Last Updated : 19 Sep, 2014 01:55 PM

 

Published : 19 Sep 2014 01:55 PM
Last Updated : 19 Sep 2014 01:55 PM

அனிருத் நெகிழ்ச்சி... சமந்தா கலாய்ப்பு... - கத்தி இசை வெளியீடு ஹைலைட்ஸ்!

விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட நடிக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருக்கும் படம் 'கத்தி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மாலை 4:30 மணிக்கு 'கத்தி' படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனால் பலத்த போலீஸ் பாதுக்காப்பிற்கு இடையே இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே, உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.

'கத்தி' இசை வெளியீட்டு விழாவின் சில துளிகள்:

* சிறப்பு விருந்தினர் என்று யாருமில்லாமல், படக்குழுவினரே படத்தின் இசை வெளியிட்டார்கள். இவர்களோடு படத்தின் இசையினை வாங்கியிருக்கும் ஈராஸ் நிறுவனத்தின் தென்னிந்திய தலைவர் செளந்தர்யா ரஜினிகாந்த் இணைந்துக் கொண்டார்.

* இயக்குநர் தரணி, விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் சிம்புதேவன், இயக்குநர் விஜய், அமலா பால், இயக்குநர் வசந்தபாலன், ஆர்யா, சிபிராஜ், சாந்தனு உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

* இசை வெளியீட்டு விழாவின் தொடக்கமாக 'பக்கம் வந்து' என்ற பாடலை ஹிப் ஹாப் ஆதி பாடினார். அதற்கு விளக்குகள் பொருத்தப்பட்ட ஆடையுடன் நடனமாடினார்கள். விளக்குகள் முழுவதும் அணைக்கப்பட்டு, நடனமாடியது பார்வையாளர்களுக்கு புதுமையாக இருந்தது.

* Lets take a Selfie pulla என்று விஜய் பாடிய பாடலுக்கு அவர் முன்னிலையில் நடனக் கலைஞர்கள் நடனமாடியது கண்டு ரசித்தார் விஜய்.

* "க்ரீன் பார்க் ஒட்டலில் ஏ.ஆர்.முருகதாஸைச் சந்தித்து, இப்படம் குறித்து பேசியது மறக்க முடியாத ஒன்று. நான் 6-வது படமே விஜய் படத்திற்கு இசையமைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மேடையில் ரொம்ப உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறேன். ஒவ்வொரு பாடலுமே, விஜய் மற்றும் அவரது ரசிகர்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவைதான். விஜய்யை போன்று ஒரு சிறந்த மனிதரை நான் இதுவரை கண்டதில்லை" என்று படத்தின் இசையமைப்பாளர் அனிருத் நெகிழ்ச்சியாக பேசினார்.

* 'கத்தி' டீஸரை இரண்டு முறை திரையிட்டார்கள். ஆயினும், விழாவிற்கு வந்திருந்த விஜய் ரசிகர்கள் மீண்டும் ஒருமுறை திரையிட வேண்டும் என்று ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தார்கள்.

* "இப்படத்தின் எனது நடிப்பிற்கும், வசன உச்சரிப்பிற்கும் விஜய் நிறைய உதவிகள் செய்தார். அவருடன் சண்டையிடும் காட்சிகளில் எல்லாம் நான் ஒரு நடிகனாகவே நடித்தேன். ஆகையால் அவரது ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு கொள்ள மாட்டார்கள்" என்று 'கத்தி' படத்தில் வில்லனாக நடித்திருக்கும் நீல் நிதின் முகேஷ் பேசினார்.

* "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், ஹீரோ விஜய், அனிருத் இசை, நான் விஜய்யோடு படம் முழுவதும் ஒரு ரோல் எப்படியிருக்கும் என்று அனிருத்திடம் கூறியிருக்கிறேன். ஏ.ஆர்.முருகதாஸ் என்னிடம் படம் குறித்து பேசிவிட்டு, விஜய் தான் ஹீரோ என்றார். நான் உடனே அனிருத்திற்கு போன் செய்தேன். அவரது போன் பிஸியாக இருந்தது. திரும்ப அவர் போன் செய்தார்.

ப்ரோ.. விஜய் படம் கமிட்டாகி இருக்கேன் என்று கூற, நான் தான் இசை என்று அனிருத் கூறினார். நான் நினைத்தது நடந்திருக்கிறது. 'காதலுக்கு மரியாதை' படத்திற்காக போஸ்டர், பேனர் எல்லாம் ஒட்டியிருக்கிறேன். அவரோடு நடித்ததை எல்லாம் மறக்க முடியாத தருணங்கள். விஜய் அவரது ரசிகர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பது அவரோடு பணியாற்றும் போது தான் புரிந்தது. எனது வீட்டில், சமந்தா போன்று ஒரு பெண்ணைத் தான் எனக்கு மணப்பெண்ணாக பார்க்கிறார்கள்" என்று படத்தில் விஜய்யோடு நடித்திருக்கும் சதீஷ் கூறினார்.

* "ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் துப்பாக்கி படம் சூப்பர் ஹிட் ஆனது. அதேபோல் இவர்கள் கூட்டணியில் கத்தி படம் உருவாக இருப்பதாக தகவல் தெரிந்ததும் இதில் விஜய் ஜோடியாக யார் என்று கடுமையான போட்டி நிலவி இருக்கும். அந்த சமயத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் எனக்கு போன் செய்து கத்தி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நீ தான் நடிக்க வேண்டும் என்று கூறியது. எனக்கும் மிகவும் சந்தோஷமாக இருந்தது. உடனே விமானத்தில் பறந்து வந்தேன்.

கவலைப்படாதே சதீஷ்.. நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று கலாய்ப்புடன் கூறினார் நாயகி சமந்தா. இவ்வாறு சமந்தா கூறியதும், அங்கிருந்த விளக்குகள் தாண்டி, சதீஷின் முகத்தில் அவ்வளவு உற்சாகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x