Last Updated : 12 Jan, 2019 02:19 PM

 

Published : 12 Jan 2019 02:19 PM
Last Updated : 12 Jan 2019 02:19 PM

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்க வேண்டும்: இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆசை

மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிக்க வேண்டும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பேட்ட'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பல்வேறு திரையுலகப் பிரபலங்களும், பழைய ரஜினியை மீண்டும் கொண்டு வந்ததுக்கு கார்த்திக் சுப்பராஜுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நகரப் பகுதிகளிலும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலைக் குவித்து வருகிறது 'பேட்ட'.

இப்படம் தொடர்பாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‘பேட்ட’ - அப்படியே இன்னொரு தடவை தலைவர் ரஜினிகாந்த் தனது தேதிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கே கொடுக்கலாம். ரனிஃபைடு, சேதுபதிஃபைடு முக்கியமாக அனிருத்ஃபைடு அனுபவம் கிட்டியது. அனிருத்தின் சில பாடல்கள் உலகத் தரம்.

உங்க தரமான ஸ்வீட்டால ‘பேட்ட’ படத்தை நன்றாக ரசித்து மகிழ்ந்தோம். நவாஸுதீன் எப்பவும் போல் கலக்கல். ஒட்டுமொத்தக் குழுவுமே அப்படித்தான் கலக்கியிருந்தது. திரைக்கதையை ரசித்தேன். அதுவும் கடைசியில் வரும் காட்சிகள் எழுத்தாற்றலின் உச்சம். இயக்குநருக்கு வாழ்த்துகள். தலைவருக்குள் இருக்கும் நடிகரையும், ஸ்டைல் சாம்ராட்டையும் வெளிக் கொணர்ந்திருந்தார். வாழ்த்துகள் சன் பிக்சர்ஸ்.

இவ்வாறு விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x