Last Updated : 29 Apr, 2019 12:15 PM

 

Published : 29 Apr 2019 12:15 PM
Last Updated : 29 Apr 2019 12:15 PM

இது விஷாலுக்கு ஒரு பாடமாக இருக்கும்; அவருக்கு நாங்கள் எதிரிகள் அல்ல: எஸ்.வி.சேகர் விளக்கம்

இது விஷாலுக்கு ஒரு பாடமாக இருக்கும், அவருக்கு நாங்கள் எதிரிகள் அல்ல என்று  தயாரிப்பாளர் சங்க விவகாரம் தொடர்பாக எஸ்.வி.சேகர் விளக்கமளித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டே இருந்தனர்.

கணக்கு வழக்குகள் சரிவர இல்லை, பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாதது, இளையராஜா 75 நிகழ்ச்சி குறித்த செலவுகள் என பல்வேறு விஷயங்களை முன்வைத்து சங்கங்களின் பிரதிகளிடம் புகார் ஒன்றை அளித்தது எதிரணி. இதனை முன்வைத்து தயாரிப்பாளர் சங்கத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், பதில் சரிவர இல்லாத காரணத்தால் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுள்ளது. இதற்கான அறிவிப்பை சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி என்.சேகர் என்ற அதிகாரியை தயாரிப்பாளர் சங்கத்துக்கு நியமித்துள்ளது தமிழக அரசு. இது விஷால் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, விஷால் அணிக்கு எதிரணியில் இருக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் தலைமையிலான அணியின் செயல்பாடுகளை முற்றிலுமாக முடக்கியிருக்கிறது தமிழக அரசு. ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்துவிட்டார்கள். நடிகர் சங்கத்தில் செயலாளராக இருக்கக் கூடிய விஷால், தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரக்கூடாது என்று நாங்கள் சொன்னோம். இருந்தாலும் ஒரே நேரத்தில் 2 குதிரையில் சவாரி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் வைப்பு நிதியில் இருக்கும் சுமார் ஏழரை கோடி ரூபாயை எடுக்க மாட்டோம். மேலும், இதைவிட அதிகமான பணத்தை சேமித்து வைப்போம் என்று சொல்லிவிட்டு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் மாதம் 10,000 ரூபாய், 15000 ரூபாய் என கொடுத்தார்கள். கடைசியில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துறோம் என்று நடத்தி இதில் ஏழரை கோடி ரூபாயும் செலவாகிப் போச்சு என்கிறார்கள்.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவதன் மூலம் நமக்கு 8 கோடிக்கு மேல் பணம் கிடைத்துவிடும் என்று நம்பினார்கள். ஆனால், 1 கோடி தான் லாபம் கிடைத்தது என்கிறார்கள். அதற்கான கணக்கும் இன்னும் கொடுக்கப்படவில்லை. யாரிடமும் அனுமதி கேட்காமல் புதிதாக அலுவலகம் அமைத்தது உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்தார்கள்.

ஆகையால், நாங்கள் 29 பேர் இணைந்து சங்கங்களின் கூட்டமைப்பில் போய் புகாரளித்தோம். அதில் செயற்குழு, பொதுக்குழு என எதுவுமே கூட்டப்படுவதில்லை, நிர்வாக சீர்கேடுகள் நடக்கிறது என்றெல்லாம் தெரிவித்தோம். 10 நிமிடங்கள் மட்டுமே நடந்த பொதுக்குழு, விஷால் தலைமையில் நடந்த தயாரிப்பாளர் சங்கப் பொதுக்குழுவாகத் தான் இருக்கும்.

இந்த தருணத்தில் தான் 1-ம் தேதி பொதுக்குழு என்கிறார்கள். எதுக்குமே கணக்கு கொடுக்கப்படவே இல்லை. நாங்கள் யாருமே இளையராஜாவுக்கு எதிரானவர்கள் கிடையாது. இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்துவது கடமை தான். ஆனால், அதற்கு எங்கிருந்து பணம் எடுப்பது, எப்படி செலவழிப்பது உள்ளிட்ட விஷயங்கள் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். யாருடமும் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று, தன் நண்பருக்கே விழாவுக்கான உரிமையைக் கொடுத்து மூன்றரை கோடி கொடுத்துள்ளார் விஷால்.

தாந்தோன்றிதனமாக, அகந்தையின் உச்சமாக பல விஷயங்கள் பண்ணினார்கள். சங்கங்களின் பிரதிநிகளுக்கு அனுப்பினோம். 6 மாதப் பணி இது. இறுதியாக நிர்வாக சீர்கேடு, பண சீர்கேடு என எல்லாமே செய்திருக்கிறார்கள் என தெரிந்துள்ளது. தயாரிப்பாளர் சங்கத்தில் இருப்பவர்களுக்கு தானே கொடுத்தோம் என்கிறார்கள். எவ்வித பதிலுமே திருப்தியில்லை என்பதால், அரசாங்கமே சேகர் என்கிற அதிகாரியை நியமித்துவிட்டது. இதற்கான அரசானை பிறப்பித்துள்ளது. அவர் எப்போது பதவி ஏற்றுக் கொண்டாரோ, விஷால் உள்ளிட்ட அனைவரது பதவிகளுமே ரத்தாகிவிட்டது. யாருமே அவரை தலைவர் விஷால் என்று சொல்ல முடியாது.

அடுத்த தேர்தலில் கூட, இந்த முறைகேடுகளுக்கு எல்லாம் பதில் சொன்னால் மட்டுமே நிற்கமுடியும். சினிமாவில் இருந்துக் கொண்டு, சினிமாவில் இருப்பவர்களை ஏமாற்றுவது ரொம்ப அசிங்கமான ஒரு விஷயம். சினிமாவில் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வாழ்க்கையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். இது விஷாலுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நினைக்கிறேன். விஷால் என்னோட விரோதி எல்லாம் அல்ல. இன்னும் வாழ்க்கையில் பார்க்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. அதற்குள் வாழ்க்கையில் சாதித்துவிட்டோம் என்று நினைத்தால் மட்டுமே, நக்கல் பேச்சை எல்லாம் கழைய வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதி வென்றது.

விஷால் நாங்கள் எதிரிகள் அல்ல. விஷால் ரொம்ப நல்லவர் மாதிரியும், நாங்கள் எல்லாம் ரொம்ப கெட்டவர்கள் மாதிரியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்போதுமே நல்லவராக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர் மட்டுமே. அவரைப் போல் ஆகவேண்டும் என்றால் தொப்பி வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம். கறுப்பு எம்.ஜி.ஆர், சிவப்பு எம்.ஜி.ஆர் என யாரும் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு நல்லதொரு விடிவுக்காலம் பிறந்திருக்கிறது.

இவ்வாறு எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x