Published : 01 Feb 2019 11:04 AM
Last Updated : 01 Feb 2019 11:04 AM

குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள்: இயக்குநர் சேரன்

குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள் என்று 'மிக மிக அவசரம்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் தெரிவித்தார்.

'அமைதிப்படை 2', 'கங்காரு' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'மிக மிக அவசரம்' என்னும் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார் சுரேஷ் காமாட்சி. இதில் பெண் காவலர் கதாபாத்திரத்தில் ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். சீமான், அரீஷ் குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர் சேரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது:

சுரேஷ் காமாட்சி என்றாலே ஏதாவது மேடைகளில் சினிமாவில் உள்ள பிரச்சனைகளைப் பற்றியே பேசுபவராக, முக்கியமான தலைகளை எதிர்த்து குரல் கொடுப்பவராக பார்க்கப்படுகிறார்.. ஆனால் அவருக்கு இரண்டு முகங்கள் உண்டு. அவர் பேசும்போது நமக்கு தெரிவது ஒரு முகம்.. ஆனால் ஒரு படைப்பாளியாக அவரைப் பார்க்கும்போது நிச்சயம் முற்றிலும் மாறாக இருக்கிறார்.

இப்படத்தை நான் பார்த்ததும் அவரிடம் நீங்கள் இனிமேல் நிறைய பேசாதீர்கள், அடுத்தடுத்து படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துங்கள் எனக் கூறினேன்.. காரணம் அடுத்தடுத்து அவர் இயக்க இருப்பதாக சொன்ன கதைகள் எல்லாம் அவ்வளவு வித்தியாசமானவை. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை பார்த்ததும் அதில் இடம்பெற்றுள்ள 'நல்லதொரு வீணை' பாடல் மட்டும் புதிய கதையை கொஞ்சம் பழையதாக மாற்றுகிறது என மனதில் தோன்றியதை சுரேஷ் காமாட்சியிடம் சொன்னேன்.. பின்னர் வீடு வந்தும்கூட அந்த படம் பற்றிய நினைவாகவே இருந்ததால் எனக்குள் ஒரு பாடல் தோன்றியது.. அதை உடனே எழுதி சுரேஷ் காமாட்சிக்கு அனுப்பினேன்.. அவரும் நன்றாக இருக்கிறது எனக் கூறி அந்த பாடலை படத்தில் இடம்பெற செய்து விட்டார்.. அனேகமாக அந்த பாடல் இப்போது நிலவிவரும் ‘மீ டூ’ பிரச்சனைக்கு மிகப்பொருத்தமான பாடலாக இருக்கும்.

இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்கா தமிழ் பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்கிற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போதெல்லாம் நான் என்னைத்தான் சொல்கிறார்கள் என நினைத்துக்கொள்வேன்.. காரணம் கேரளாவில் இருந்து அடிக்கடி புது நாயகிகளை எனது படத்தில் அதிகம் அறிமுகப்படுத்தியது நான்தான்.. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நடிப்புத் திறமையுள்ள பெண்கள் நடிக்க ஆர்வமாக முன் வராததுதான்.

குறும்படத்தில் ஆல்பத்தில் நடிக்கும் பெண்கள் கூட சினிமாவில் நடிக்க தயங்குகிறார்கள். ஆனால் ஒரு முகம் தெரியாத பெண்ணாக இருந்து உன் நடிப்பால் இந்தப் படத்தை பார்க்கும்படி செய்துவிட்டாய்.. உன் மீது பரிதாபம் வந்துவிட்டது.. அதுவே உனக்கும் இந்த படத்திற்கும் கிடைத்த வெற்றி.. உனக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும்.. கவலை வேண்டாம்

இவ்வாறு சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x