Published : 21 Jan 2019 01:56 PM
Last Updated : 21 Jan 2019 01:56 PM

‘சிந்துபாத்’ டப்பிங்கைத் தொடங்கிய விஜய் சேதுபதி

‘சிந்துபாத்’ படத்துக்கான டப்பிங்கைத் தொடங்கிவிட்டார் விஜய் சேதுபதி.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ என விஜய் சேதுபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் அருண்குமார். இதில், ‘சேதுபதி’ படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து அருண்குமார் பல்வேறு நாயகர்களைச் சந்தித்து கதை சொன்னார்.

இறுதியாக, மூன்றாவது முறையாக அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பது உறுதியானது. அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இப்படத்தை, ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 16-ம் தேதி விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. ‘சிந்துபாத்’ என்று படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் பகுதிகள் மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று (ஜனவரி 20) முதல் ‘சிந்துபாத்’ படத்துக்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளார் விஜய் சேதுபதி. இந்தத் தகவலை, அவரே புகைப்படத்துடன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் ஆட்டோ டிரைவராக நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x