Published : 28 Jan 2019 03:44 PM
Last Updated : 28 Jan 2019 03:44 PM

மன்னிப்பு கோரினார் சிம்பு; கட் அவுட்டுக்கு பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேட்டி

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தான் சொல்லவில்லை. தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறாக இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு பேட்டி அளித்தார்.

எனக்கு பெரிய கட் அவுட் வையுங்கள். பால் பாக்கெட்டில் அல்ல அண்டாவில் பால் ஊற்றுங்கள் என சிம்பு ஆடியோ வெளியிட அது சர்ச்சை ஆனது. பால் முகவர் சங்கம் அவருக்குக் கண்டனம் தெரிவித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளித்தது.

இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் தனது ரசிகர் குடும்பத்தைக் காண வந்த சிம்பு பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

“என் ரசிகர் உயிரிழந்த நேரம் ஊரில் இருந்தேன். அந்தப் பிரச்சினை எனக்கு உள்ளுக்குள்ளே வாட்டியது. என் ரசிகர் ஒருவர் கட் அவுட் வைத்து பாலாபிஷேகம் செய்வார். நமக்கு பிளக்ஸ் பேனர் எல்லாம் வேண்டாம் என்று தோன்றியது. நான் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அது என் மனதை உறுத்தியது.

ஆனால் அப்போதே நான் பேட்டி அளித்தேன். நான் சொன்னது எதுவும் போய் சேரவில்லை. கட் அவுட் வைக்காதீர்கள், அதற்குப் பதில் அப்பா அம்மாவுக்கு புடவையோ, வேஷ்டி சட்டையோ கொடுங்கள் என்று சொன்னேன். ஆனால் அக்கருத்து போய் சேரவில்லை. எத்தனையோ நல்ல விஷயங்கள் நான் சொன்னது போய் சேரவே இல்லை.

கஜா புயல் நேரத்தில் ஒன்று சொன்னேன். காலர் டியூன் 10 ரூபாயோ 15 ரூபாயோ ஒரு மாதத்துக்கு உபயோகப்படுத்துகிறோம். அதை ஒரு மாதத்துக்கு வேண்டாம் என்று கூறி அந்தப் பணத்தை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்க என்று கூறினேன். அப்படி செய்திருந்தால் எவ்வளவோ பணம் அந்த மக்களுக்குப் போய் சேர்ந்திருக்கும்.

ஆனால், அந்த நல்ல எண்ணமும் மக்களிடம் போய் சேரவில்லை. அப்போதுதான் நான் யோசித்தேன். நாம் நல்லது சொன்னால் போய் சேரவில்லை, நெகடிவ்வா பேசினால் போய் சேருகிறது. அதற்காகத்தான் அப்ப ஒரு ஆடியோ பேசி வெளியிட்டேன்.

பெரிய அளவில் கட் அவுட் வையுங்கள். இதுவரைக்கும் வைக்காத அளவுக்கு கட் அவுட் வையுங்கள், பாக்கெட்டில் இல்லை அண்டாவில் ஊற்றுங்கள் என்று சொன்னேன். நன்றாக கவனியுங்கள் என் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யுங்கள் என்று கூறவில்லை. பாக்கெட்டில் இல்லை அண்டாவில் ஊற்றுங்கள் என்றுதான் கூறினேன்.

அன்று ஒரு பேச்சு இன்று ஒரு பேச்சு பேசவில்லை. ஒருவேளை நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பாக்கெட்டில் இருப்பதை அண்டாவில் ஊற்றுங்கள் என்றுதான் சொன்னேன். அதைக் காய்ச்சி அங்கு வருபவர்களுக்கு கொடுங்கள். வாயில்லா ஜீவன், வாயுள்ள ஜீவனுக்கு அது போகவேண்டும் என்றுதான் கூறினேன்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரை நான் மறக்கவில்லை. என்னை மீடியா நன்றாகக் கவனித்துக்கொண்டது. 3 ஆண்டுகள் பட வாய்ப்பில்லாமல் இருந்த நேரத்தில் என்னை நீங்கள் விட்டுக்கொடுத்ததில்லை. மற்றவர்களிடம் கேட்காத கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டுள்ளீர்கள்.

நானும் பதில் சொல்லியிருக்கிறேன். ஆகவே உங்களிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான்.  நான் சொல்லும் நல்ல விஷயங்களையும் கொண்டு சேருங்கள். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார் சிம்பு.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

கதாநாயகர்கள் பின்னால் ரசிகர்கள் இதுபோன்று செல்வதை உங்களைப் போன்ற இளம் கதாநாயகர்கள் தடுக்கக்கூடாதா?

ஒரு படம் ரிலீஸ் ஆகிறது, ரசிகர்கள் அன்பைக்காட்ட இதை வெளிப்படுத்துகிறார்கள். இதில் சொல்ல வருவது என்னவென்றால் பாலூற்றும் இந்த விஷயம். விபத்தில் என் ரசிகர் இறந்தது என்னைப் பாதித்ததால்தான் நான் இன்று அவர் வீட்டுக்கு வந்துள்ளேன். ஆகவே ஏற்கெனவே சொன்னதுபோல் தாய் தந்தைக்கு புடவை, சட்டை எடுத்துக் கொடுங்கள் என்று சொல்கிறேன்.

நீங்கள் நல்ல நோக்கத்தோடு சொல்கிறீர்கள். அது பிரச்சினையாக மாறுகிறது என்று நினைக்கிறீர்களா?

அது மாறவில்லை, சிலர் மாற்ற முயற்சிக்கிறார்கள் என்கிறேன்.

யார் மாற்ற முயற்சிக்கிறார்கள்?

தெரியவில்லை. தெரிந்தால் நீங்கள் சொல்லுங்கள். என்னை யார் மாற்றினாலும் கண்டிப்பாக உண்மையும் நேர்மையும் வெல்லும் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

ரசிகர்களைப் பால் ஊற்ற வேண்டாம் என்று சொல்கிறீர்களா?

நான் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். பேரைக்கூட போடவேண்டும் என்பதில்லை. ஒரு நடிகர் சொன்னார் என்று போட்டால்கூட நல்லது நடந்திருக்கும். அன்று எழுமின் ஆடியோவில் பேசியதை எடுத்துப் போடுங்கள்.

ஒரு குழுவாக சேர்ந்து பிரச்சாரமாக செய்வீர்களா?

இப்போது என்னிடம் கேட்டதை நீங்களே மீடியாவில் செய்தியாக்கி அதை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு சிம்பு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x