Published : 08 Mar 2019 10:26 AM
Last Updated : 08 Mar 2019 10:26 AM

ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இணையும் சிவப்பு மஞ்சள் பச்சை

சசி இயக்கத்தில் ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இணைந்து நடித்து வரும் படத்துக்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'பிச்சைக்காரன்'. 2016-ம் ஆண்டு வெளியான இப்படத்தை இயக்கியவர் சசி. முன்பாக 'சொல்லாமலே', 'பூ', 'டிஷ்யூம்' உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

'பிச்சைக்காரன்' படத்தைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார். அவர் உருவாக்கிய 2 நாயகர்கள் கதையில் ஜீ.வி.பிரகாஷ் - சித்தார்த் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள்.

இதன் படப்பிடிப்பு 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டியுள்ளது. அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

அக்கா - தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் வகையில் திரைக்கதையாக உருவாக்கி இப்படத்தை இயக்கியுள்ளார் சசி. அக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோளும், தம்பியாக ஜீ.வி.பிரகாஷும் நடித்துள்ளனர்.

இதில் லிஜோ மோள் கணவராக சித்தார்த் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் டிராபிக் காவல்துறையில் பணிபுரிபவராகவும் வருகிறார். பைக் ரேஸராக ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார்.

மேலும், காஷ்மீரா, மதுசூதனன், நக்கலைட் யூ-டியூப் குழுவின் நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு புதுமுக இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x