Last Updated : 01 Mar, 2019 05:26 PM

 

Published : 01 Mar 2019 05:26 PM
Last Updated : 01 Mar 2019 05:26 PM

என் படத்தில் கருத்து சொன்னால் அன்பே சிவம் ரிசல்ட் தான்: இயக்குநர் சுந்தர்.சி

என் படத்தில் கருத்து சொன்னால் 'அன்பே சிவம்' மாதிரி தான் ரிசல்ட் என்று இயக்குநர் சுந்தர்.சி பேசியுள்ளார்.

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் 'ஹிப் ஹாப்' ஆதி, அனகா, ஹரிஷ் உத்தமன், விக்னேஷ் காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நட்பே துணை'. அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சுந்தர்.சி தயாரித்துள்ளார்.

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஒட்டுமொத்த படக்குழுவினருடன் இயக்குநர் சுந்தர்.சியும் கலந்து கொண்டார்.

இவ்விழாவில் சுந்தர்.சி பேசியதாவது:

''இணையத்தில் ரசித்துப் பார்த்த பலர் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள். 'எரும சாணி' விஜய்க்கு நான் பெரிய ரசிகன். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்தவுடன் இயக்குநரும் ஆதியும் போட்டுக் காட்டினார்கள். அதில் 'எரும சாணி' விஜய் என்னை மிகவும் கவர்ந்தார். தமிழ் சினிமாவில் காமெடிக்கு நல்ல இடம் இருக்கிறது. ஆனால், நம்ம ஆட்கள் விடமாட்டார்கள். நாயகனாக நடிக்க அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். கொஞ்ச நாளைக்காவது காமெடியனாக நடித்து பணம் சம்பாதியுங்கள். அப்புறமாக நாயகனாக நடிக்கலாம்.

'நட்பே துணை' படம் ஆரம்பிக்கும் போது, இவ்வளவு நாள் வெளியீட்டுக்கு ஆகும் என்று நினைக்கவில்லை. 3 சீரியல்கள், 2 படங்கள் முடித்துவிட்டேன். ஆனால், 'நட்பே துணை' படத்தைத் தான் இன்னும் வெளியிட முடியவில்லை. அதில் எவ்வித வருத்தமில்லை. ஏனென்றால் இப்படத்துக்காக அனைவருமே உழைத்துக் கொண்டே இருந்தார்கள்.

ஒரு நாள் காரில் சென்று கொண்டிருக்கும்போது அனகா தெருவோரத்தில் தீவிரமாக ஹாக்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அதைப் பார்த்ததும் இப்படத்தை அவருக்காகவே சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று கூறினேன்.

வெற்றி பெற்றால் 1000 பேர் தேடி வருவார்கள் என தெரியும். 'மீசைய முறுக்கு' படம் சரியாகப் போகவில்லை என்றால், உடனடியாக ஆதியை வைத்து மீண்டும் ஒரு படம் தொடங்க வேண்டும் என்று குஷ்புவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், படமோ ஹிட்டாகிவிட்டது. நிறைய தயாரிப்பாளர்கள் வருவார்கள் பிரச்சினையில்லை என்று நினைத்தேன். ஆனால், ஆதியோ 'நல்ல கதை ஒன்று இருக்கிறது. கேட்கிறீர்களா?' என்று சொன்னார். கேட்டேன், ரொம்பவே பிடித்திருந்தது.

இயக்குநராக நான் பண்ணும் படங்களில் அறிவுரை சொல்ல முடியவில்லை. என் படங்களில் பொழுதுபோக்கை மட்டுமே எதிர்பார்த்து வருவார்கள். கருத்து சொன்னால் 'அன்பே சிவம்' மாதிரி ரிசல்ட் கொடுத்துவிடுகிறார்கள். 'நட்பே துணை' கதையைக் கேட்டவுடன் ரொம்ப பாசிட்டிவாக இருந்தது. காதல், காமெடி, எமோஷன் என அனைத்துமே இருக்கிறது. இதெல்லாம் கடந்து நல்லதொரு பாசிட்டிவ் மூடு இருந்தது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன். ஏனென்றால் ஆதி என் குடும்பத்தில் ஒருவர் மாதிரி. அவருடைய வெற்றி எனக்கு ரொம்ப முக்கியம்''.

இவ்வாறு சுந்தர்.சி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x