Last Updated : 19 Apr, 2019 11:52 AM

 

Published : 19 Apr 2019 11:52 AM
Last Updated : 19 Apr 2019 11:52 AM

முள்ளும் மலரும் காளி... அப்பாதான்!’’ - மகேந்திரன் குறித்து மகன் உருக்கம்

''முள்ளும் மலரும் படத்துல காளியோட நடை, பேச்சு, பார்வை எல்லாமே அப்பாவைத்தான் ஞாபகப்படுத்தும். அதுதான் அப்பாவோட மேனரிஸம்’’ என்று இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் தெரிவித்தார்.

இயக்குநர் மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன், தனியார் இணையதளச் சேனலில் தந்தை மகேந்திரன் குறித்து பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

‘’பணத்தை ஒரு பொருட்டாகவே நினைத்ததில்லை அப்பா. பணம் முக்கியம். பணம் அதிகமாகக் கிடைக்க, எப்படி வேண்டுமானாலும் படம் பண்ணலாம் என்று ஒருநாளும் நினைத்ததே இல்லை. முள்ளும் மலரும், நெஞ்சத்தைக் கிள்ளாதே, உதிரிப்பூக்கள், ஜானி படங்களையெல்லாம், நானாபடேகர், தேவ் ஆனந்த், சிரஞ்சீவி என பலரும் இந்தியிலும் தெலுங்கிலும் ரீமேக் செய்யக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். ‘வேணாமே’ என்று ஒற்றை வார்த்தையில் மறுத்துவிட்டார் அப்பா.

இத்தனைக்கும் ‘காலைல சாப்பிடுறோம். மத்தியானம் சாப்பாடு இருக்குமா, கிடைக்குமா’ என்கிற நிலையில் கூட இருந்திருக்கிறோம். ‘ரீமேக்’ பண்ணவேண்டியதுதானே என்று அப்பாவிடம் கேட்டால், ‘அதுஎதுக்கு பண்ணனும். திரும்பவும் அதே கதை, அதே வசனம், அதே ஷாட். செம போர். ஒருபடத்தை ஒருதடவைதான் எடுக்கணும். திரும்ப எடுக்கும்போது அது மனசுக்கு திருப்தி தராது’ன்னு சொல்லிட்டார் அப்பா. அந்த அளவுக்கு சினிமாவை லவ் பண்ணினார் அவர்.

‘எனக்குன்னு ஒரு ஸ்டைலை உண்டுபண்ணித்தந்தவரே மகேந்திரன் சார்தான்’ என்று ரஜினி சார் சொல்லியிருக்கிறார். அது அப்படித்தானா என்று தெரியாது. ஆனால் அப்பாவுக்கென ஒரு மேனரிஸம் இருக்கும். அவர் கையை ஆட்டிப் பேசுவது, கண்கள் உருட்டிப் பேசுவது, கழுத்தைச் சாய்த்துப் பேசுவது என்று பேட்டிகளில் பார்த்திருக்கலாம். கொஞ்சம் கூர்ந்து பார்த்தால், ‘முள்ளும்மலரும் காளி’யின் நடை, பேச்சு, பார்வை, கையை ஆட்டிப் பேசுவது என எல்லாப்வற்றிலும் அப்பா தெரிவார்.

படத்தைப் பார்த்துவிட்டு, எங்கள் உறவினர்கள் பலருமே, ‘ரஜினி செய்றதையெல்லாம் பாத்தீங்களா. இவனையே மாதிரி இருக்கு’ என்று அப்பாவின் மேனரிஸம் பற்றிச் சொன்னார்கள்.

கடந்த மூன்று மாதங்களாக ரொம்பவே அவஸ்தைப்பட்டார். ‘உலகத்துல இருக்கிற எந்த அப்பாக்களுக்கு வேண்டுமானாலும் ஏதாவது நடக்கும். நம்ம அப்பாவுக்கு எதுவுமே நடக்காது. அவர் பிழைச்சுக்குவார்’ என்று நினைப்போமே. அப்படித்தான் நானும் நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரத்திலேயே அப்பாவை இழந்துவிட்டேன்’’

கண்களில் நீர் கசியத் தெரிவித்தார் ஜான் மகேந்திரன்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x