Published : 10 Mar 2019 09:59 am

Updated : 10 Mar 2019 09:59 am

 

Published : 10 Mar 2019 09:59 AM
Last Updated : 10 Mar 2019 09:59 AM

’அடடா’ சினிமாக்கள்... ‘அடச்சே’ மீறல்கள்!

கறுப்பு வெள்ளைப் படங்கள் வாழ்க்கையை வண்ணமயமாக்கியது. இப்போதைய வண்ணப் படங்கள் வாழ்க்கையை கறுப்பாக்கிக் கொண்டிருக்கின்றன என்று கிண்டலாய் யாரோ கவிதை எழுதியிருந்தார்கள். கலாச்சாரப் பெருமைகளை சினிமாக்களில் இன்றைக்குத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

நாட்டியப் பேரொளி பத்மினி, நடிகையர் திலகம் சாவித்திரி, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, குணச்சித்திர நடிகை செளகார் ஜானகி, அபிநய சரஸ்வதி சரோஜாதேவி, அஞ்சலிதேவி, விஜயகுமாரி, வாணிஸ்ரீ, எம்.என் ராஜம், அஷ்டாவதானி பானுமதி.... இப்படி கதாநாயகிகள் பட்டியல் நீண்டாலும் கதைக்கேற்றபடியே கதாநாயகிகள் தேர்வு செய்யப்பட்டார்கள். என்னை விட இந்த கதைக்கு இவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று பெருந்தன்மையாக மற்றவரை கைகாட்டி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். கதைக்கேற்றப்படிதான் ஹீரோக்களும் ஹீரோயின்களும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து காட்டினார்கள்.


திரைப்படங்களில், ஹீரோ ஒழுக்கத்தில் ஸ்ரீராமனாகத்தான் இருப்பார். குடும்ப நன்மைக்காகவும், உடன் பிறந்தோருக்காகவும், உறவுகளுக்காகவும், ஊருக்காகவும் உழைப்பவராக இருப்பார். மது, மாது, புகை என்பதெல்லாம் ஹீரோக்களுக்கு எதிரியாக காண் பிக்கப்படும். நேர்மை தவறாமல் வாழ எத்தகைய துன்பத்தையும் தாங்கலாம் என்ற கொள்கையோடு தமக்கு வரும் சோதனைகளை சாதுர்யமாக சமாளித்து இறுதியில் தர்மமே வென்றது போல் ஹீரோவை உயர்த்தி படத்திலும் நீதி, நேர்மை, தர்மங்களை நிலைநாட்டியிருப்பதுடன் ‘சுபம்’ கார்டு போடுவார்கள்.

அதேபோல், ஹீரோயின் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். குடும்பத்திலும் சமூகத்திலும் மிகுந்த அக்கறை கொண்டவளாக அன்பே உருவானவளாக இருப்பாள். தவறாமல் கோயிலுக்குச் செல்லும் ஹீரோயின் கடவுள் மீது பக்தி கொண்டிருப்பாள். குழந்தைகளையும் குடும்பத்தையும் இமைபோல் பாதுகாப்பாள். கற்பு என்பது உயிரை விட மேலானது என்பதை வலியுறுத்தும் விதமாக ஒரு காட்சியிலாவது வசனம் பேசி பொங்கி எழுவாள். ஹீரோக்களுக்கு நிகராக அல்லது ஹீரோக்களையும் மிஞ்சிவிடும் அழுத்தமான, உணர்ச்சிமிக்க காட்சிகளும் நடிகைகளுக்கு உண்டு. ஹீரோயின்களின் நடிப்பு ரசிகர்களை கண்ணீர் சிந்த வைக்கும்.

காதல் புரியும் ஜோடிகள் மட்டும் என்னவாம். கண்ணியம் காப்பார்கள். குடும்பத்தின் சம்மதத்துக்காக காத்திருப்பார்கள். காதலிப்பவர்களைத்தான் மணம்புரிய வேண்டும் அதுதான் உலக நியதி கூட எனும் வகையில் காட்சிகள் அமைக்கப்படும். ஒரு பாடலிலேயே வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தி விடுவார்கள். பாடல் வரிகள் இனிக்கும். புரியும். ஒட்டு மொத்தத்தில் அந்தக் கால சினிமாக்களுக்கு மத்தியில் வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அதிர்ஷடசாலிகள்.

ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள் சமுதாயத்தில் புரட்சிகளைக் கிளப்பின. இயக்குநர் கே.பாலசந்தரின் படங்கள் பெரும்பாலும் அப்படித்தான் அமைந்தன. ஒவ்வொரு படத்திலும் பெண்களின் ஒவ்வொரு உணர்வுகளையும் வலிகளையும் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருப்பார்.

இருகோடுகள், அவர்கள், அவள் ஒரு தொடர்கதை, அபூர்வ ராகங்கள், அரங்கேற்றம், சிந்துபைரவி, கல்கி... இன்னும் நீளும் பட்டியல்களில் கதை முழுவதும் ஹீரோயின்களையே வட்டமிடும். சமூகத்தில் நடக்கும் அவலங்களை ஹீரோயினின் கேள்விகள் கன்னத்தில் அறைவது போன்ற உணர்வை ஏற்படுத் துவதாக வைத்திருப்பார் பாலசந்தர். அதிக விமர்சனத்துக்கு உள்ளானவரும், அதிக பாராட்டுதலுக்கு உள்ளானவரும் இவராகத் தான் இருக்க முடியும். ஆனாலும் இவரது கதாநாயகிகளுக்குள் புரட்சிகளை திணித்து வெற்றிபெற்றார்கள்.

அதற்கு அடுத்த கட்டங்களில் ஹீரோயின்கள் அதிகரித்தார்கள். ஹீரோயின்கள் கோயிலுக்குப் போனது போய்,  காப்ரே டிஸ்கொதே போவது காட்டப்பட்டது. காதலில் கொஞ்சம் கவர்ச்சி காட்டினால் இளவட்டங்கள் விரும்புவார்கள் என்று தன் பாதையை சற்று மாற்றிக்கொண்டது சினிமா உலகம். கதாநாயகிகளுக்கான பாத்திரங்களில் அழுத்தங்கள் குறைந்து, படத்தில் ஒரு பாடலாவது கிளு கிளு நடனங்கள் வேண்டுமே என்று கட்டாயமாக்கினார்கள்.

அந்தக்காலத்தில், ஹீரோயின்கள் அரைகுறையாக அணிந்தால் நன்றாகவா இருக்கும் என்று டிஸ்கோ சாந்தி, சில்க் ஸ்மிதா, அனுராதா, ஜோதிலட்சுமி, விஜயலலிதா... இப்படி கவர்ச்சிக் கன்னிகளை உருவாக்கி தனி ரசிகர் கூட்டத்தையும் உண்டாக்கினார்கள்.

சமீபகாலமாக பெரும்பாலான படங்களில் கத்தியை ,முதுகுக்குப் பின்னே வைத்து, கழுத்தில் சைக்கிள் சங்கிலிகள் கோர்த்து அழுக்குத் துணியுடன், அராத்து செய்யும் ரவுடி ஹீரோ கேரக்டர்தான் ஹீரோயின்களின் பெஸ்ட் சாய்ஸ் என்று கதை பண்ணப்படுகிறது. ரவுடி ஹீரோ துரத்தினாலும் மிரட்டினாலும் ஹீரோயின்கள் அழகாய் அதில் விழுந்து விடுவதுதான் மெயின் கதையே!

நடிப்பில் தாராளம் காட்டுகிறார்களோ இல்லையோ, உடைகளில் தாராளம் காட்டத் தொடங்கிவிட்டார்கள் இந்தக் கால நடிகைகள். மேக்கப்புக்கு செய்யும் செலவை தாராளமாய் உடை வாங்க பயன்படுத்தலாமே என்று கிளம்பிய துணுக்குகளை தூக்கியெறிந்த ஹீரோயின்கள், அதற்குப் பிந்தைய படங்களிலும் தங்களது ஆடைக் குறைப்பை அணுவளவும் குறைக்கவில்லை.

பெரும்பாலான ஹீரோயின்கள் கவர்ச்சிக்கன்னிகளுக்கு வேலையே இல்லாமல் செய்து விட்டார்கள். பெருகி வரும் கலாச்சார சீரழிவுகளை நியாயப்படுத்துவதாகக் காண்பிக்கப்படும் இன்றைய பெரும்பாலான சினிமாக்களில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களும், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கக் கூடிய படங்களும் இன்று குறைந்துதான் போயிருக்கின்றன.

சமூகப் பொறுப்புடன் உணர்ந்து செயல்படவேண்டிய ஹீரோயின்கள் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செய்கிறார்களா என்பது சந்தேகம்தான்!  

நான்கெழுத்து கொண்ட படம் அது. அதில் ஹீரோயின் தோழியிடம் டேட்டிங் பற்றி பேசுவாள். பார்க்கும் போதே ரொம்ப ஓவராகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த நிமிடம் எனக்கும் டேட்டிங் போக ஆசையா இருக்குடி என்று சொல்லும்போது வக்கிரத்தின் உச்சமாகிப் போனது. இதை ஒட்டுக்கேட்கும் ஹீரோ, ஹீரோயின் பின்னாடி சுற்றி காதலிக்கிறான். ஆனாலும் படத்தின் இறுதிவரையில் டேட்டிங் என்பது மோசமான கலாசாரம் என்பதை ஹீரோயினிடம் சொல்லவும் இல்லை. பேசவும் இல்லை. இந்த காட்சிகளைப் பார்க்கும் பெண்களின் மனதில் எத்தகைய தாக்கம் உருவாகும் என்று யோசித்து பாருங்கள்.

காதலித்தாலே கற்பு களவானது போல் பதறிய அந்தக்கால சினிமாக்களின் ஹீரோயின்கள் சமூகத்தில் நமது கலாச்சாரத்தை மேலும் வலுவாக்கினார்கள். இன்று கற்பு களவாடப்பட வேண்டியதில்லை டேட்டிங், லிவிங் டு கெதர் கலாச்சாரம் மூலமாக தானாகவே பகிரப்படுகிறது என்ற மோசமான கருத்துதான் விதைக்கப்படுகிறது.

சமீபத்தில் வெளிவந்த படம் ஒன்று. கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு பெண் இயக்குநர்.. பெண்களை இழிவு படுத்தும் வகையில்… கலாச்சார சீரழிவை நேரிடையாகவே காட்டி தமிழினத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்.

கதாநாயகிகள் காணாமல் போனாலும் பரவாயில்லை  சமூகத்தை சீரழிக்கும் கலாச்சார சீரழிவுக்கு துணை நிற்காமல் இருந்தால் சரி.

அதேசமயம்... சதைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட கட்டம் போய், கதைக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுக்கும் தருணங்கள் வந்துவிட்டன என்பதை, தற்போதைய பல படங்கள் உணர்த்திக்கொண்டிருக்கின்றன.

இன்னும் இன்னும் இந்தப் படங்கள் பெருகினால், பெருவெற்றி பெற்றால்... திரையுலகம் இன்னும் இன்னும் கவுரவ கிரீடங்களை சூடிக்கொள்ளும் என்பது உறுதி!

சாவித்ரி கே.ஆர்.விஜயா சௌகார் ஜானகி சரோஜா தேவி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x