Published : 24 Mar 2019 09:20 PM
Last Updated : 24 Mar 2019 09:20 PM

நயன்தாரா குறித்த சர்ச்சைப் பேச்சு: ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலினை வலியுறுத்தும் விக்னேஷ் சிவன்

நயன்தாரா குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க திமுக தலைவர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் பேசும் போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வந்தார்கள்.

இந்த சர்ச்சை தொடங்கியவுடனே ராதாரவியை இயக்குநர் விக்னேஷ் சிவன் கடுமையாக சாடினார். மேலும், ராதாரவியின் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று கேட்டவரையும், கடுமையாக சாடி ராதாரவி... ராதாரவி... ராதாரவி போதுமா என்று தெரிவித்தார்.

தற்போது ராதாரவி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். மேலும்,  திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோரையும் குறிப்பிட்டு ராதாரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''கடந்த 2018-ம் ஆண்டில் அடையாளம் தெரியக்கூடாது என்று அச்சப்பட்ட நடிகை ஒருவர் நடிகர் ராதாரவி மீது பாலியல் புகார் அளித்தார். ராதாரவியோ சுதந்திரமாக நடமாடி வருகிறார். அதன்பின் மீ டூ இயக்கத்தை உள்நோக்கத்துடனும், இழிவானமுறையிலும் பேசி ராதாரவி கிண்டல் செய்தார்.

கடந்த 2017-ம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் குறித்து மிகவும் அருவருக்கத்தக்க வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து நிலைத்திருக்கும் வகையில் ராதாரவி போன்ற ஆண்கள் புனிதப்படுத்துகிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார், கனிமொழி எம்.பி. மேடம் ஆகிய மரியாதைக்குரிய தலைவர்கள் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்துக்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்தார்கள். ஆண் இனவாதம் பிடித்த, பெண்களுக்கு எதிராகச் செயல்படும் ராதாரவிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை ஏன் எடுக்கக்கூடாது. தயவுகூர்ந்து இதை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

தற்போது திமுகவில் ஐக்கியமாகி உள்ளார் ராதாரவி. விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டை வைத்து திமுக நடவடிக்கை எடுக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x