Published : 27 Feb 2019 02:57 PM
Last Updated : 27 Feb 2019 02:57 PM

நீங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமே? - விஷால் ட்வீட்டுக்கு சுரேஷ் காமாட்சி கிண்டல்

விஷால் வெளியிட்ட ட்வீட்டுக்கு, 'நீங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமே?' என்று கிண்டல் தொனியில் தெரிவித்துள்ளார் சுரேஷ் காமாட்சி.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கி நடத்தி வருகிறது. இதில் தற்போதுள்ள நிலைப்படி கமல் தனித்துப் போட்டியிடும் சூழலே உருவாகியுள்ளது.

இந்தத் தேர்தலில் ரஜினி - கமல் இணைந்து பணிபுரிய வேண்டும் என்று விஷால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் "ரஜினி சார் மற்றும் கமல் சார் இருவரும் ஒன்றாக இணையவேண்டும் என்று விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் நிகழ்சிக்காக அல்ல. நட்சத்திர நடிகரின் வரவேற்பு விழாவுக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காக அல்ல. எந்த விஷயத்துகாகவும் அல்லாமல் மக்களவைத் தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம். ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும்" என்று தெரிவித்தார்.

விஷாலின் ட்வீட்டை குறிப்பிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறியிருப்பதாவது:

புரட்சிப் புலியாரே.. நீங்க நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாமே?. அதான் சங்கப் பணத்தைக் காலி பண்ணியாச்சே.. இங்கே உங்க வேலை முடிஞ்சது.. அடுத்து மக்களுக்குத்தான் உங்க சேவை தேவையாம்."நீங்கதான் மிகத் தேர்ந்த பழி வாங்கும் ஆட்டையபோடும் அரசியல்வாதியாச்சே!" சீக்கிரமா யோசிச்சு  முடிவு எடுங்க

இவ்வாறு சுரேஷ் காமட்சி தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணிக்கு எதிராக பணிபுரிந்து வருபவர் சுரேஷ் காமாட்சி. விஷால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியவர். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போடப்பட்ட அணியில் முக்கிய பங்காற்றியவர் சுரேஷ் காமாட்சி என்பது நினைவுக் கூறத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x