Published : 07 Mar 2019 06:43 PM
Last Updated : 07 Mar 2019 06:43 PM

விஜய் சேதுபதி படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியது ஜீ தமிழ் டிவி

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மாமனிதன்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, ஜீ தமிழ் டிவி கைப்பற்றியுள்ளது.

சீனு ராமசாமி இயக்கிய ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்தார். இதில், ‘இடம் பொருள் ஏவல்’ இன்னும் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், நான்காவது முறையாக ‘மாமனிதன்’ படத்தில் இணைந்தது விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி. இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். ‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து யுவன் தயாரித்துள்ள இரண்டாவது படம் இது.

இந்தப் படத்தில் ஹீரோயினாக காயத்ரி நடித்துள்ளார்ர். ‘இமைக்கா நொடிகள்’ படத்தைத் தொடர்ந்து, இதிலும் விஜய் சேதுபதியின் மகளாக நடித்துள்ளார் மானஸ்வி. இவர், நடிகர் கொட்டாச்சியின் மகள். இதில், ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த பிப்ரவரி 11-ம் தேதியுடன் முடிவடைந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ‘தர்மதுரை’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் சுகுமார்.

இந்தப் படத்துக்கு இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை, ஜீ தமிழ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x