இவரும் கேரளாதான். கதையில் மாடல் பெண்ணாக சிருஸ்டி டாங்கே. இவர்கள் மூவருக்கும் படத்தில் முக்கிய மான பொறுப்புகள் இருக்கும். இவர் களைத் தவிர இப்படத்தின் முதன் முறையாக இர்பான் வில்லனாக நடித் திருக்கிறார். அவரது கதாபாத்திரமும் எல்லோரையும் கவனிக்க வைக்கும்.

உங்களைப் பற்றி சொல்லவே இல்லையே?

இயக்குநர் வசந்த்கிட்ட ‘ஆசை’, ‘நேருக்கு நேர்', ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’, ‘ரிதம்’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். அடுத்தடுத்து சரண் இயக்கிய ‘பார்த்தேன் ரசித் தேன்’, ‘ஜெமினி’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ ஆகிய படங்களில் இணை இயக்குநர். தமிழில் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படம் என் முதல் படம். அடுத்து தெலுங்கில் ஒரு படம். இப்போது ராஜாவுக்கு செக் வைக்கிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x