Published : 23 Jan 2019 08:31 PM
Last Updated : 23 Jan 2019 08:31 PM

‘இயக்குநர் ராஜுமுருகன் என்னை ‘உள்ளே’வைக்க முயற்சிக்கிறார்: யுகபாரதி ருசிகரம்

இயக்குநர் ராஜுமுருகன் என்னை ‘உள்ளே’வைக்க முயற்சிக்கிறார் என்று 'ஜிப்ஸி' விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கிண்டல் தொனியில் தெரிவித்தார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா, நடாசா சிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜிப்ஸி'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'Very Very Bad' பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் 'ஜிப்ஸி' படக்குழுவினர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:

இயக்குநர் ராஜு முருகனை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று முயற்சிக்கிறேன். ஆனால் அவரோ என்னை ‘உள்ளே’வைக்க வேண்டும் என்று முயற்சிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அது இந்த படத்தில் நடைபெறுகிறதா? அல்லது அடுத்து வரும்படங்களில் நடைபெறவிருக்கிறதா? என்று தெரியவில்லை. இந்த பாடலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயம் தான் படம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கும். அதையும் கடந்து இயக்குநர் ராஜு முருகனின் முந்தைய இரண்டு படங்களில்லாத காட்சிபடிமத்தை இந்த படத்தில் பார்க்கமுடியும்.

இந்த படத்தின் கதை, ஏறக்குறைய தமிழ் திரையுலகில் அனைத்து தயாரிப்பாளர்களாலும் கேட்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட கதை. அதனை பல தடைகளையும் கடந்து தயாரித்ததற்காகவும்,  இந்த படம் இனிமேல் எதிர்கொள்ளவிருக்கும் சிக்கலுக்காகவும், அதனை எதிர்கொள்ள தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதற்காகவும் தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கு படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். திட்டமிட்டதை விட கூடுதலான பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. அத்துடன் எங்களையெல்லாம் ஜாமீனில் எடுக்கவேண்டிய செலவும் இருக்கிறது.

இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காகநடிகர் ஜீவாவை பாராட்டுகிறேன். அவர் ஏற்கனவே 'ஈ', 'கற்றது தமிழ்' போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த வரிசையில் இந்த 'ஜிப்ஸி' படமும் அமையும். அவருடைய திரையுலக பயணத்தில் இந்த படம் முக்கியமான படமாக அமையும். அந்த படத்தில் அவர் கதைக்குள் பயணித்திருக்கிறார். அதற்காக தன்னை தயார்ப்படுத்திக் கொண்டவிதம் ஆச்சரியத்தை அளித்தது. அவரை ஆறு மாதம் தலைமுடி, தாடியை வளர்க்க வைத்து, முகபாவனையை மாற்றியமைத்து, இந்தியா முழுவதும் நடக்க வைத்து, குதிரையிடம் உதை வாங்க வைத்து.. இப்படி பல விஷயங்களை அவர் எதிர்கொண்டு, அற்புதமாக நடித்திருக்கிறார்.

‘ஜிப்ஸி’ யில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நீள் இந்தியாவின் குறுக்குவெட்டு தோற்றத்தைப் பார்க்கலாம். இதன் பின்னணியில் உள்ள அரசியல், அதிகாரம் எளிய மக்களை எப்படி வதைக்கிறது? என்பதையும் பார்க்க முடியும். அத்துடன் நாம் மனிதநேயத்தை நோக்கி நகர வேண்டியதன் கட்டாயச் சூழலையும் இந்த படம் உணர்த்தும். தேர்தலுக்கு முன் இந்த படம் வெளியாகவேண்டும்  என விரும்புகிறேன். வந்தால் ஆரோக்கியமான முறையில் மாற்றம் ஏற்படலாம் என்று நம்புகிறேன்.

இயக்குநர் ராஜுமுருகன் இந்த சமூகத்தில் நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுக்கும் எழுத்து போராளி. உண்மையான கலைஞனாக தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக போராடிக் கொண்டிருப்பவர். இந்த திரைத்துறையில் சமூக அரசியலையும், மக்கள் விடுதலையையும் பேசும் அவரை வாழ்த்துகிறேன்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் அவர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவருடைய இசையமைப்பில் வெளியான பாடல்களில் ஒரு நாடோடி மனப்பான்மை பரவியிருக்கும். இந்த படமும் ஒரு நாடோடியின் கதை என்பதால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணி அவரை இசையமைக்க கேட்டுக்கொண்டோம்.இந்த படத்தில் இடம் பெறும் பாடல்களின் சந்தத்திற்காக இசையமைக்காமல், இசையாலும், காதலாலும் நிரம்பி வழியக் கூடிய ஒரு நாடோடியின் வாழ்க்கைக்கு பொருத்தமான இசையை அவர் கொடுத்திருக்கிறார்

இவ்வாறு யுகபாரதி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x