Published : 14 Jan 2019 12:31 PM
Last Updated : 14 Jan 2019 12:31 PM

பேட்ட vs ’விஸ்வாசம்’: தொடரும் ஹவுஸ்ஃபுல் காட்சிகள் - திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி

'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களுக்குமே தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகி வருவதால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

ஜனவரி 10-ம் தேதி 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. முதல் முறையாக தமிழக பாக்ஸ் ஆபிஸில் ரஜினி - அஜித் படங்களின் நேரடி மோதலால் விநியோகஸ்தர்கள் தயங்கினார்கள்.

இரண்டு நடிகர்களின் ரசிகர்களுமே சமூக வலைதளத்தில் கடுமையாக போட்டியிட்டுக் கொண்டனர். இரண்டு படங்களும் வெளியாகி 4 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இரண்டுக்குமே தொடர்ச்சியாக ஹவுஸ்ஃபுல் காட்சிகளாகி வருகின்றன. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் கடும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

வெளிநாடு, சென்னை ஆகிய இடங்களில் 'பேட்ட' படத்தின் வசூல் அமோகமாக இருக்கிறது. அனைத்து மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது 'பேட்ட'. இதர மாநிலங்களில் வசூல் நிலவரம் குறித்து விசாரித்த போது, இந்தி - தெலுங்கு ஆகிய மொழிகளில் படும் தோல்வியைத் தழுவியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகாவில் படும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் 'பேட்ட' படத்தின் வசூல் 2 மில்லியன் டாலர்களை நெருங்கியுள்ளது. இதோடு வெளியான அனைத்து படங்களின் வசூலைத் தாண்டி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கனடா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

சென்னையைத் தாண்டி இதர தமிழகத்தின் கிராமப்புற பகுதிகளில் 'விஸ்வாசம்' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் குடும்பத்துடன் வந்து படம் பார்க்கத் தொடங்கியுள்ளதாக, திரையரங்க உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்தின் வசூலை எடுத்துக் கொண்டால், 'பேட்ட' படத்தை விட 'விஸ்வாசம்' தான் முதலிடத்தில் உள்ளது.

இரண்டில் எது வெற்றி என்பது, விடுமுறை நாட்கள் முடிந்தவுடன் வரும் கூட்டத்தை வைத்து தான் முடிவு செய்ய முடியும். அதுவரை இரண்டு படங்களுக்குமே டிக்கெட் புக்கிங் அருமையாக இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டு தொடக்கமாக திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைத்து தரப்புக்குமே லாபகரமான ஆண்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இரண்டு படங்களின் வசூல் நிலவரங்கள் குறித்து சில திரையரங்க உரிமையாளர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ்: வெளியான நான்கு நாட்கள் கழித்து, பேட்ட, விஸ்வாசம் இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பது தெளிவாகிறது. மொத்த சினிமாத்துறையும் இந்தப் படங்களின் வசூல் குறித்து மகிழ்ச்சியாக உள்ளது. கிடைக்கும் ஒவ்வொரு தகவலையும் எடுத்து அலசி ஆராய்ந்து, எந்தப் படம் அதிக வசூல் என்று கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, இரண்டு படங்களையும் பாருங்கள். பிடித்த படத்தை மீண்டும் பாருங்கள். பொங்கல் விடுமுறையை மகிழ்ச்சியுடன் செலவிடுங்கள். 

ராம் திரையரங்கம்: டால்பி அட்மாஸ் இருக்கும் ராம் திரையில் இரண்டு படங்களுமே அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன என்பதை நான் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். பேட்ட, விஸ்வாசம் இரண்டுமே எங்களுக்கு வெற்றிப் படங்கள் தான். 

ரோகிணி திரையரங்க உரிமையாளர் நிகிலேஷ் சூர்யா: கடந்த 30 வருடங்களில் முதன்முறையாக எங்கள் திரையரங்கில் சிறப்பான 4 நாட்கள் வசூலை நாங்கள் பார்த்தோம். விஸ்வாசம் மற்றும் பேட்ட என இரண்டு ப்ளாக்பஸ்டர் படங்களும், ரோஹிணி திரையரங்கில், பாகுபலி 2 படத்தின் முதல் 4 நாள் வசூலை முந்தியுள்ளன. பிரம்மாண்டமான கொண்டாட்டமான பொங்கல் வாரத்தை எதிர்நோக்கியுள்ளோம். 

ஜி.கே. சினிமாஸ் உரிமையாளர் ரூபன்: தல மற்றும் தலைவர் இருவரும் பாக்ஸ் ஆபிஸை ஆண்டு கொண்டிருக்கின்றனர். ஒரு திரையரங்க உரிமையாளராக இரண்டு படங்களுமே அற்புதமாக ஓடிக்கொண்டிருப்பது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. நல்ல கதைக்களம் இருந்தால் இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் வெற்றி பெறலாம் என்பதை திரைத்துறைக்கு இந்தப் படங்கள் எடுத்துக்காட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x