Published : 23 Sep 2014 10:35 AM
Last Updated : 23 Sep 2014 10:35 AM

உலக மசாலா: 8 கிலோ கின்னஸ் வெங்காயம்

பிரிட்டனில் வசிக்கும் டோனி க்ளோவருக்குக் காய்கறித் தோட்டத்தின் மீது ஆர்வம் அதிகம். பெரிய பூசணிக்காய், பெரிய தக்காளி என்று அபூர்வமான விஷயங்களை உருவாக்குவதில் கெட்டிக்காரர். 8 கிலோ எடையுள்ள வெங்காயத்தைத் தற்போது அறுவடை செய்திருக்கிறார்! இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற இருக்கிறது. தன் அப்பாவிடமிருந்து இந்த ஆர்வத்தைப் பெற்ற டோனி, 16 வயதில் இருந்தே காய்கறிகளை உருவாக்கி வருகிறார்.

வெங்காயம் நறுக்கும்போது கண்ணீர் வராமல் இருக்க ஏதாவது செய்யக்கூடாதா டோனி?

சினிமாக்களில்தான் ஆள் மாறாட்டம் பார்த்திருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் ஜிம் பெய்லி 20 ஆண்டுகளாக தாம் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி வந்திருக்கிறார். 69 வயதான பெய்லி, தற்போது ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்றே தன்னை அறிமுகம் செய்துகொள்கிறார். கடந்த மாதம் ஒரு ஜோடிக்கு இடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைக்க முயற்சி செய்தபோது வசமாக மாட்டிக்கொண்டார்.

ஜோடி காவல் துறையிடம் முறையிடும்போது சாட்சியாக பெய்லியின் பெயரைச் சேர்த்துவிட்டனர். விசாரணையில் பெய்லி போலீஸ் அதிகாரி என்று கூறி கடந்த 20 வருடங்களாகப் பல வேலைகளைச் செய்து வந்திருப்பது தெரிந்தது. இப்போது சிறையில் இருக்கிறார் பெய்லி.

பல நாள் போலீஸ்காரர் ஒரு நாள் அகப்பட்டுவிட்டார்!

அமெரிக்காவில் இப்போது தனியாளாக வசித்து வருகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்துகொள்ளாதவர்களும் திருமணம் செய்து விவாகரத்துப் பெற்றவர்களும் இதில் அடங்குவர். நியூயார்க், மிசிசிபி, நியூமெக்ஸிகோ, ஃப்ளோரிடா போன்ற இடங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் சிங்கிள் மனிதர்கள் வசிக்கிறார்கள்.

தனி மரம் தோப்பாகாதுன்னு உங்களுக்குத் தெரியாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x