Published : 05 Mar 2019 16:52 pm

Updated : 05 Mar 2019 16:52 pm

 

Published : 05 Mar 2019 04:52 PM
Last Updated : 05 Mar 2019 04:52 PM

அவதார நடிகர் நாசருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!

இவரைப் பிடிக்கும், அந்த நடிகரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள். இவரைப் பிடித்ததாலேயே அவரைப் பிடிக்காது என்று சொல்லுபவர்களும் உண்டு. ஆனால், தமிழ்த் திரையுலகில், எல்லோருக்கும் பிடித்த நடிகர்கள் என்றொரு பட்டியல், எப்போதுமே உண்டு. டி.எஸ்.பாலையா, எஸ்.வி.ரங்காராவ் என்றெல்லாம் நீள்கிற பட்டியலில் இந்தக் காலகட்டத்தில் முக்கியமானவர்... நாசர்.

நாசரை எல்லோருக்கும் பிடிக்கும். எந்தக் கேரக்டரில் அவர் நடித்தாலும் பிடிக்கும். செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் நாசர். நன்றாகப் படித்துக் கொண்டிருக்கும்போதே, நடிப்பின் மீதும் ஈர்ப்பு ஏற்பட்டது. நடிப்புப் பயிற்சிக்குள் இறங்கினார். செங்கல்பட்டில் இருந்து எலெக்ட்ரிக் ரயிலில் மாம்பலம் வந்து இறங்கி, அங்கே முகம் கழுவிக்கொண்டு, அந்தப் பக்கம் கோடம்பாக்கம், தி.நகர் சினிமா அலுவலகங்கள், மயிலாப்பூர் பக்கம் என்றெல்லாம் சான்ஸ் கேட்டு அலைந்தார்.


அப்படித்தான் ஒருநாள், மயிலாப்பூரில் உள்ள அந்த அலுவலகத்துக்குச் சென்றுவிட்டு, புகைப்படங்கள், நண்பனின் போன் நம்பர் எனக் கொடுத்துவிட்டு வந்தார். நாலாம்நாள், நண்பருக்கு போன் வந்தது. நாசரின் நண்பருக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. பதட்டமாகிப் போனார்.

வழக்கம் போல், செங்கல்பட்டில் ரயிலேறி, மாம்பலத்தில் இறங்கி, வழியெல்லாம் சான்ஸ் கேட்டுக்கொண்டு, பிறகு ராயப்பேட்டையில் உள்ள நண்பனைப் பார்க்க வந்தார். நண்பர், விஷயத்தைச் சொல்ல, ராயப்பேட்டையில் இருந்து மயிலாப்பூருக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றடைந்தார் நாசர். அன்றிலிருந்து திரையுலகம் இவரின் கால்ஷீட் கேட்டு தொடர ஆரம்பித்தது.

அன்றைக்குக் கிடைத்தது வாய்ப்பு. படம்... கல்யாண அகதிகள். வாய்ப்பை வழங்கியவர்... கே.பாலசந்தர். படத்தில் சிறிய ரோல்தான். ஆனாலும் கவனிக்கவைத்தார்.

85ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை அடுத்து, அடுத்தடுத்து வாய்ப்புகள். மணிரத்னத்தின் ‘நாயகன்’ படத்தில், போலீஸ் ஆபீசர் கேரக்டரில் கலக்கியெடுத்தார். ‘யாரு... யாரு போன்ல? யாரு கூட பேசிட்டிருந்தே?’ என்று மனைவியிடம் கேட்கும் இடத்தில், தனித்துத் தெரிந்தார்.

கவிதாலயா படங்களில் தொடர்ந்து நடித்தார். அதேபோல், சத்யா, அபூர்வசகோதரர்கள் என கமலின் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். நல்ல நல்ல கதாபாத்திரங்களால், இவர் ஒளிர்ந்தார். இவரால், அந்தக் கேர்கருக்கு உயிரூட்டப்பட்டது. ‘தேவர்மகன்’ மாயனும் ‘குருதிப்புனல்’ படத்தின் பத்ரி தீவிரவாதியும் மலைக்கவைத்தார்களென்றால், அங்கே அதில் நாசரின் நடிப்பும் உழைப்பும் பிரமிக்கத்தக்கது என்றுதான் சொல்லவேண்டும்.

அப்படியொரு கொடூர வில்லனாக நடித்துக்கொண்டிருக்கும் போதே, ‘மகளிர் மட்டும்’ படத்தின் காமெடி ஹீரோவாக மூக்கனாக, பிரமாதப்படுத்தினார். தடக்கென்று ‘அவதாரம்’, ‘தேவதை’, ‘முகம்’ மாதிரியான படங்களை இயக்கினார். வித்தியாசமான படங்கள் என்று இன்றைக்குக் கொண்டாடப்படும் அந்தப் படங்கள் ஏனோ வெற்றியடையவில்லை. அப்படி வெற்றி அடைந்திருந்தால், இயக்குநர் நாசரும் ஜெயித்திருப்பார்.

மின்சாரக் கனவு, வரவு எட்டணா செலவு பத்தணா, சந்திரமுகி, ஜீன்ஸ், அவ்வை சண்முகி, பூவெல்லாம் கேட்டுப்பார், இம்சை அரசன் 23ம் புலிகேசி, பாகுபலி என எத்தனையோ படங்கள். அத்தனையிலும் முத்திரை காட்டினார். மிகச்சிறந்த நடிகர் என்பதை இன்றைக்கும் பறைசாற்றிக்கொண்டே இருக்கிறார். ’இந்தியன்’ படத்தில் நெடுமுடிவேணுவுக்கு குரல் கொடுத்து அசத்தியதையும் மறந்துவிடமுடியாது.

ஒப்பற்ற நடிகராக, கலைஞராக, சமூக அக்கறை கொண்ட மனிதராகத் திகழும் நாசர், தற்போது நடிகர் சங்கத்தலைவராகவும் பொறுப்பேற்று செயலாற்றி வருகிறார்.

அற்புத நடிகர் நாசருக்கு இன்று (5.3.19) பிறந்தநாள். மனம் கனிந்த வாழ்த்துகள் நாசர் சார்.

தவறவிடாதீர்!

    நாசர்நடிகர் சங்கத் தலைவர்நாசர் பிறந்த நாள்தமிழ் சினிமாகமல்ஹாசன்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    More From This Category

    More From this Author

    x