Published : 08 Feb 2019 11:17 AM
Last Updated : 08 Feb 2019 11:17 AM

இன்னுமா சந்தேகம்? - விஸ்வாசம் வசூல் குறித்து விநியோகஸ்தர் கேள்வி

'விஸ்வாசம்' மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், 'இன்னும் சந்தேகம் உள்ளதா?' என்று கேள்வி எழுப்பியுள்ளது கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்.

ஜனவரி 10-ம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான 'பேட்ட' படத்துடன் வெளியானது அஜித் நடித்த 'விஸ்வாசம்'. சிவா இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்தனர்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது 'விஸ்வாசம்'. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்கள் என கூறப்படும் தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வரவேற்பு கிடைத்தது. இப்படம் வெளியான 25-வது நாளன்று கூட தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், இப்படத்தை வெளியிட்ட அனைத்து விநியோகஸ்தர்களுக்குமே நல்ல லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 'விஸ்வாசம்' ஓடி முடியும்போது, கண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் விநியோகஸ்தர்களுக்கு அதிகப்படியான ஷேர் தொகை அளித்த படங்களின் பட்டியலில், முதல் 5 இடத்துக்குள் 'விஸ்வாசம்' இடம்பெறும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர்.

ஆனால், 'விஸ்வாசம்' படத்தின் வசூல் குறித்து பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள். அதிகப்படியாக சொல்கிறார்கள் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

இது தொடர்பாக 'விஸ்வாசம்' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''அனைத்து சந்தேகங்களையும் தகர்த்தெறிந்து 'விஸ்வாசம்' தமிழ் சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியுள்ளது. படத்தின் விநியோகஸ்தர் என்ற முறையில் 'விஸ்வாசம்' படம் இமாலய வெற்றி பெற்றுள்ளது என்பதை பெருமையுடனும் நம்பிக்கையுடனும் அறிவிக்கிறோம். இன்னும் சந்தேகம் உள்ளதா?

உங்கள் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் பதிலளிக்க எங்கள் அலுவலகத்தின் கதவு திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர், வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என அனைவரும் இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்களாகிய நீங்களும் கொண்டாட வேண்டிய தருணம் இது. சந்தேகம் வேண்டாம்.. ’விஸ்வாசம்’ படம் ஒரு மாபெரும் வெற்றி''.

இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x