Published : 09 Sep 2014 03:50 PM
Last Updated : 09 Sep 2014 03:50 PM

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மலுக்குத் தடை: ஐசிசி அதிரடி

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளும் முறையற்றதாக இருக்கிறது என்று அவர் பந்து வீசத் தடை விதித்தது ஐசிசி.

ஐசிசி. பந்து வீச்சுத் தரவரிசையில் தற்போது முதலிடம் பெற்றுள்ள சயீத் அஜ்மல் மீது இலங்கை தொடரின் போது புகார் எழுந்தது. இதனையடுத்து பிரிஸ்பனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் அஜ்மல் பந்து வீச்சின் மீது பயோ-மெக்கானிக்கல் சோதனை நடத்தப்பட்டது.

இதனையடுத்து சோதனை முடிவுகளை தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்த போது அவர் வீசும் அனைத்துப் பந்துகளும் த்ரோ என்று முடிவு கட்டிய ஐசிசி உடனடியாக அவர் பந்து வீசத் தடை விதித்தது.

ஐசிசி விதிகளின் படி பந்து வீசும்போது 15 டிகிரி வரை பவுலரின் முழங்கை மடங்கலாம் ஆனால் அஜ்மல் வீசும் அனைத்துப் பந்துகளின் போதும் இந்த விதிமுறை மீறப்பட்டு த்ரோ செய்வதாக ஐசிசி முடிவு எடுத்துள்ளது.

ஒருநாள், டி20, மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என்று இவர் கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து வடிவங்களிலிம் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அஜ்மல் 178 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 111 ஆட்டங்களில் 183 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

ஐசிசி-இன் புதிய நிர்வாகம் தற்போது முறையான பந்து வீச்சு மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. ஏனெனில் ஐபிஎல் உள்ளிட்ட பணமழை கிரிக்கெட் பிரபலமடைந்துள்ள நிலையில் இளைஞர்கள் எப்படியாவது அணியில் நுழைய முற்படுகின்றனர். இதனால் பந்துகளை முறையாக வீசாமல் த்ரோ செய்வதும் பல கிரிக்கெட் தொடர்களில் பல நாடுகளில் நிகழ்ந்து வருகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதினால் தற்போது சயீத் அஜ்மலும் சிக்கியுள்ளார்.ஆனால் ஆஸ்திரேலியா அணி துபாயில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை ஆடும் தருணத்தில் இந்தத் தடை உத்தரவு வந்திருப்பது நெருடலாக உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

அஜ்மல் தனது பந்து வீச்சு ஆக்சனை சரி செய்து கொண்டு எப்போது வேண்டுமானாலும் மறுமதிப்பீடு கோரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x