Published : 10 Dec 2018 01:49 PM
Last Updated : 10 Dec 2018 01:49 PM

96 படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் த்ரிஷா?

தெலுங்கில் ரீமேக்காகவுள்ள '96' படத்திலும் த்ரிஷாவை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

படத்தைப் பார்த்த அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தார்கள். பலரின் பள்ளிக்கால காதல் நினைவுகளைக் கிளறிவிட்டுள்ளது இப்படம். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளார் பிரபல தயாரிப்பாளரான தில் ராஜு. தெலுங்கிலும் பிரேம் குமாரே இயக்கவும், அல்லு அர்ஜுன் அல்லது நானி நாயகனாக நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் யார் நாயகன் என்பது முடிவாகிவிட்டதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிகிறது.

மேலும், த்ரிஷாவின் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. தெலுங்கிலும் அவர் முன்னணி நாயகி என்பதால், அவரே நடித்தால் படத்துக்கு எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று தயாரிப்பு நிறுவனம் கருதியுள்ளது. இதற்கு த்ரிஷாவும் ஓகே சொல்வார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

'96' படத்தைத் தொடர்ந்து ரஜினி ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள 'பேட்ட' பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x