Published : 20 Mar 2019 05:25 PM
Last Updated : 20 Mar 2019 05:25 PM

நயன்தாரா படத்துக்காக தமிழகத்தைச் சுற்றிவரும் பேருந்து

நயன்தாரா நடித்துள்ள ‘ஐரா’ படத்தை விளம்பரப்படுத்துவதற்காக, ஒரு பேருந்து தமிழகம் முழுவதும் சுற்றிவர உள்ளது.

‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ படத்தை இயக்கிய கே.எம்.சர்ஜுன், நயன்தாராவை வைத்து ‘ஐரா’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.

படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார். யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அதிலும் ஐராவதம் யானை சிறப்பு வாய்ந்தது என்பதால், நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி ‘ஐரா’ எனப் பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளது படக்குழு.

ஒரு பேருந்தில், முன்பக்கக் கண்ணாடி தவிர மற்ற அனைத்து இடங்களிலும் ‘ஐரா’ படத்தின் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தப் பேருந்து, தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு சுற்றிவர இருக்கிறது. இதனால், படத்தைப் பற்றி பெரும்பாலான மக்களுக்குச் சென்றுசேரும் என படக்குழுவினர் கருதுகின்றனர்.

எந்த தமிழ்ப் படத்துக்கும் இதுமாதிரியான விளம்பரம் இதற்கு முன்னர் செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x