Last Updated : 14 Apr, 2019 02:19 PM

 

Published : 14 Apr 2019 02:19 PM
Last Updated : 14 Apr 2019 02:19 PM

ஜெயலலிதா அறிமுகமான நாள் இன்று! - ‘வெண்ணிற ஆடை’க்கு வயது 54

ஜெயலலிதா இல்லாத தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஜெயலலிதா இல்லாமல் தேர்தலை, அதிமுகவும் தமிழகமும் சந்திக்கிறது இப்போது. எண்பதுகளில், கொள்கை பரப்புச் செயலாளராக பதவியேற்று, ஊர் முழுவதும் பிரச்சாரம் செய்த காலம் தொடங்கி, ’செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?’ ‘உங்களால் நான்... உங்களுக்காகவே நான்...’ எனும் கோஷங்களையும் ‘மோடியா... லேடியா...?’ என்ற முழக்கங்களையும் மனதில் பதிய வைத்த ஜெயலலிதா இன்றைக்கு இல்லை.

அரசியல் முகம் காட்டுவதற்கு முன்பே பரிச்சயமானவர் ஜெயலலிதா. நடிகையாக எல்லோராலும் அறியப்பட்டார். பல படங்களில், பல விதக் கேரக்டர்களில் நடித்தார்.

தமிழ்த் திரையுலகில், முதன்முதலாக இயக்குநர் ஒருவர் பேசப்பட்டார் என்றால், ‘இது இந்த இயக்குநரின் படம்’ என்று எல்லோரும் சொன்னார்களென்றால்... அந்தப் பெருமை ஸ்ரீதருக்கே உரியது. அவர்தான் அதைத் தொடங்கிவைத்தார்.

இயக்குநர் ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ படம் மிகச்சிறந்த படங்களில் ஒன்று. அந்தப் படத்தின் வண்ணமும், செட்டுகளும், கேமிராக் கோணங்களும் பெரிதும் பேசப்பட்டன. இந்தப் படத்தில் நடித்த மூர்த்தி, ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தியானார். அதேபோல், அறிமுகமான நிர்மலா, ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா என்றானார். அதேபோல், ஸ்ரீகாந்த் மிகச்சிறந்த நடிகராகவும் வில்லத்தனம் செய்வதில் சூரத்தனமிக்கவர் என்றெல்லாம் பாராட்டப்பட்டார்.  

இவர்களின் வரிசையில் இந்தப் படத்தில் அறிமுகமானவர் ஜெயலலிதா. ஆனால், ‘வெண்ணிற ஆடை’ ஜெயலலிதா என்று பெயருடன் படத்தின் பெயர் சேர்ந்துகொள்ளவில்லை. ஆனால், இந்தப் படத்தின் மூலமாக அறிமுகமான நான்குபேரில், ஜெயலலிதாதான் மிகப்பெரிய உச்சத்தை அடைந்தார் என்பது ஆச்சரிய முரண்.

‘வெண்ணிற ஆடை’ படத்தில், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு, பிறகொரு விபத்தில் கணவனை இழந்துவிடுவார் ஜெயலலிதா. அப்போது மனநிலை பாதித்துவிடும்.

அதை சீர்செய்வதற்காக மனநல மருத்துவர் ஸ்ரீகாந்த் வருவார். ஏற்கெனவே, ஸ்ரீகாந்தும் வெண்ணிற ஆடை நிர்மலாவும் காதலித்து வருவார்கள்.

உளவியல் சிகிச்சையால், கொஞ்சம்கொஞ்சமாக சரியாகிக்கொண்டே வருவார் ஜெயலலிதா. அப்போது டாக்டரின் மீது காதல் கொள்வார். ஜெயலலிதாவின் பெற்றோரும், ‘இவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிடலாம்’ என்று ஆசைப்படுவார்கள்.

ஆனால், பூரணமாக குணமான நிலையில், ஏற்கெனவே தான் காதலித்துவருவதைச் சொல்லிவிடுவார் ஸ்ரீகாந்த். நடப்பவற்றையும் நடந்தவற்றையும் உணர்ந்துகொண்டு, இறுக்கமான சூழ்நிலையில், வெள்ளைப்புடவையைக் கட்டிக்கொண்டு வந்து நிற்பார் ஜெயலலிதா. படம் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்திவிடும் அந்தக் க்ளைமாக்ஸ் காட்சி.

முதல் படத்திலேயே அப்படியொரு கனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ஜெயலலிதா. ஷோபா எனும் கேரக்டரில், மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். இந்தப் படம் நடித்துக்கொண்டிருக்கும்போதே, வெண்ணிற ஆடை படம் பற்றியும் ஜெயலலிதா பற்றியும் சினிமாவுக்குள் பேச்சு அடிபடத் தொடங்கியது. அப்போதே எம்ஜிஆர் அழைத்தார். அடுத்த பட வாய்ப்பை வழங்கினார். அதுதான் ‘ஆயிரத்தில் ஒருவன்’. அதாவது ’வெண்ணிற ஆடை’ ஜெயலலிதா நடித்த முதல்படம். ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஜெயலலிதா, எம்ஜிஆருடன் நடித்த முதல்படம்.

1965ம் ஆண்டு ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ வெளியானது. அந்த வருடத்தில், ஏப்ரல் 14ம் தேதி ரிலீசானது இந்தப் படம். ஜெயலலிதா, தமிழ் மக்களுக்கு அறிமுகமாகி, இன்றுடன் 54 வருடங்களாகிவிட்டன.

சினிமாவில் தொடங்கி, அரசியலுக்குள் நுழைந்து, அரியணையில் அமர்ந்து, மக்களுடனும் இரண்டறக் கலந்துவிட்டார். அம்மு என்கிற ஜெயலலிதா, இன்றைக்கு அம்மா என்றாகிவிட்டார். இவற்றுக்கெல்லாம் அஸ்திவாரமிட்ட நாள்தான் 1965 ஏப்ரல் 14ம் தேதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x