Last Updated : 17 Jan, 2019 04:45 PM

 

Published : 17 Jan 2019 04:45 PM
Last Updated : 17 Jan 2019 04:45 PM

மாட்டுக்கார வேலனுக்கு49 வயது!

எம்ஜிஆர் 102-வது பிறந்த நாள் ஸ்பெஷல்

அப்பாவைக் கொலை செய்தவனை போலீஸில் சிக்கவைக்கத் துடிப்பவனை, தன் சாதுர்யத்தால் அவனுக்கு உதவுகிற படிக்காத மாட்டுக்கார வேலனின் கதை இது.

எத்தனையோ இயக்குநர்களின் படங்களில் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். எத்தனையோ படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. ஆனால் இயக்குநர் ப.நீலகண்டன் படங்கள் என்றால், படத்துக்கு பூஜை போடும்போதே, வெற்றிவிழாவை எங்கே வைத்துக்கொள்வது என்கிற டிஸ்கஷன் இருக்கிற அளவுக்கு நம்பிக்கையுடன் இருப்பாராம் எம்.ஜி.ஆர். மாட்டுக்கார வேலனின் இயக்குநரும் ப.நீலகண்டன்தான்!

ஜெயந்தி பிலிம்ஸ் தயாரிப்பில், ப.நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் இரட்டைவேடங்களில் நடித்த மாட்டுக்கார வேலன், எம்ஜிஆரின் டாப் டென் படங்களில், மிக முக்கியமான படம்.

நாகலிங்கத்தின் (அசோகன்) மகள் கமலா (லட்சுமி), தோழிகளுடன் காரில் வரும் போது, நடுவே மாடுகள் நிற்கின்றன. அவை வேலனின் மாடு. அப்போது ஏற்படும் தகராறை, அப்பாவிடம் சொல்லுகிறார். உடனே ஆளனுப்பி அடிக்கச் சொல்லுகிறார்.

அந்தச் சண்டையில் எல்லோரையும் அடித்துப் போடுகிறார் வேலன் (எம்ஜிஆர்). அவரது வீட்டுக்கு தீ வைக்கப்படுகிறது. அதில் இருந்து எம்ஜிஆரை, அசோகனின் மகன் சுந்தரம் (சோ) காப்பாற்றுகிறார். குடுமிக்கார வேலனை, கிராப்புக்கு மாற்றுகிறார். கோட்சூட் போட்டுவிடுகிறார். வக்கீல் சட்டநாதனை (வி.கே.ராமசாமி) சந்தித்து விவரம் சொல்லச் சொல்லுகிறார்.

இந்தநிலையில், வக்கீல் சட்டநாதனின் நண்பரின் மகன் ரகு (அதுவும் எம்ஜிஆர்) ஊரில் இருந்து வருவதாக தகவல் வருகிறது. அதில் உள்ள புகைப்படத்தைக் காட்டி, இதுதான் மாப்பிள்ளை என்கிறார். அவரின் மகள் லலிதா (ஜெயலலிதா) போட்டோ பார்த்து நாணுகிறார். மகிழ்கிறார்.

அதையடுத்து, மாட்டுக்கார வேலன் கோட்டும்சூட்டுமாக புகார் கொடுக்க வர, மாப்பிள்ளை வந்தாச்சு என்று ஏக வரவேற்பு அவருக்கு! அவரை பேசவே விடவில்லை யாரும். அங்கேயே தங்கியிருக்கும் வேளையில், ஊரிலிருந்து வக்கீல் ரகு வர, அந்த ரகுவைப் பார்த்து மாட்டுக்கார வேலன் என்று அடி பின்னியெடுக்க, அந்த காயங்களுடன் விகே.ராமசாமி வீட்டுக்கு வருகிறார். அப்போதுதான் குழப்படிகளுக்கு காரணம் புரிகிறது வேலனுக்கு.

இதன் பிறகு இரண்டு எம்ஜிஆரும் சந்தித்துக்கொள்கிறார்கள். விவரங்கள் புரிகின்றன. இருவரும் அங்கேயே இருக்கிறார்கள். வக்கீல் எம்ஜிஆரும் லட்சுமியும் சந்தித்துக்கொள்கிறார்கள். காதல் மலர்கிறது. இங்கே, வேலன் எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் காதல் பூக்கிறது.

இந்த நிலையில், எம்ஜிஆரையும் லட்சுமியையும் ஜெயலலிதா பார்த்துவிடுகிறார். கொந்தளித்து அழுது புலம்பி வேலனிடம் முறையிடுகிறார். அப்போது அங்கே வரும் வக்கீல் எம்ஜிஆர், உண்மையையெல்லாம் சொல்லுகிறார். இதில் ஆத்திரமடைந்த விகே.ராமசாமி, வேலனை அடித்துத் துரத்துகிறார்.

அப்போது, ‘நீ என் மகளைக் கல்யாணம் செஞ்சுக்கலைன்னாலும் பரவாயில்ல. ஆனா நாகலிங்கத்தின் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காதே. ஏன்னா, உங்க அப்பாவைக் கொன்னதே நாகலிங்கம்தான்’ என்று உண்மையைச் சொல்லுகிறார் விகேஆர்.

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த எம்ஜிஆர், அசோகனைப் பார்க்கப் போகிறார். அங்கே மாட்டிக்கொள்கிறார். ‘ஆதாரத்தைக் கொடு. இல்லேன்னா ரகுவைக் கொன்னுருவேன்’ என சொல்ல, நேராக வருகிறார். அப்போது அவரை சுட குறி வைக்கிறார் அசோகன். அங்கே வரும் வேலன், விகேஆரை டம்மி துப்பாக்கிக் கொண்டு சுட்டுவிட்டு, அவரைத் தூக்கிச் செல்கிறார்.

விகேஆர் இறந்துவிட்டதாக நம்புகின்றனர். ஆனால் அவரைக் காப்பாற்ற மாட்டுக்கார வேலனின் ஐடியா இது எனத் தெரிகிறது. இந்த நிலையில், விகேஆரிடம் ஒரு ஃபைலில், ரகசியக் குறிப்பு இருக்கிறது. அந்தக் குறிப்பைக் கொண்டு எம்ஜிஆர், ரகசியம் அறிகிறார். எம்ஜிஆரின் வீட்டில் உள்ள ஆளுயரக் கடிகாரத்திற்குள், ஒரு டைரி இருப்பதைத் தெரிந்துகொள்கிறார். இதை ஒட்டுக்கேட்டதை அடுத்து, அசோகன், அந்த டைரியைக் கைப்பற்றுகிறார்.

பிறகு அசோகனிடம் இருந்து எம்ஜிஆர், டைரியைக் கைப்பற்றி விகேஆரிடம் ஒப்படைக்கிறார். இதனிடையே விகேஆர் மனைவி எஸ்.வரலட்சுமியை பிடித்து வருகிறார் அசோகன். டைரியக் கொடுத்தா எல்லாரையும் விட்டுடுறேன் என்கிறார். டைரி கொடுக்கப்படுகிறது. ஆனால் விடவில்லை. அங்கே, எல்லாரும் மாட்டிக்கொண்டிருக்க, மாட்டுக்கார வேலன் உள்ளே புகுந்து, எல்லோரையும் காப்பாற்றுகிறார். போலீஸ் வருகிறது.

பிறகென்ன... படமும் முடிகிறது. உண்மையான டைரி, அசோகன் கைது, இரண்டு எம்ஜிஆரும் தன் காதலியருடன் இணைகிறார்கள். வணக்கம் கார்டு போடுகிறார்கள்.

ஜகஜகவென கதை ஓடிக்கொண்டிருப்பதைக் கவனித்தீர்கள்தானே. இதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா என்று பின்னாளில், வெற்றிக்கான ரகசியமாகக் கண்டறியப்பட்டது.

சத்தியம் நீயே, தர்மத்தாயே என்ற பாடலுடன் படம் தொடங்கும். பிறகு ஒரு பக்கம் பாக்குறா, பட்டிக்காடா பட்டணமா, பூவைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா?, தொட்டுக்கொள்ளவா தொடுத்துக்கொள்ளவா என்று எல்லாப் பாடல்களுமே பாலும்தேனுமாக இனிக்கும். கே.வி.மகாதேவன் இசையில் பாட்டெல்லாம் தனி ரகம். தனிச்சுவை.

வில்லனுக்குப் பெயர் நாகலிங்கம். வக்கீலின் பெயர் சட்டநாதன். ஜெயலலிதாவின் பெயர் லலிதா. சோவின் நகைச்சுவை, சிரிக்கவும் ரசிக்கவும் வைக்கும். பொதுவாக எம்ஜிஆர் படங்களாகட்டும், தமிழ் சினிமாவின் டபுள் ஆக்ட் சப்ஜெக்ட்டுகளாகட்டும்... இந்த டபுள் ஆக்ட்... அண்ணன் தம்பி என்று காட்டுவார்கள். இதில் ஆறுதல்... அந்த எம்ஜிஆர் யாரோ, இந்த எம்ஜிஆர் யாரோ. அப்படிக் காட்டியிருப்பார்கள்.

ஜெயலலிதா, லட்சுமி என இருநாயகியர். ஆனாலும் இருவருக்குமே பெரிய வேலையெல்லாம் இல்லை. இதில் வக்கீல் எம்ஜிஆர், ஜெயலலிதாவைப் பார்த்து, ‘நீ என் தங்கச்சி மாதிரி. நீ காதலிச்சது வேலனைத்தான்’ என்று சொல்லும்போதே, அந்தக் காலத்திலேயே தியேட்டரில் வெடித்துச் சிரித்தார்கள்.

படத்தின் ஒளிப்பதிவு, வண்ணம், எடிட்டிங் எல்லாமே பக்காவாக இருக்கும். ஜெயலலிதா வீடு ஒரு செட், அசோகனின் வீடு ஒரு செட், அந்த கொள்ளைக்கூட்ட ரகசிய பங்களா ஒரு செட்... அவ்வளவுதான். அநேகமாக, ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்திருப்பார்கள். கோர்ட்டுக்கும் மாட்டுக்குமாக எம்ஜிஆர்கள் மாறி மாறி பதில் சொல்லும் இடம் செம. சோவின் காமெடி அருமை. அவர் லேடி வேஷம் போட்டுக்கொண்டு கொடுக்கிற அலப்பறை சூப்பர். 

மேலும் எம்ஜிஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், சோ, சச்சு, விகேஆர், எஸ்.வரலட்சுமி, எஸ்.என்.லட்சுமி அவ்வளவுதான் படத்தின் கதாபாத்திரங்களே! அதிலும் சச்சுவை, உளவு பார்க்கும் போலீஸாக கடைசியில் சொல்லுவது அசத்தல்.

ஆனாலும், எடுத்துக்கொண்ட கதையும் கதைக்குத் தக்கதான திரைக்கதையும் ஏ.எல்.நாராயணனின் அற்புதமான வசனங்களும் மாட்டைக் கட்டிப் போட்டதோ இல்லையோ... படம் பார்த்த நம்மைக் கட்டித்தான் போட்டன!

மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மாட்டுக்கார வேலன், 1970ம் ஆண்டு, ஜனவரி 14ம் தேதி பொங்கல் திருநாளையொட்டி ரிலீசானது என்பதில்தான் எவ்வளவு பொருத்தம் பாருங்கள். படம் வெளியாகி 49 வருடங்களாகிவிட்டன. அடுத்த வருடம் மாட்டுக்கார வேலனுக்கு ஐம்பது வயது. 

எம்ஜிஆரின் படங்களில், நல்ல தரமான, சிறப்பான படங்களின் பட்டியலொன்றை எடுத்தால், அதில் பட்டிதொட்டியெங்கும் மெகா ஹிட்டடித்த மாட்டுக்கார வேலனுக்கு சரியான இடம் உண்டு. அதைவிட முக்கியமாக, எம்ஜிஆருக்கு மக்கள் மனங்களில் நீங்காத இடம் எப்போதும் உண்டு! அப்படி இருப்பதற்கு அஸ்திவாரத்தைப் பலப்படுத்திய படங்களில் மாட்டுக்கார வேலனும் ஒருவன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x