Last Updated : 08 Mar, 2019 01:25 PM

 

Published : 08 Mar 2019 01:25 PM
Last Updated : 08 Mar 2019 01:25 PM

’விளக்கு வைச்ச நேரத்துல’ பாட்டும் நம்பியார் சாரும்! - கே.பாக்யராஜ் பேட்டி

’முந்தானை முடிச்சு’ படத்தில் ‘விளக்கு வைச்ச நேரத்துல’ பாட்டுக்கும் நம்பியார் சாருக்கும் ஒரு தொடர்பு உண்டு என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

நடிகர் எம்.என்.நம்பியார், சினிமாவில்தான் வில்லன். அதுவும் மிரட்டியெடுக்கிற வில்லன். ஆனால் அவரைப் போல் நல்லவரில்லை என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறது திரையுலகம்.

இது நம்பியாரின் நூற்றாண்டு. நேற்றுதான் (மார்ச் 7ம் தேதி) அவருக்குப் பிறந்தநாள். 100வது பிறந்தநாள். திரையுலகில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி எனத் தொடங்கி கமல், ரஜினி வரைக்கும் வில்லனாக நடித்த நம்பியாரை, இதுவரை ஏற்றிடாத குணச்சித்திர வேடத்தில் நடிக்க வைத்த பெருமை, நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜுக்கு உண்டு. ‘தூறல் நின்னுபோச்சு’ படத்தில், குஸ்தி வாத்தியார் கேரக்டரில் நம்பியாரை குணச்சித்திரக் கேரக்டர் ப்ளஸ் காமெடி என இரண்டுவிதமாகவும் நடிக்கச் செய்திருந்தார் பாக்யராஜ்.

நம்பியாருடனான அனுபவங்களை இயக்குநர் பாக்யராஜிடம் கேட்டோம். அவர், நம்மிடம் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

கே.பாக்யராஜ் தெரிவித்ததாவது:

‘நம்பியார் சாருடன் நெருங்கும் பழகும் வாய்ப்பு, எனக்கு ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில்தான் கிடைத்தது. எல்லா விஷயங்கள்லயும் ஒரு நேர்த்தியும் உண்மையும் அவர்கிட்ட இருந்துச்சு. கரெக்ட் டயத்துக்கு ஸ்பாட்ல இருப்பார். காலைலயும் சாயந்திரத்துலயும் உடற்பயிற்சி செய்வார். காபி, டீ, பால் எதுவும் கிடையாது. நொறுக்குத்தீனியைத் தொடக்கூடமாட்டார்.

அதேபோல சைவ உணவுதான் எப்பவுமே. அதுமட்டுமில்ல... அவர் ஷூட்டிங் வந்தார்னா, அவர் மனைவியையும் கூட்டிட்டு வந்துருவாரு. அவங்கதான் சமைச்சுப் போடுவாங்க. அப்படி அவங்க பரிமாற, நம்பியார் சாப்பிடுற காட்சியைப் பாக்கறதே, மனசுக்கு பூரிப்பா, ஒரு நிறைவா இருக்கும்.

அவங்க எதிர்ல உக்கார்ந்து சாப்பாடு பரிமாறுவாங்க. நம்பியார் சார், சாதத்தைப் பிசைஞ்சு, முதல் உருண்டையை மனைவிக்கு ஊட்டிவிடுவாரு. அதுக்குப் பிறகுதான் அவர் சாப்பிடுவாரு. இது ஏதோ நல்லநாள் பெரியநாள்னு இல்ல. தினமும் இப்படித்தான் நடக்கும். நம்பியார் சார் எப்ப சாப்பிட்டாலும் மனைவிக்கு முதல்வாய் கொடுத்துட்டுத்தான், சாப்பிட ஆரம்பிப்பார். இது என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணுச்சு. தவிர, மைண்ட்ல இந்த விஷயம் டிஸ்டர்ப் ஆகிட்டே இருந்துச்சு. ஏதாவது ஒரு படத்துல, எங்கேயாவது ஒரு சீன்ல, இதைச் சேக்கணும்னு நினைச்சிக்கிட்டே இருந்தேன்.

‘முந்தானை முடிச்சு’ல அதுக்கு ஒரு நல்ல சீன் கிடைச்சிச்சு. படம் ஆரம்பிக்கும் போது, அதாவது முதல் சீன்... ஆத்தோரத்துல, வயசான ஒருத்தர் உக்கார்ந்திருப்பாரு. அவங்க மனைவியான பாட்டியம்மா, சாப்பாடு கொண்டு வருவாங்க. அவருக்கு எதிர்ல அக்கடான்னு உக்கார்ந்து, சாப்பாடு கொடுப்பாங்க. அவர் அந்தச் சாப்பாட்டுலேருந்து முதல் உருண்டையை மனைவிக்கு ஊட்டிவிடுவாரு. ‘விளக்கு வைச்ச நேரத்துல மாமன் வந்தான்’னு பாட்டு ஸ்டார்ட் ஆகும். அப்பதான் டைட்டிலே ஆரம்பிக்கும்.

அந்த சீனுக்கு நம்பியார் சாரோட பர்ஸனல் ஸ்டைல்தான் இன்ஸ்பிரேஷன். இன்னிக்கும் ‘முந்தானை முடிச்சு’ படத்துல, அந்த ஓபனிங் சீனுக்கும் படத்தோட டைட்டிலும் எவ்ளோ கனெக்ட்டிவிட்டி இருக்குன்னு நிறையபேர் எங்கிட்ட சொல்லுவாங்க.

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x