Published : 07 Feb 2019 11:09 AM
Last Updated : 07 Feb 2019 11:09 AM

பெண்கள் உடையணிவது குறித்த எஸ்.பி.பி கருத்தால் சர்ச்சை: வலுக்கும் எதிர்ப்பு

பெண்கள் உடையணிவது குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் கருத்தால் சர்ச்சை உருவாகியுள்ளது. அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் முன்னணிப் பாடகராக வலம் வருபவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். 

அப்போது, "சினிமா விழாக்களில் கலந்து கொள்ளும் போது நாயகிகள் ஆபாசமாக உடையணிந்து உடலைக் காட்டுகிறார்கள்.

பொது நிகழ்ச்சிகளுக்கு எப்படி உடையணிய வேண்டும் என்ற உணர்வு இல்லை. உடலைக் காட்சிப் பொருளாக காட்டினால் தான், அந்த விழாவுக்கு வரும் இயக்குநர்களோ, தயாரிப்பாளர்களோ வாய்ப்பு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள் என நினைக்கிறேன்.

நமது கலாச்சாரம், சமூக அக்கறை உள்ளிட்டவை எதுவுமே இல்லாமல் போய்விட்டது. எனது இந்தப் பேச்சு பல நாயகிகளுக்கு கோபத்தை வரவைக்கும்” என்று தெரிவித்துள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

இந்தப் பேச்சுக்கு ஆந்திராவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல பெண்கள் அமைப்புகளும் கண்டன அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. 

மேலும், தெலுங்குத் திரையுலகின் தயாரிப்பாளரும், நடிகருமான நாகேந்திர பாபு “நாம் மதச்சார்பற்ற நாட்டில் வாழ்கிறோம்.. ஒரு பெண் இதைத்தான் அணிய வேண்டும் இதை அணியக் கூடாது என்று அதிகாரம் செய்ய யாருக்கும் உரிமையில்லை. பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் கூட நடிகைகளுக்கு எதிராக மோசமான கருத்துக்களைக் கூறுவது இது முதல் முறையல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தனது யூ-டியூப் சேனலில் 4 நிமிடங்கள் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நாகேந்திர பாபு. எஸ்.பி.பாலசுப்ரமணியம் கருத்துக்கு சிலர் ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

தன் பேச்சு சர்ச்சையாகியுள்ளதற்கு “எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், நான் சொன்ன கருத்தில் இருந்து பின் வாங்கப் போவதில்லை” என்று கூறியுள்ளார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x