Published : 17 Jan 2019 11:45 AM
Last Updated : 17 Jan 2019 11:45 AM

சீட் பெல்ட், ஹெல்மெட்: விஸ்வாசம் படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு

படத்தின் காட்சிகளில் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிந்து நடித்திருப்பதற்கு 'விஸ்வாசம்' படக்குழுவினருக்கு காவல் துணை ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, ரோபோ ஷங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அமோக வசூல் செய்து வருகிறது 'விஸ்வாசம்'. இப்படத்தில் பைக்கில் வரும் காட்சிகளில் எல்லாம் ஹெல்மெட், காரில் வரும் காட்சிகளில் எல்லாம் சீட் பெல்ட் போட்டு நடித்திருப்பார் அஜித். இதனை சென்னை காவல் துணை ஆணையர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துணை ஆணையர் அர்ஜுன் சரவணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''சமீபத்தில் வெளியான நடிகர் அஜித் குமார் நடித்த விஸ்வாசம் படத்தினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் கதை, பாடல்,நடிப்பு, சண்டைகாட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கு சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது .

* படத்தில் கதாநாயகன் , கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மட் அணிந்து செல்வது.

* கதாநாயகன் கார் ஒட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. தனது மகளின் உயிரைக் காப்பாற்றச் செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது.

* பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி நடிக்கும் போது அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவா.

'விஸ்வாசம்' படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் இயக்குநர் சிவா மற்றம் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்'' .

இவ்வாறு சரவணன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x