Published : 30 Mar 2019 01:26 PM
Last Updated : 30 Mar 2019 01:26 PM

சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தமிழ்த் திரையுலகினர் புகழாரம்

'சூப்பர் டீலக்ஸ்' படத்துக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'. விமர்சன ரீதியாக பலராலும் கொண்டாடப்பட்டு வரும் இப்படம், வசூல் ரீதியாக எப்படி என்பது இன்னும் ஓரிரு தினங்களில் தெரிந்துவிடும்.

'ஏ' சான்றிதழ் படம் என்பதால், இதர படங்களின் வசூல் போல் இருக்காது என்று கணித்துள்ளனர். ஆனால், விஜய் சேதுபதி, சமந்தா, மிஷ்கின் என பலரும் நடித்துள்ளதால், இதன் வசூல் நிலவரம் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்நிலையில், 'சூப்பர் டீலக்ஸ்' படத்தை பல்வேறு தமிழ்த் திரையுலகினர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் புகழ்ந்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்: 'சூப்பர் டீலக்ஸ்' சூப்பர் கொண்டாட்டம், சூப்பர் தத்துவார்த்தம். குமாரராஜா சாரும், அவரது அணியும் அதிரடியாக மீண்டும் களமிறங்கியிருக்கின்றனர். திரையரங்கில் இந்தப் படத்தைத் தயவுசெய்து தவறவிடாதீர்கள். இந்த அணிக்குப் பெரிய வாழ்த்துகள். அனைவரின் நடிப்பும் பிடித்தது. ஆனால், எனக்கு மிகவும் பிடித்தது ராசுக்குட்டியும் ஷில்பாவும். அட்டகாசம்.

தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி: 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் கதை, நடிகர்கள், களம், எடுக்கப்பட்ட விதம் அனைத்தும் பிடித்தது. இந்தத் தலைமுறையில் அதிக பன்முகத்தன்மை கொண்ட நடிகர் விஜய் சேதுபதி. சமந்தா, உங்களின் நடிப்பும் ரொம்பப் பிடித்தது. வாழ்த்துகள் தியாகராஜன் குமாரராஜா.

இயக்குநர் பா.இரஞ்சித்: குமாரராஜா அண்ணனிடமிருந்து மீண்டும் ஒரு அற்புதப் படைப்பு. திறமையான திரைக்கதை. 'சூப்பர் டீலக்ஸ்' அற்புதம்.

அசோக் செல்வன்: 'சூப்பர் டீலக்ஸ்' ஒரு மாஸ்டர் பீஸ். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா ஒரு ஆசான். படம் கொடுத்த அனுபவம் நீண்ட நாட்கள் என் நினைவில் இருக்கும். ரொம்பப் பிடித்தது. படத்தை தியேட்டருக்குச் சென்று பாருங்கள். நமது தேசத்திலிருந்து வந்த சிறந்த படங்களில் ஒன்று. தவறவிடாதீர்கள். விஜய் சேதுபதி அண்ணா அட்டகாசம். படத்துக்குப் படம் அவரை அதிகமாக நேசிக்க மட்டுமே முடியும். சமந்தா அற்புதம். சரி, இந்தப் பட்டியல் பெரியது. ஒவ்வொரு நடிகரின் நடிப்பையும் ரசித்தேன். பகவதி பெருமாள் பக்ஸ் ஒரு இன்ப அதிர்ச்சி. தலைவன் யுவன் ஷங்கர் ராஜா எப்போதும் போல தீவிரமான இசை.

வைபவ்: 'சூப்பர் டீலக்ஸ்', புத்திசாலித்தனமான, ஆழமான, உத்வேகம் தரும் சினிமா. நேற்றிரவு பார்த்ததிலிருந்து ஆச்சரியத்தில் இருக்கிறேன். ஷில்பா டார்லிங்காக விஜய் சேதுபதியின் நடிப்பை மிகவும் ரசித்தேன். ரம்யா கிருஷ்ணன் நடிப்பு எப்போதும் போல தாக்கத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் மித்ரன்: ஒரு பெரிய பீரங்கியை எடுத்துக் கொண்டு மனிதர்கள் உருவாக்கிய ஒவ்வொரு சமூக கட்டமைப்பையும் உடைத்தால் என்ன ஆகும்? அதுதான் 'சூப்பர் டீலக்ஸ்'. குழந்தை வளர்ப்பு, நட்பு, மதம், சரி - தவறு என அனைத்துக்குமான வரையறையை மாற்றி அமைத்துள்ளது. இயற்கையிலிருந்து இயல்பை வேறுபடுத்தும் அடிப்படை விதிகளையே படம் கேள்வி கேட்கிறது. அசந்து விட்டேன்.

நடிகர் கதிர்: தியாகராஜன் குமாரராஜா, யுவன் ஷங்கர் ராஜா, சமந்தா, ஃபஹத் ஃபாசில், பகவதி பெருமாள், காயத்ரி, என் இனிய ஷில்பா விஜய் சேதுபதி, ராசுக்குட்டி அனைவருக்கும் என் மரியாதை மற்றும் வணக்கங்கள். ஒவ்வொருவரும் அவர்களுடைய பங்கை மிகச்சரியாகக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு நடிகனாக இந்த அரக்கர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. 'சூப்பர் டீலக்ஸ்' வேற லெவல்

இயக்குநர் ரவிக்குமார்: 'சூப்பர் டீலக்ஸ்' மிகத்தரமான உலக சினிமா என்று சொன்னால் மிகையாகாது! அப்படியாப்பட்ட எழுத்து மற்றும் இயக்கம். நல்ல படம் பார்க்கும்போதெல்லாம் வரும் அதே கூச்சம் வருகிறது. படத்தில் எல்லோருக்கும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியே தீர வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை, அதிலும், விஜய் சேதுபதியின் நடிப்பு சொல்வதற்கில்லை. ஒளிப்பதிவும் கலை இயக்கமும் உலகத்தரம். ஆழ்ந்த சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம். மற்றவர்களுக்கு சுவாரஸ்யம் உறுதி. தவறாமல், தவறவிடாமல் பார்க்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x