Last Updated : 16 Jan, 2019 10:42 AM

 

Published : 16 Jan 2019 10:42 AM
Last Updated : 16 Jan 2019 10:42 AM

ஜனவரி 25-ம் தேதி வெளியாகிறது சார்லி சாப்ளின் 2

பிரபுதேவா, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள 'சார்லி சாப்ளின் 2' ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2002-ம் ஆண்டு 'சார்லி சாப்ளின்' படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், போஜ்பூரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பைப் பெற்றது.

தற்போது 'சார்லி சாப்ளின்' படத்தைத் தொடர்ந்து 'சார்லி சாப்ளின் 2' படத்தை இயக்கியுள்ளார் ஷக்தி சிதம்பரம். அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரபு, பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சரியான வெளியீட்டுத் தேதிக்காக படக்குழு காத்திருந்தது. இதன் ட்ரெய்லரை நேற்று (ஜனவரி 15) இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் வெளியிட்டார்.

'சார்லி சாப்ளின்' ட்ரெய்லரில் இப்படம் ஜனவரி 25-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுத, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் கூறுகையில், ''பிரபுதேவா - நிக்கி கல்ராணி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ராணி குடும்பமும் திருப்பதிக்குப் போகும்போதும், அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே 'சார்லி சாப்ளின் 2'. திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x