Last Updated : 21 Jan, 2019 03:40 PM

 

Published : 21 Jan 2019 03:40 PM
Last Updated : 21 Jan 2019 03:40 PM

2018-ல் ஆறு நம்பிக்கை இயக்குநர்கள்; திருமணம் ஆடியோ விழாவில் சேரன் நெகிழ்ச்சி

கடந்த 2018ம் ஆண்டில் நம்பிக்கை மிகுந்த இயக்குநர்கள் என்று ஆறு இயக்குநர்களைத் தெரிவித்து நெகிழ்ந்தார் இயக்குநர் சேரன்.

சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சேரன், 'திருமணம் - சில திருத்தங்களுடன்' எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், மூத்த இயக்குநர்களான பாரதிராஜா, மகேந்திரன், கே.எஸ்.ரவிகுமார், கவிஞர் வைரமுத்து முதலானோரையும் கடந்த ஆண்டில் நல்ல படங்களைக் கொடுத்த ஆறு இயக்குநர்களையும் 'திருமணம்' படத்தின் நடிகர் - நடிகைகளையும் மேடையில் அமரவைத்தார் இயக்குநர் சேரன்.

மூத்தவர்களை எப்போதுமே மதிக்கவேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பாரதிராஜா இல்லையென்றால், மகேந்திரன் இல்லையென்றால், பாலசந்தர் இல்லையென்றால், பீம்சிங் இல்லையென்றால், பந்துலு இல்லையென்றால், பாலுமகேந்திரா இல்லையென்றால், கே.பாக்யராஜ் இல்லையென்றால் கே.எஸ்.ரவிகுமார் இல்லையென்றால், இன்றைக்கு சினிமா உலகமே இல்லை. இவர்களிடம் இருந்துதான் எத்தனையோ  இயக்குநர்கள் வந்திருக்கிறார்கள். இவர்களை நாம் மதித்து மரியாதை செய்யவேண்டும்.

மூத்தவர்களை மதிப்பதற்கான தருணங்களும் நிகழ்வுகளும் குறைந்துகொண்டே வருகின்றன. அதேபோல் இளையவர்களை, புதியவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்த மேடையில் மூத்தவர்களான இயக்குநர்களை அமர வைத்திருக்கிறேன். அதேபோல், கடந்த ஆண்டு நம்பிக்கை மிகுந்த இயக்குநர்களாக ஆறு பேரை இங்கு அமரச் செய்திருக்கிறேன்.

பணம் பண்ணுவதற்குத்தான் சினிமா என்று நினைக்காமல், சமூகத்துக்காக, மக்களுக்காக, நல்ல கருத்துகளுக்காக படம் பண்ணிய இளம் இயக்குநர்கள் இவர்கள். 'கனா', 'அறம்', 'அடங்க மறு', 'மேற்கு தொடர்ச்சி மலை', 'டூலெட்', 'பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர்கள், நம்பிக்கையை விதைத்திருக்கிறார்கள்.

கதையிலும் கதையைச் சொன்ன விதத்திலும் பிரச்சினைகளை அலசிய நேர்மையிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாக ஆகியிருக்கிறார்கள்.

'கனா' படம் பார்த்துவிட்டு மிரண்டு போனேன். எல்லோரும் விளையாட்டைப் பற்றிய கதை. பெண்கள் விளையாடுவதைச் சொல்லும் படம் என்று சொன்னார்கள். ஆனால் அது விவசாயத்தைச் சொன்ன படம்.

11 பேர் கிரிக்கெட் விளையாட இருக்கிறீர்கள். அதற்கு அரசு நிதி ஒதுக்குகிறது. கமிட்டி இருக்கிறது. இவ்வளவு விளம்பரங்கள் குவிகின்றன. ஆனால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய மட்டும் இப்படி யோசிக்கிறீர்களே என்று முகத்தில் அறைந்து சொல்லியிருந்தார் இயக்குநர்.

அதேபோல், ராக்கெட் விடுகிறீர்கள். அதற்குப் பணம் ஒதுக்குகிறீர்கள். ஆனால் குழியில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற எந்தக் கண்டுபிடிப்பும் இல்லை. ஏழைகளைப் பற்றியே யோசிக்காமல், பணக்காரர்களைப் பற்றி மட்டுமே யோசிக்கிறீர்கள் என்பதை 'அறம்' படத்தில் சொன்னார் இயக்குநர் கோபி நயினார்.

'மேற்கு தொடர்ச்சி மலை'யின் இயக்குநரும் 'டூலெட்' படத்தின் இயக்குநரும் அப்படித்தான் உண்மையை உரக்கச் சொன்னார்கள். இதில் 'டூலெட்' படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. அந்தப் படம் வெற்றி பெற வேண்டும்.

'பரியேறும் பெருமாள்' படம் பார்த்துவிட்டு ரொம்பவே மகிழ்ந்தேன். எப்படியொரு படம் அது? சாதி வித்தியாசமில்லாமல் எல்லோரும் கொண்டாடினார்கள். சாதியை, சாதிக் கொடுமையை இதைவிட வேறு என்ன சொல்லி விளக்கிவிட முடியும்?

இன்னமும் சாதி இருக்கிறது. சாதி வெறி இருக்கிறது. ஆணவக் கொலைகள் நடக்கின்றன. சாதியே இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால்தான் என் முதல் படமான ’பாரதி கண்ணம்மா’வின் கதையை, சாதிக்கு எதிரான களமாக அமைத்திருந்தேன்.

இந்த நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்களின் வரிசையில் 'அடங்க மறு' படத்தையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். படத்தில் ஹீரோவைத் தூக்கிப் பிடிக்கிற விஷயங்கள் நிறையவே இருக்கும். ஆனால் ஹீரோயிஸம் என்பதே இருக்காது. இந்தப் படத்தை எந்தக் காட்சியிலும் ஹீரோயிக் படமாகவே மாற்றவே இல்லை.

ஹீரோ ஜெயம் ரவி ஜெயித்துக்கொண்டே இருப்பார். ஆனால் ஹீரோயிஸம் துளி கூட இருக்காது. கதையும் திரைக்கதையும் அப்படி அழகாக, அருமையாக கட்டமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆறு இயக்குநர்களும் நம்பிக்கைக்கு உரிய இயக்குநர்கள். இன்னும் இன்னும் சாதிப்பார்கள். நல்ல நல்ல படங்களைக் கொடுப்பார்கள் என்பது உறுதி''.

இவ்வாறு இயக்குநர் சேரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x