Published : 08 Sep 2014 02:53 PM
Last Updated : 08 Sep 2014 02:53 PM

கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வுகள்

நீர்மப் (Fluid) பொருட்களை வெப்பமேற்றிக் காய்ச்சுவதற்கு அதிக அழுத்தம் கொண்ட கொதிகலன்கள் (Boiler) பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு அல்லது எஃகு கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்தக் கொதிகலன்களை இயக்கும் பணியில் பாதுகாப்புகள் அவசியமானதாக இருக்கின்றன. எனவே, கொதிகலன் பயன்பாட்டுப் பணிகளில் “கொதிகலன் பணியாளர் தேர்வுகள்” எழுதித் தேர்ச்சி பெற்றவர்களே நியமிக்கப்படுகின்றனர்.

ஆண்டுதோறும் தேர்வு

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு கொதிகலன் இயக்ககம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை இத்தேர்வுகளை நடத்துகிறது. இத்தேர்வுகள் இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதி, முதல்நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதி எனும் இரு நிலையிலான தகுதிகளுக்கான தேர்வுகளாக நடத்தப்படுகின்றன.

இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர்

இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

1.பதினெட்டு வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

2.பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான ஏதாவதொரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.நீராவிக் கொதிகலன் பணிகளில் தீயணைப்பாளர் (Fireman), இயக்குபவர் (Operator), உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman), உதவி இயக்குபவர் (Assistant Operator) எனும் பணியில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

கொதிகலன் உற்பத்தி அல்லது நிறுவுதல் அல்லது பராமரிப்புப் பணியில் பொருத்துநராக மூன்று ஆண்டுகளுக்குக் குறையாமல் பணியாற்றியிருக்க வேண்டும். அத்துடன் ஓராண்டுக்குக் குறையாமல் உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman) பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.

(அல்லது)

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றவர்கள் இரண்டு வருடங்களுக்குக் குறையாமல் சிறுதொழில் நிறுவனங்களில் கொதிகலன் பணியில் பணியாற்றி இருக்க வேண்டும்.

முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர்

முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தேர்வு எழுத விரும்புபவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

1.இருபது வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

2.இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் தேர்ச்சிக்குப் பின்பு ஐம்பது சதுர மீட்டருக்குக் குறைவில்லாத மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் தனிப்பொறுப்புடன் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

மூன்று வருட கால அளவிலான தொழிற்படிப்பில் தேர்ச்சி பெற்று, கொதிகலன் பயன்படுத்தும் அல்லது கொதிகலன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒரு வருடம் தொழிற்பழகுநராகப் பயிற்சி பெற்று, இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழுடன் ஐம்பது சதுர மீட்டருக்குக் குறைவில்லாத மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் தனிப்பொறுப்புடன் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

(அல்லது)

இரண்டாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழுடன் தீயணைப்பாளர் (Fireman) அல்லது உதவித் தீயணைப்பாளர் (Assistant Fireman) பணியில் முதலாம் நிலைக் கொதிகலன் பணியாளர் தகுதிச் சான்றிதழ் பெற்றவரின் கீழ் ஐம்பது சதுர மீட்டருக்கு மேலான மேற்பரப்பு கொண்ட கொதிகலன் இயக்கும் பணியில் இரண்டு வருடங்களுக்குக் குறையாத பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுகள்

கொதிகலன் பணியாளர் தேர்வுக்கான அறிவிப்புகள் ஆண்டுதோறும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் செய்தித்தாள்களில் வெளியிடப்படுகின்றன. இத்தேர்வுகள் சென்னை, திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே நடத்தப் பெறுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x