Last Updated : 08 Mar, 2019 12:11 PM

 

Published : 08 Mar 2019 12:11 PM
Last Updated : 08 Mar 2019 12:11 PM

கோடைகாலம் வருகிறது: வெப்பத்தைத் தாங்குமா கோலிவுட்?

2019 கோடைகாலத்தில் தமிழில் என்னென்ன பெரிய படங்கள் வெளியாகவுள்ளன என்பது பற்றி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எப்போதும் போல ஹாலிவுட் படங்கள் வெளியீடு தேதியை முன்னமே அறிவித்துவிட்டன.

ஏப்ரல் 26 அன்று மார்வல் ஸ்டுடியோவின் மிகப் பிரம்மாண்ட திரைப்படமான 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்', தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியாவது உறுதியாகிவிட்டது. இப்போதே இதற்கான திரையரங்க ஒப்பந்தங்கள் ஆரம்பித்துவிட்டன.

ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள் தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களின் விடுமுறைக் காலகட்டம் என்பதால், திரைப்பட வெளியீட்டுக்கான சிறந்த காலமாக இது கருதப்படுகிறது. நிறைய படங்கள் வெளியாகவுள்ளதாக சொல்லப்பட்டாலும் இன்னும் எதுவும் உறுதி செய்யப்படவில்லை. கடைசி நிமிடத்தில் உறுதியாகும் என்று தெரிகிறது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், "நிறைய தயாரிப்பாளர்கள் எங்களை அணுகி அவர்களது படங்கள் கோடையில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே நாங்கள் சரியான தேதிகளை உறுதி செய்வோம். வரப்போகும் தேர்தலை மனதில் வைக்க வேண்டும். ஏனென்றால் பிரச்சார காலமும், தேர்தல் தேதியும் கண்டிப்பாக வசூலைப் பாதிக்கும். தேர்தல் முடிந்த பின்னரே வியாபார நிலை பழையபடி மாறும்" என்றார்.

தேர்தலைத் தாண்டி, ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் ஆகியவையும் தயாரிப்பாளர்களை யோசிக்க வைத்துள்ளன. ஐபிஎல் மார்ச் 23 அன்று தொடங்குகிறது. கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதால் இந்த வருட ஐபிஎல் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. 

தமிழக இளைஞர்களுக்கு கோலிவுட்டும், சிஎஸ்கேவும் ஒன்று தான். முக்கியமாக நகரங்களில் இருப்பவர்களுக்கு. மே 30 உலகக் கோப்பையும் தொடங்கவுள்ளதால் சினிமா பின்னடைவைச் சந்திக்கும். மேலும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் நோன்பு இந்த வருடம் சற்று முன்னதாகவே தொடங்குகிறது. மே முதல் வாரத்தில் நோன்பு தொடங்குகிறது. ஈகைத் திருநாள் ஜூன் முதல் வாரத்தில் வரவுள்ளது. 

இந்தக் காலகட்டத்தில் இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழியில் எந்த பெரிய திரைப்படங்களும் வெளியாகாது எனத் தெரிகிறது. தெலுங்கு டப்பிங், கேரளா மற்றும் கர்நாடகா என வசூலிக்கும் பெரிய தமிழ் படங்களும் இந்த மாதத்தில் வெளியீட்டைத் தவிர்த்துவிடும். ஏனென்றால் நோன்புக் காலத்தில் இந்திய பாக்ஸ் ஆபிஸ் வசூலும், சர்வதேச சந்தை வசூலும் மந்தமாகவே இருக்கும்.

அஜித் குமார் நடிப்பில் 'பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'நேர்கொண்ட பார்வை' மே 1-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். ஆனால் படம் ஜூன் அல்லது ஜூலைக்கு தள்ளிப்போகும் என வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விக்ரமின் 'கடாரம் கொண்டான்', ஜீவாவின் 'கீ' மற்றும் 'கொரில்லா', சசிகுமாரின் 'கொம்பு வச்ச சிங்கம்டா' ஆகிய படங்களும் கோடையில் வெளியாகத் தயாராகியுள்ளன. 

- ஸ்ரீதர் பிள்ளை, தி இந்து (ஆங்கிலம்) | தமிழில் கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x