Published : 01 Jan 2019 12:41 PM
Last Updated : 01 Jan 2019 12:41 PM

96 தெலுங்கு ரீமேக்: சர்வானந்த் - சமந்தா ஒப்பந்தம்

'96' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க சர்வானந்த் மற்றும் சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

2018-ம் ஆண்டில் இளைஞர்கள் கொண்டாடிய படம் '96'. பிரேம்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ் உள்ளிட்ட பலர் நடித்தனர். கோவிந்த் வசந்தா இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார்.

படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி மகிழ்ந்தனர். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது இப்படம். மெட்ராஸ் என்டெர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் கடும் போட்டிக்கு இடையே தயாரிப்பாளர் தில் ராஜு ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார். தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்க உள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க பலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக சர்வானந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

'96' வெளியான போது, த்ரிஷாவின் நடிப்புக்கு பெரும் பாராட்டு தெரிவித்தார் சமந்தா. அதனைத் தொடர்ந்து '96' படத்தை ரீமேக் செய்ய முடியாது என்றும் தெரிவித்தார். தற்போது மனம் மாறி அவரே நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x