Last Updated : 22 Apr, 2019 11:37 AM

 

Published : 22 Apr 2019 11:37 AM
Last Updated : 22 Apr 2019 11:37 AM

ஓடிஓடி மூச்சுவாங்க பாடினேன் ‘அந்தநாள் ஞாபகம்’ பாட்டு’’ - டி.எம்.எஸ். உயர்ந்த மனிதன்’ நினைவுகள்

‘’அந்தநாள் ஞாபகம் வந்ததே... என்ற பாடலை ஓடி ஓடி மூச்சிரைக்கப் பாடினேன்’’ என்று உயர்ந்த மனிதன் படத்தில் பாடிய அனுபவங்களை டி.எம்.எஸ். முன்பொருமுறை தெரிவித்திருந்தார்.

ஏவிஎம் தயாரிப்பில், இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், சிவாஜி, வாணிஸ்ரீ, செளகார் ஜானகி, அசோகன், மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்த படம் ‘உயர்ந்த மனிதன்’. சிவாஜிகணேசனின் 125வது படம் இது.

1968ம் ஆண்டு, நவம்பர் மாதம் 29ம் தேதி இந்தப் படம் ரிலீசானது. கிட்டத்தட்ட படம் வெளியாகி, 50 ஆண்டுகளாகிவிட்டன. சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி’ திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியாரும் ஏவிமெய்யப்பச் செட்டியாரும் இணைந்து தயாரித்தனர். சிவாஜியின் 125வது படமான ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தை, ஏவிஎம் நிறுவனமே தயாரித்தது.

படம் வெளியாகி 50வது ஆண்டுவிழாவை, நடிகரும் சிவாஜியின் தீவிர ரசிகருமான ஒய்.ஜி.மகேந்திரன், மிகப்பெரிய விழாவாக நேற்று 21ம் தேதி கொண்டாடினார். இந்த விழாவில், வாணிஸ்ரீ, செளகார்ஜானகி முதலானோர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில், ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில், பாடியது குறித்து டி.எம்.செளந்தர்ராஜன் தான் பாடிய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டது நினைவுக்கு வந்தது.

இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டானது. என்றாலும் ‘அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே’ என்ற பாடல், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. எம்.எஸ்.வி. இசையமைத்திருந்தார்.

முன்பொருமுறை  இதுகுறித்து டி.எம்.எஸ். சொன்னார்.

‘’இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சு, படத்தின் கதையை ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். பால்யநண்பனை, ஒருமுறை சந்திக்கும் போது, பழசெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்போது நண்பனுடன் சேர்ந்து, ஓடியும் ஆடியும் மூச்சிரைக்கப் பாடுகிறார்கள் என்று காட்சியைச் சொன்னார்கள். பாட்டுக்குள்ளே மூச்சிரைப்பெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார்கள்.

ரிக்கார்டிங் தியேட்டரில் மெட்டு ரெடி. பாட்டு ரெடி. ‘ரெடி’ என்று சொல்லி கையசைத்ததும் நான் பாடவேண்டும். நான் என்ன செய்தேன் தெரியுமா. ரிக்கார்டிங் தியேட்டர் பகுதியில் ஓடிக்கொண்டே இருந்தேன். டயர்டாகும் வரை ஓடினேன். பிறகு அழைத்ததும். மூச்சுவாங்கியபடி... ‘அந்தநாள்... ஞாபகம்... வந்ததே... நண்பனே... நண்பனே...’ என்று மூச்சிரைத்தபடி பாடினேன். பாடிமுடித்ததும் எல்லோரும் கைத்தட்டிப் பாராட்டினார்கள்.

படத்தில், மூச்சு வாங்கியபடி சிவாஜி நடித்திருப்பார். படம் பார்த்த ரசிகர்களும் வெகுவாக ரசித்துக் கைத்தட்டி உற்சாகமானார்கள் என்று மறைந்த டி.எம்.எஸ். தன் அனுபவங்களைப் பகிர்ந்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x