Last Updated : 05 Mar, 2019 04:55 PM

 

Published : 05 Mar 2019 04:55 PM
Last Updated : 05 Mar 2019 04:55 PM

நைட் 11.30 மணிக்கு சிவாஜி சார்கிட்டேருந்து போன்’ - நெகிழ்ந்த நாசர்

‘நைட் 11.30 மணிக்கு சிவாஜி சார்கிட்டேருந்து போன் வந்துச்சு’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் நாசர்.

கமல்ஹாசனின் ‘தேவர் மகன்’ படத்தில், சிவாஜி, கமல், நாசர், காகா ராதாகிருஷ்ணன், வடிவேலு முதலானோர் நடித்திருந்தனர். சிவாஜியின் மகன் சக்திவேலாக கமல், காகா ராதாகிருஷ்ணனின் மகன் மாயனாக நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். ரேவதி, கவுதமி, ரேணுகா முதலானோர் நடித்திருந்தனர். 

இந்தப் படத்தில் சிவாஜி, கமல், நாசர் முதலானோர் பங்கு பெறும் பஞ்சாயத்துக் காட்சி வெகு பிரசித்தம்.

இதுகுறித்து, நாசர் ஒருமுறை விவரித்ததாவது:

‘தேவர் மகன்’ படத்தில், குறிப்பிட்ட பஞ்சாயத்துக் காட்சியில் நடிப்பதற்கு எனக்கு அச்சமாகவும் பயமாகவும் இருந்தது. அந்தக் காட்சியில், சிவாஜி சாரை, கொஞ்சம் நக்கலாகவும் தரக்குறைவாகவும் பேசவேண்டும். ஆனால் என்னால் அப்படிப் பேசி நடிக்கமுடியவில்லை.ஆனால், கதைப்படி அந்தக் காட்சி ரொம்ப முக்கியம்.

இந்தக் காட்சிக்குப் பிறகுதான், சிவாஜிக்கு உடல் சோர்வும் மனச்சோர்வும் ஏற்படும். அடுத்த காட்சியில், பேரக்குழந்தைகளுடன் இருப்பார். இறந்துவிடுவார். எனவே அந்தக் காட்சியின் முக்கியத்துவம் நன்றாகத் தெரிந்திருந்தும், என்னால் நடிக்கமுடியவில்லை. சிவாஜி சார், மகாகலைஞர். அவர் படங்களைப் பார்த்து, நடிக்க வந்தவன் நான். நடிப்பில் மேதை அவர். அவரை, யோவ் என்று கூப்பிட்டு, அவரை அவமானப்படுத்துவது போல் பேசி, எப்படி நடிக்கமுடியும் என்னால்?

பல டேக்குகள் வாங்கிக்கொண்டிருந்தேன். இதை அறிந்துகொண்ட சிவாஜி சார், ‘அவனைக் கூப்புடு’ என்று சொல்லிவிட்டார். நான் அவரிடம் சென்றதும், ‘கூச்சப்பட்டா, பயந்துட்டா நடிக்கமுடியாது. இதுமாதிரி எனக்கும் பல இக்கட்டான சூழ்நிலைகள் வந்திருக்குதான். ஆனா, அதுக்காக நம்மளோட நடிப்பைக் காட்டாம இருக்கக்கூடாது. சும்மா நடி. நடிப்புதானே’ என்று பலவாறாகப் பேசி, என் இறுக்கத்தை தளர்த்தினார். அதன் பிறகுதான் நடித்தேன்.

இதன் பிறகு நான்கைந்து நாள் கழித்து, சிவாஜி சாருக்கு கமல் சார், பஞ்சாயத்துக் காட்சியை போட்டுக்காட்டினார். அன்று ஷூட்டிங் முடிந்து, இதையும் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்தவர், ‘அந்த பாய் (நாசர்) பயலுக்கு போனைப் போடு’ என்றாராம். அப்போது இரவு 11.30 மணி.

‘சிவாஜி ஐயா வீட்லேருந்து பேசுறோம். ஐயா, உங்ககிட்ட பேசணுமாம்’ என்று போனில் சொல்லப்பட்டது. நான் இன்னும் கலவரமானேன். நடுங்கியபடியே போனைப் பிடித்துக்கொண்டு நின்றேன். ‘டேய்.... பாய்... அந்த சீன்ல பிய்ச்சு உதறிட்டியேடா. உன் நடிப்புதான்டா அந்த சீன்ல பிரமாதமா இருக்கு. இன்னும் பெரியாளா வருவே’ என்று மனதாரப் பாராட்டி, ஆசீர்வதித்தார்.

இவ்வாறு நாசர் தெரிவித்தார்.

நாசரின் பிறந்தநாள் இன்று (5.3.19). மனமார்ந்த வாழ்த்துகள் நாசர் சார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x