Published : 28 Jan 2019 04:59 PM
Last Updated : 28 Jan 2019 04:59 PM

அஜித்துடன் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி: ஸ்ரத்தா ஸ்ரீநாத்

‘அஜித்துடன் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி’ எனத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித். இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக் இது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப்படம் இது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ட்விட்டரில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

“அஜித் குமாரின் அடுத்த படத்தில் நான் நடிக்கவிருப்பதாக சில வதந்திகளும் யூகங்களும் நிலவின. இன்று அந்த வதந்திகள் உண்மையாகிவிட்டன என்பதைக் கூறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அற்புதமான படத்தில் நானும் பங்காற்றுகிறேன்.

நான் இந்தப் படத்தில் நடிக்கிறேனா? எனப் பலர் கேட்டனர். அவர்களிடம் மவுனம் காத்தது மிகவும் கடினமாக இருந்தது. இப்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆர்வமும் பதட்டமும் கலந்துள்ளது. அஜித்துடன் நடிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இதுவரை நான் நடித்ததில் மிகச் சவாலான கதாபாத்திரமாக இது இருக்கும் என்பதையும் நான் நம்பிக்கையுடன் கூற முடியும்.

எச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜா இசை... இப்படியான அணியுடன் நடிக்க ஒருவர் ஆசைப்பட மட்டுமே முடியும். அற்புதமான தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்தப் படம், இந்தக் கதை அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று. இன்றைய சூழலில் தேவையான ஒன்று. பெரும் மக்கள் கூட்டத்தை இது சென்றடைவது மிக முக்கியம். முழு அர்ப்பணிப்புடன் நடிக்க இதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான் எனது வேனில் இப்போது உட்கார்ந்து அனைத்து வாழ்த்துச் செய்திகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். எனக்காக சந்தோஷப்படும் அனைவருக்கும் பெரிய நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். எனது பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதைப் போல உணர்கிறேன்.

எல்லோருக்கும் பெரிய பெரிய நன்றி” எனத் தெரிவித்துள்ளார் ஸ்ரத்தா ஸ்ரீநாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x