Last Updated : 02 Apr, 2019 05:19 PM

 

Published : 02 Apr 2019 05:19 PM
Last Updated : 02 Apr 2019 05:19 PM

மகேந்திரன்... சாகாவரக் கலைஞன்!

தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்திருக்கிறார்கள். எத்தனையோ இயக்குநர்கள் இருக்கிறார்கள். இன்னும் எத்தனையோ இயக்குநர்கள் வருவார்கள். ஆனால், இத்தனை நீண்ட நெடிதான பட்டியலில், ஒரு சிலருக்கு மாற்றே இல்லை. அந்த இயக்குநர்களின் இடத்தை இட்டு நிரப்ப, எந்த இயக்குநர்களாலும் இயலாது. ‘இவர் படத்தைப் பார்த்துவிட்டுத்தான் இயக்குநராக வேண்டும் என விரும்பினேன்’ என போனவாரம் படம் தந்த இயக்குநர் வரைக்கும் சொல்லலாம். ஆனால், அப்படி எவரும் இவரைப் போல இதுவரை இயக்கியதே இல்லை. அந்த அவர்... மகேந்திரன்.

கதைகள் குறித்த புரிதலும் சினிமா மொழி தொடர்பான சிந்தனைகளும் மகேந்திரனுக்குள் மாறுபட்டிருந்தன. அது, நம் தமிழ் சினிமாவுக்கு வெகுதூரத்தில் இருந்தது. ‘நாம படம் எடுத்தா இப்படித்தான் எடுக்கணும்’ என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டே இருந்தது மகேந்திர நெருப்பு. ஆனால் அவரிடம் கதை கேட்க வந்தவர்களுக்கு, தன் சிந்தனைகளைத் திணிக்காமல், அவர்கள் கேட்டமாதிரியெல்லாம் கொடுத்து வெற்றிப்படங்களைத் தந்திருக்கிறார். ஆக, படைப்புகளில் சமரசப்படுத்திக்கொண்டார் மகேந்திரன்.

சிவாஜியின் ‘நிறைகுடம்’ அந்தக் காலகட்டத்தில் வந்த படங்களைப் போலவும் இருக்கும். சிவாஜி படம் மாதிரியாகவும் இருக்கும். அதனால்தான் மகேந்திரன் எழுதி, நடிகர் செந்தாமரை டிஎஸ்பி.செளத்ரியாக நடித்த ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை, சினிமாவாக்க முன்வந்தார் சிவாஜிகணேசன். சொந்தப்படமாகத் தயாரித்து, பி.மாதவனைக் கொண்டு இயக்கச் செய்தார். மகேந்திரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதினார். தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த போலீஸ் படங்களுள், மிக முக்கியமான படம் என்று இன்றைக்கும் பேசப்படுகிறது, ‘தங்கப்பதக்கம்’.

சினிமா மீது ஆசையோ அதில் சாதிக்கவேண்டும் என்கிற வெறியோ ஒருபோதும் இருந்ததில்லை மகேந்திரனிடம். ஆனால், நல்ல படைப்பு குறித்த அக்கறையும் கவலையும் தொடர்ந்துகொண்டே இருந்தது.  

ஜெய்சங்கர் நடித்த ‘சபாஷ் தம்பி’ படத்துக்கு கதை எழுதினார். கமல் நடித்த ‘மோகம் முப்பது வருஷம்’ படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதினார். எஸ்.பி.முத்துராமன் கமலையும் ரஜினியையும் வைத்து இயக்கிய ‘ஆடுபுலிஆட்டம்’ படத்தின் கதையும் வசனமும் இவர்தான். சுஜாதா நடித்த ‘வாழ்ந்து காட்டுகிறேன்’, ‘வாழ்வு என் பக்கம்,’ சிவாஜியின் ‘ரிஷிமூலம்’ ‘ஹிட்லர் உமாநாத்’ என பல படங்களில் கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். மலையாளப் படத்தின் ரீமேக் படமான ‘பருவமழை’ படத்துக்கு, கமல் அழைத்து எழுதவைத்தார். இவையெல்லாம், மகேந்திரன் பணியாற்றிய படங்கள்தான் என்றாலும் அவை, மகேந்திரன் படங்களில்லை.

நடுவே, அவர் வாழ்வில் எடுத்த முடிவுகள் இன்னும் இன்னும் அவரின் குணங்களுக்குச் சான்று. எந்த நிர்ப்பந்தமும் பெரிய அவமானங்களும் நேர்ந்திருக்காது. திடீரென, ‘காரைக்குடிக்கே போயிடலாம்’ என பலமுறை முடிவெடுத்து, கிளம்பிச் சென்றிருக்கிறார்.

அப்படியெல்லாம் மகேந்திரனை விட்டுவிடவில்லை காலம்.

78ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த திரையுலகமும் தமிழ் உலகமும் திரும்பிப் பார்த்தது. எல்லார் உதடுகளும் ‘மகேந்திரன்... மகேந்திரன்’ என உச்சரித்தன. அன்று முதல், மகேந்திரன் எனும் பெயர், மந்திரச்சொல்லானது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிதான் ‘முள்ளும் மலரும்’ ரிலீஸான நாள். அதுதான் மகேந்திரனின் முதல் படம். மகேந்திரன் படம். தான் நினைத்த சினிமாவை மகேந்திரன் எடுத்திருந்தார்.

அதுவரை தமிழ் சினிமாவின் கதை சொல்லும் பாணி வேறு.கேமிரா நகரும் விதம் வேறு. பின்னணி இசையின் வேலை வேறுவிதம். நடிகர்களின் நடிப்புத்திறனைக் காட்டும் உத்தி வேறு மாதிரியாக இருந்தது. ஆனால் ‘முள்ளும் மலரும்’ என்கிற ஒரே படம், ரஜினி முதற்கொண்டு பலரையும் அவர்களுக்கும் உலகுக்கும் அறியச் செய்தது. அதனால்தான் மகேந்திரனை இன்றைக்கும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது திரையுலகம்!

நாவலை, சினிமாவாக்கியவர்கள் பலர் உண்டு. நாவலுக்குக் கெட்டபெயர் வந்துவிடக்கூடாது. சினிமாவும் அதன் மொழியினூடே கலந்திருக்கவேண்டும். எழுத்தாளர் உமாசந்திரனின் நாவலைத்தான் படமாக்கினார் மகேந்திரன்.

அதுமட்டுமா? எழுத்தாளர் புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’ ‘உதிரிப்பூக்கள்’ படமானது. சிவசங்கரியின் படைப்பு ‘நண்டு’ என்றானது. பொன்னீலனின் கதை’ பூட்டாதபூட்டுக்கள்’ என வந்தது. இதிலொரு சுவாரஸ்யம்... 20 படங்களுக்கும் மேலே கதையும் வசனமும் எழுதிய மகேந்திரன், தான் இயக்குநரான போது, எழுத்தாளர்களின் படைப்புகளை சினிமாவாக்கினார். எழுத்து, இலக்கியம், திரைப்படம் ஆகியவற்றுக்கு ஒரு கோடு போட்டு, ரோடு போட்டு, பாலமும் அமைத்த பெருமை, மகேந்திரனுக்கு உரியது. இதில் ‘மட்டும்’ கூட சேர்த்துக்கொள்ளலாம், தப்பில்லை.

’’கதையின் கரு ஏதேனும் செய்யவேண்டும். ஒருநிமிடம்... அந்த நிமிடத்துக்குள் இதயத்துக்குள் புகுந்து என்னவோ செய்யும். அதை திரைமொழியாகக் கொண்டுவரவேண்டும். அது அடுத்தவேலை. அந்தத் திரைமொழிக்கு இசையின் பங்கு மிக முக்கியம்’’ என்று பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ள மகேந்திரன், ‘என் நண்பர் இளையராஜா இல்லாமல், என்னால் படங்களே பண்ணமுடியாது. என் மெளனத்தை இளையராஜா நன்கறிவார். என் உணர்வுகளையும் பாத்திர மாந்தர்களின் உளவியலையும் இளையராஜா புரிந்து உணர்ந்து வாத்தியங்களால், ரசிகர்களுக்குக் கடத்துவார்’’ என்று சொல்லும் மகேந்திரனுக்கு, சினிமாவில் வருகிற பாடல் காட்சிகள் மீது, ஒரு வருத்தமும் கோபமும் உண்டு. அப்படி வருத்தப்பட்டு கோபப்பட்ட மகேந்திரன் படத்தின் பாடல்கள் எல்லாமே, நம் மனசுக்குள் ஊடுருவிச் சென்று ஏதோ செய்யும் மாயங்கள் கொண்டவை.

‘முள்ளும் மலரும்’ படத்தில் கழைக்கூத்தாடிக்கான பின்னணி இசைதான், அண்ணன் தங்கைக் காட்சிகளுக்கு பின்னணியாக வந்துகொண்டே இருக்கும். ‘பாசமலர்’ படத்துக்குப் பிறகு குறிப்பிடத்தக்க, மிக யதார்த்தமான அண்ணன் தங்கை, காளியும் வள்ளியுமாகத்தான் இருப்பார்கள்.

சரத்பாபுவுக்கு ரஜினியை பிடிக்கவே பிடிக்காது. ஒருகட்டத்தில் தங்கையை மணம் செய்து கொள்கிற விருப்பத்தைத் தெரிவிப்பார். ‘நாளைக்கி டீக்கடைக்கு வந்துருங்க’ என்பார். அதேபோல் சரத்பாபு வந்திருப்பார். ரஜினி குறுக்கும்நெடுக்குமாக போவார். யார்யாரிடமோ பேசுவார். ‘டீ சாப்பிடுறீங்களா சார்’ என்று கேட்பார். தடக்கென்று வேறொரு முடிவு எடுத்துவிட்டு, சரத்பாபுவை அவமானப்படுத்துவார். அப்படியொரு அவமானங்களைத்தான், சமூகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதைத்தான் காட்சிப்படுத்தி, கைத்தட்டல் வாங்கியிருப்பார் மகேந்திரன்.

’இப்பவும் சொல்றேன் சார். உங்களை எனக்குப் புடிக்கலை’ என்று சொல்லிவிட்டு, தங்கையை அவர் திருமணம் செய்துகொள்ள அனுப்புவார்.

‘முள்ளும் மலரும்’ படத்தில் இருந்து தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளமுடிந்தது. மகேந்திரன் படங்களில், பெண்களின் உணர்வுகளும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளுமாகவே கதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சண்டைக் காட்சிகளைப் பார்த்து, விசிலடித்து, கைத்தட்டிப் பார்த்தவர்கள்தானே நாம். ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் மனைவியுடன் சேர்ந்து வாழச் சொல்லி, விஜயனிடம் பேசுவதற்கு ஆற்றங்கரைக்கு வருவார் சரத்பாபு. இருவருக்கும் சண்டை. அதைக் காட்சிப்படுத்தியிருக்கமாட்டார் மகேந்திரன். அங்கே சலனமே இல்லாமல் ஆற்று நீர் ஓடிக்கொண்டிருக்கும். அதுவொரு ஷாட். எல்லாவற்றுக்கும் வளைந்துகொடுக்கிற நாணல் புற்கள் க்ளோஸப். அதுவொரு ஷாட். கரையில் ஒய்யாரமாகப் படுத்துக்கொண்டிருக்கும் யாரோ ஒரு சிறுவன் தலைதூக்கிப் பார்ப்பான். அதுவொரு ஷாட். அடுத்து, சரத்பாபு ஆற்றுநீரில் கைமுகமெல்லாம் கழுவுவார். முகமெல்லாம் காயம். சட்டெயெல்லாம் அழுக்கு. கீழே கிடக்கும் கண்ணாடியை போட்டுக்கொண்டு, துண்டை எடுப்பார். அதை விஜயனுக்குத் தருவார். ‘நீங்க அடிச்சதை அப்படியே வாங்கிகிட்டேன். திருப்பி அடிக்கலியேனு நினைக்கலாம். உங்க மனைவி விதவையாவறதை நான் விரும்பல’ என்று சொல்லிவிட்டுச் செல்வார். இப்படியான காட்சிகளை, இந்த நூற்றாண்டு கண்ட சினிமாவில், பார்த்திருக்கவே முடியாது.

‘உதிரிப்பூக்கள்’ படத்தில் விஜயன், அஸ்வினியின் அந்த இரண்டு குழந்தைகளே பிரதானம். மிக மோசமான, சாடிஸ்ட் குணம் கொண்ட விஜயனிடம் அவர் மனைவியின் தங்கை வந்து, ‘நாளைக்கி கல்யாணம். கூப்புட வரலை. உங்க ஆசீர்வாதமும் எனக்குத் தேவையில்ல. கல்யாணம் முடிஞ்சு ஊருக்குப் போறேன். பசங்க ரெண்டுபேரையும் எங்கூட விட்ரு. நான் கூட்டிட்டுப் போறேன்’ என்பார்.

அப்போது கதவைச் சாத்துவார் விஜயன். அந்தப் பெண்ணின் புடவை, பாவாடை, ரவிக்கை என எல்லாத்துணிகளையும் கழற்றி எறிவார். அந்தப் பெண் குறுகிக்கதறுவாள். ‘பயப்படாதே. நான் உன்னைத் தொடமாட்டேன். உன்னை இப்படிப் பாத்த முத ஆள் நானா இருக்கணும். அதான் என் ஆசை. இனிமே ஒவ்வொரு நாளும் என் நெனப்பு வரணும் உனக்கு. இதுதான் நான் கொடுக்குற ஆசீர்வாதம்’ என்பார்.

கடைசியில் ஊரே சேர்ந்து அப்படியொரு முடிவு எடுக்கும். ’இந்த ஊர் இனிமே நிம்மதியா இருக்கணும்னா, நீயே உன் முடிவை எடு’ என்று ஆற்றில் மூழ்கி இறக்கச் சொல்லும். ‘இதுவரைக்கும் நான் கெட்டவனா இருந்தேன். இப்ப இந்த முடிவை நீங்க எடுத்திருக்கீங்க. உங்க எல்லாரையும் என் பக்கம் கொண்டுவந்துட்டேன். நான் செஞ்சதுலயே இதான் பெரிய தப்பு’ என்பார்.

குழந்தைகளுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, ‘நல்லாப்படிக்கணும். நல்லபேரு எடுக்கணும். அப்பா குளிக்கப் போறேன்’ என்று சொல்லிவிட்டு திரும்புவார். அந்த ஆறு சலனமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். ஊரே இறுக்கமாகும். நல்லவர்கள் தடுக்கப் பாய்வார்கள். ஆனால் அவர்களை தடுத்துவிடுவார்கள். மீண்டும் அந்த ஆறு சலனமே இல்லாமல் தன் பயணத்தைத் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.

மெளனம்... மெளனம்... மெளனம். நண்டும்சிண்டுமாக இருக்கிற அந்த இரண்டு குழந்தைகளும், ஆற்றங்கரையில், தண்ணீரைப் பார்த்துக்கொண்டே ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்னணியில் அந்த இசை நம்மைச் சாகடிக்கும். படம் முடியும். ஆனாலும் அந்த சோகம் இத்தனை வருடங்கள் கழித்தும் மனதுள் ஓர் உருளையாய் சுற்றிக்கொண்டே இருக்கின்றன. அதுதான் மகேந்திரன் படைப்பாளியின் ஆளுமை.

‘உதிரிப்பூக்கள்’ போலவே ’நண்டு’ படத்திலும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருப்பார். ‘மெட்டி’ படத்தின் சிக்கலான கதையையும் பெண்களின் வெவ்வேறுபட்ட உணர்வுப்பாடுகளையும் மகேந்திரனால் மட்டுமே அப்படிக் கவிதையாகவும் கதையாகவும் காட்சிமைப்படுத்தமுடியும்.

அவரின் எந்தப் படமாக இருந்தாலும் ‘இது மகேந்திரன் படம்’ என்று பெருமையாகச் சொல்லுகிறோம். அப்பேர்ப்பட்ட மகேந்திரன், தன் எல்லாப் படங்களிலும் கதை எழுதிய உமாசந்திரன், புதுமைப்பித்தன், பொன்னீலன், சிவசங்கரி என படைப்பாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து டைட்டிலில் பதிவிட்டிருப்பார்.

ஏதேனும் ஒருவரின் வாழ்க்கை, அதில் நடந்த அழுத்தமான சம்பவம் என்பதுதானே கதையாகும். ஆனால் மகேந்திரன் எனும் மகாபடைப்பாளி ஊடுருவும் ஆற்றல் கொண்டவர். இதற்கு உதாரணம் ஒன்று... மும்பையில் ஒருவேலையாகப் போயிருந்த மகேந்திரன், அதிகாலையில் மாடியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்க, சாலையில் ஒரு பெண், ஜாக்கிங் போய்க்கொண்டிருந்தாள். உடனே அவர் மனதுள் கேள்வி. பல கேள்விகள். ‘ஒரு பெண் தன் வாழ்நாளில், எதுஎதுக்கெல்லாம் ஓடவேண்டியிருக்கு’ என யோசித்தார். அதிலிருந்து வந்ததுதான் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’.

‘முள்ளும் மலரும்’ ஷோபா, ‘உதிரிப்பூக்கள்’ அஸ்வினி, ‘மெட்டி’ ராதிகா, ‘கைகொடுக்கும் கை’ ரேவதி, ‘நண்டு’ அஸ்வினி, ‘பூட்டாதபூட்டுகள்’ சாருலதா, ‘ஜானி’ ஸ்ரீதேவி, தீபா, என பெண் கதாபாத்திரங்கள், நமக்குள் ஏற்படுத்துகிற தாக்கம், நம் வாழ்க்கைப் பயணம் போலவே நீண்ட நெடியதானது.

‘நண்டு’ படத்தில் ஓர் பாடல்..

’அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...

சொல்லித்தந்த வானம் தந்தையல்லவா’

தமிழ் சினிமாவில் தாயும் தந்தையுமாக இருந்து மகேந்திரன் சொல்லித்தந்திருப்பது, இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்து வருகிற பிள்ளைகளுக்கும் சத்தான பாடம்; வேதம்!

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களின் பட்டியலிலும் இந்திய சினிமாவின் சிறந்த படங்களின் பட்டியலிலும் மகேந்திரனின் படங்கள், முக்கியமான இடத்தில் இருக்கின்றன. தமிழ் ரசிகர்களின் மனதிலும் மகேந்திரன் அப்படியொரு இடத்தில், ஸ்தானத்தில் இருக்கிறார்; எப்போதும் இருப்பார்.

‘சீதக்காதி’ படத்தில் நீதிபதியாக வரும் மகேந்திரன் சொல்லுவார்... ‘’கலைக்கும் சரி, கலைஞனுக்கும் சரி... சாவு கிடையாது. ஏதோவொரு தருணத்தில் அவை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். கலைஞன் வெளிப்பட்டபடியே இருப்பான்.

மகேந்திரன் எனும் கலைஞன்... சாகாவரம் பெற்ற உணர்வுபூர்வக் கலைஞன்! உன்னதப் படைப்பாளி. மகேந்திரனுக்கு மரணமே இல்லை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x