Published : 24 Dec 2018 03:59 PM
Last Updated : 24 Dec 2018 03:59 PM

இன்றுமுதல் புதிய சீரியலுடன் களமிறங்கும் குஷ்பூ

குஷ்பூ நடிப்பில் ‘லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்ற புதிய சீரியல் இன்றுமுதல் ஒளிபரப்பாக இருக்கிறது.

சன் டிவியில் நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவந்த ‘நந்தினி’ சீரியல், கடந்த சனிக்கிழமையுடன் (டிசம்பர் 22) முடிவடைந்தது. இந்தி சீரியலான ‘நாகினி’ தான் இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சீரியல். அதைத் தொடர்ந்து ‘நந்தினி’ சீரியலும் அதிக பட்ஜெட்டில் தயாரானது.

குஷ்பூ தயாரித்த இந்த சீரியலுக்கு, சுந்தர்.சி கதை எழுதினார். ராஜ்கபூர் தயாரித்த இந்த சீரியலில் நித்யா ராமன் ஹீரோயினாக நடித்தார். சிறப்புத் தோற்றத்தில் குஷ்பூவும் இந்த சீரியலில் நடித்தார். ஃபேண்டஸி சீரியலான இது, சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. நீண்ட நாட்களாக ஒளிபரப்பாகிவந்த இந்த சீரியல், தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த நிலையில், ‘லக்‌ஷ்மி ஸ்டோர்ஸ்’ என்ற புதிய சீரியலுடன் இன்றுமுதல் களமிறங்குகிறார் குஷ்பூ. பிரதான கதாபாத்திரத்தில் குஷ்பூ நடிக்க, சுதா சந்திரன், டெல்லி கணேஷ், நக்‌ஷத்ரா, சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு சன் டிவியில் இந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது. கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு சீரியலில் குஷ்பூ நடித்துள்ளதால், குஷ்பூ ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x